கர்ப்பிணியிடம் மனு வாங்கிய முதல்வர்!
செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தார். இவரைச் சந்திக்க சாரதா என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் நின்றுள்ளார். இதனைப் பார்த்த முதல்வர் வாகனத்தை நிறுத்தி சாரதாவிடமிருந்து மனுவைப் பெற்றுக் கொண்டார். சாரதா கலப்பு திருமணம் செய்து கொண்டவர். இவருடைய கணவர் வேலை இல்லாமல் தவித்து வருகிறார். உதவி செய்யுங்க சீக்கிரம்!
ரூ.300 கோடி நிதி... பார்க்கிங் இல்லை!
கோவை, அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில், 'பார்க்கிங்' வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்டடத்துக்கு ரூ.300.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும், பார்க்கிங் வசதி இல்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரைட்டு!
`லோகோ’வுக்கு ரூ.25,000 பரிசு!
'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் மாநில அளவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக `லோகோ’ உருவாக்கும் போட்டி நடக்க உள்ளது. மக்கள் உருவாக்கிய லோகோவை 24-ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் illamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லெட்ஸ் ஸ்டார்ட்!
எங்கும் போஸ்டர்கள் மயம்!
விருதுநகரில் அரசு கட்டடங்கள், சாலைகளில் உள்ள பாலங்கள் என எங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் அரசியல் கட்சியினர் உட்பட பலரும் போஸ்டர்களை ஒட்டி வருவதாக மக்கள் குமுறுகிறார்கள். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?!
கைது செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்!
வண்டலூர் நெடுங்குன்றத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, அப்பகுதியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். இவர் மீது கஞ்சா விற்பனை செய்தது உட்பட மூன்று வழக்குகள் உள்ளன. காவல் துறையினர் இவரை தேடி வந்த நிலையில், வார்டு உறுப்பினராக பதவியேற்பதை அறிந்த அதிகாரிகள், அவரைக் கைது செய்துள்ளனர். நேரம்!
சொத்துகளை விற்றாவது மருத்துவமனை அமைப்பேன்!
அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக இராஜாராமன் 206 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இராஜாராமன் பதவியேற்பின்போது, "எனது சொத்துக்களை விற்றாவது இந்த ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை அமைத்துத் தருவேன்" என்று உறுதி கொடுத்திருக்கிறார்.