தமிழகம் இன்று : மதுரை அதிகாரிகளின் பாரபட்சம், நாகை உருவாகி 30 ஆண்டுகள் - உள்ளூர் செய்திகள்

பாரபட்சம் காட்டும் அதிகாரிகள்!

மதுரை, கொட்டாம்பட்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் ஏழைகளின் வீட்டை அகற்றினர். ஆனால், பணக்காரர்களின் வீட்டை அகற்றவில்லை என சமூக ஆர்வலர்களும் மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். எதுக்கு இந்த பாரபட்சம்?!

மரத்தில் ஆணி அடிக்கும் நிறுவனங்கள்!

திண்டுக்கல், வத்தலக்குண்டு சாலையோரங்களில் உள்ள மரங்களில் வர்த்தக நிறுவனங்கள் ஆணி அடிப்பதால் மரங்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மரங்களில் ஆணி அடிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பாங்களா?

பசுமையாக மாறும் குக்கிராமங்கள்!

திண்டுக்கல், சுக்காம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள குக்கிராமங்களில் ஊராட்சி செயலாளரான குமரவேலு 2017-ம் ஆண்டு முதல் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களைப் பயன்படுத்தி மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இதுவரை சுமார் 35,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சூப்பர்!

தி.மு.க-வில் இணைந்த அ.தி.மு.க-வினர்!

விருதுநகர், மல்லாங்கிணறில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் முத்துசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் சிவானந்த அருள்மொழிவர்மன், முன்னாள் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் தி.மு.க-வில் இணைந்தனர். ரைட்டு!

தடகளப் போட்டியில் சாதித்த எஸ்.ஐ!

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநில அளவில் போட்டிகள் நடைபெற்றன. இதில் ராஜபாளையம் மொட்டமலை சிறப்பு அதிரடிப்படை எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி 5,000 மீ வேக நடைப் போட்டியில் தங்கம் மற்றும் 1,500 மீ தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். வாழ்த்துகள்!

பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடிய கிராம மக்கள்!

சீர்காழி அருகே  தற்காஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு மனைவி கமலத்தம்மாள் (100). பாட்டியின் நூறாவது பிறந்தநாளை கிராம மக்கள் கோலாகலமாகக் கொண்டாடினர். சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். வாழ்த்துகள் பாட்டி!

விடுப்பு தராததால் விஷம் குடித்த பணியாளர்!

தேனி, கம்பம் நகராட்சியில் மணிகண்டன் என்ற தூய்மைப் பணியாளர், மேற்பார்வையாளர் ஜோதி முருகனிடம் விடுப்பு கேட்டுள்ளார். ஜோதி முருகன் இதனை மறுக்கவே, மனமுடைந்த மணிகண்டன் விஷம் குடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களின் போராட்டத்தையடுத்து ஜோதி முருகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். சோகம்!

சாதிப்பெயர் சொல்லி மிரட்டிய தலைவர்!

திருச்சி, அல்லூர் சிவன் கோயில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில், அல்லூர் மேலச்சேரியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் கேள்வி கேட்டபோது ஊராட்சி மன்றத் தலைவர் விஜயேந்திரன் அவரை சாதிப்பெயர் சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் எப்போ மாறும்!

புத்தக வாசிப்பில் கலக்கும் சிறுமி!

மதுரையைச் சேர்ந்த நெரியா மோனிகா என்ற 9 வயது சிறுமி, சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுவரை, 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்து முடித்த இவர், 74 புத்தங்களுக்கு ரிவ்யூ கொடுத்துள்ளார். புத்தகத்தில் உள்ள பாசிட்டிவ் தகவல்கள், புத்தகத்தின் சாராம்சம் போன்றவற்றை `jar of review’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் வருகிறார். சூப்பர்!

நாகையில் பனை விதைகள்!

நாகை மாவட்டம் உருவாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதையொட்டி வேதாரண்யம் அருகே நாலுவேதபதி கிராமத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அடிபொலி!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா… செக் பண்ண வேண்டிய 7 விஷயங்கள்!

Read More