குன்றத்தூர் மருத்துவமனை அவலம்!
குன்றத்தூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு எக்ஸ்-ரே இயந்திரம் பழுது, குழந்தை நல மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் இல்லாதது என பல பிரச்னைகளால் நோயாளிகள் சரியாக சிகிச்சைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். நோயாளிகள் பாவம்!
ஒட்டன்சத்திரத்தில் சிரமப்படும் பயணிகள்!
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பொதுமக்கள் திறந்த வெளியில் நின்று, வெளியூர் செல்லும் பஸ் ஏறுகின்றனர். மழை, வெயில் காலங்களில் அதிகமாக சிரமப்படுகின்றனர். இதனால், அப்பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் கவனத்துக்கு!
காட்சிபொருளாக டிராஃபிக் சிக்னல்கள்!
விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகரம் என பல பகுதிகளில் சிக்னல்கள் சரியாக செயல்படாததால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. போக்குவரத்து போலீஸார் குறைவாக இருப்பதால், இந்த நெரிசலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. சிக்னல்கள் சீரமைக்கப்படுமா?
முதல்வருக்குக் கைகொடுக்க ஆசை!
கிருஷ்ணகிரி, நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், திருமூர்த்தி. காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய முதல்வர் ஸ்டாலின், திருமூர்த்தி பாடலில் உருவான பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ``முதல்வரை நேரில் பார்த்து அவருக்கு கை கொடுக்க வேண்டும்” என தனது ஆசையை திருமூர்த்தி தெரிவித்துள்ளார். முதல்வரின் கவனத்துக்கு!
பள்ளம் தோண்டியபோது கிடைத்த கல்வெட்டு!
திருவள்ளூர், பொன்னேரி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காகப் பள்ளம் தோண்டியபோது, பழங்கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பொன்னேரி, ஆரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கிராமங்கள் பூமியில் புதையுண்டு இருக்கலாம் எனவும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ம்ம்ம்!