'1,500 டன் தேர்; திருப்பாவை விமானம்' ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சிறப்பம்சங்கள்!
ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இதில், திருப்பாற்கடல், வைகுண்டப் பெருமாள் உட்பட அனைத்து பெருமாள்களையும் காணலாம்.
ஆண்டாள் சன்னதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், ’முத்துப்பந்தல்’ என அழைக்கப்படுகிறது. இதில் வாழை மரம், மாவிலை மற்றும் பூச்செண்டுகளும் இருக்கின்றன. மேலே திருமாலின் பாதம் இருக்கிறது.
1,500 டன் எடை கொண்ட கோயில் தேரில் மிகச்சிறந்த தொழில்நுட்பத்துடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சாலி வாகன சகாப்தம் கொல்லம் 1,025 வருஷம், சௌமிய வருடம் ஆவணி 13 குருவாரம் என்று எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து இதன் பழமை நம்மை வியக்க வைக்கிறது.
தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில், ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன. இதற்கு, ’திருப்பாவை விமானம்’ என்றே பெயர். ஆண்டாளை தரிசிப்பவர்கள் இந்த விமானத்தை அவசியம் தரிசிக்க வேண்டும்.
உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க!மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!
ஆண்டாளுக்கு ’சூடிக்கொடுத்த நாச்சியார்’ என்ற சிறப்புப் பெயர் இத்திருத்தலத்தில் தான் கிடைக்கப்பெற்றது. சக்கரத்தாழ்வார் சந்நிதி மிகப்புராதனமானது பஞ்சலோகத்தால் ஆன விக்ரகமே விக்ரகமாக விளங்குகிறது.
மகாவிஷ்ணுவை வழிபடுவதில் சிறந்த பக்தர்களாக இருப்பவர்கள் ஆழ்வார்கள். அந்த ஆழ்வார்களில் பெரியாழ்வார்,ஸ்ரீஆண்டாள் எனப்படும் நாச்சியாரம்மன் என இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.
கார்த்திகை மாதத்தில் வரும் கவுசிக ஏகாதசியன்று ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் வடபத்ரசாயி சன்னதியில் உள்ள கோபால விலாசத்தில் எழுந்தருள்கின்றனர். அப்போது இம்மூவருக்கும் 108 கம்பளிகள் போர்த்தப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் மற்றும் இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர், காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம்.
கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமானார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.
ஆண்டாளக்கு சாத்தப்படும் மாலையில் செவ்வந்தி (மஞ்சள்), விருட்சி (இட்லிப்பூ) (சிவப்பு), சம்மங்கி (வெள்ளை), மருள் (பச்சை), கதிர் பச்சைப்பூ (பச்சை) ஆகிய மலர்களும், துளசியும் பிரதானமாக சேர்க்கப்பட்டு மாலை செய்யப்படுகிறது.