தமிழகம் இன்று : விருந்து வைத்த கவுன்சிலர் முதல் `வலிமை’ சிமெண்ட் வரை - உள்ளூர் செய்திகள்

Scribbled Underline

சென்னையில் உபயோகமற்ற கழிப்பறைகள்!

சென்னையில் நடைபாதை அசுத்தங்களைத் தடுக்கும் வகையில் ஆங்காங்கே கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்த ஆட்களை வைத்து இந்த கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. தற்போது ஒப்பந்த காலம் முடிவடைந்ததால், பல இடங்களில் அவை காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கின்றன. மாநகராட்சி கவனத்துக்கு!

தண்ணீரில் தத்தளிக்கும் அரசுப் பள்ளி!

மதுரை, கருங்காலக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு புலிப்பட்டி - சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாய் மற்றும் கிளை கால்வாய் செல்கிறது. இக்கால்வாயை அதிகாரிகள் சரியாகப் பராமரிக்காததால் சிதிலமடைந்து தண்ணீர் வெளியேறி, வகுப்பறைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

கோவை விவசாயிகளே கவனம்!

கோவை வேளாண் இணை இயக்குநர் சித்ராதேவி, ``கோவையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 33 மி.மீ பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், கனமழை காலத்தில் பலத்த காற்று வீசலாம். எனவே, காற்றிலிருந்து விவசாயிகள் தென்னை மரங்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ம்ம்ம்!

பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள்!

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்கத் தொடங்கியுள்ளன. இவை பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் வகையில் உள்ளன. செங்காந்தள் மலர்கள் எனப்படும் கண்வலிக்கிழங்கின் விதைகள் மருத்துவ குணங்கள் நிரம்பியது.

விருந்து வைத்த கவுன்சிலர்!

விழுப்புரம், வானுார் ஒன்றியம், கரசானுார் 12-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கணேசன் வெற்றி பெற்றார். அவரது மனைவி தமிழரசி ஊராட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இருவரையும் வெற்றி பெற வைத்த அப்பகுதி மக்களுக்கு கணேசன் பிரியாணி விருந்து வைத்தார். ஆஹான்!

நீர் இருப்பு அதிகரிப்பு!

வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்னரே, தமிழகத்தில் உள்ள 90 அணைகளில், 73% நீர் நிரம்பியிருக்கிறது. செப்டம்பர் மாத இறுதியில், அணைகளில் 60% மட்டுமே நீர் இருப்பு இருந்தது. அக்டோபரில் பல மாவட்டங்களின் கனமழை கொட்டித் தீர்த்ததால், நீர் இருப்பு 73 சதவீதமாக அதிகரித்துள்ளது. நல்லது!

சுவாமியை விரைவில் தரிசிக்கலாம்!

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரிகள், ``தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற திருச்சி, மதுரை பகுதிகளில் உள்ள கோயில்கள் உட்பட 48 கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் சுவாமியை விரைவில் தரிசிக்கலாம்” என்றும் ``பெரிய கோயில்களில் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

வலிமை சிமெண்ட்!

தமிழக அரசின் 'டான்செம்' நிறுவனம், 'வலிமை' என்ற பெயரில், புதிய சிமென்டை ஓரிரு வாரங்களில் அறிமுகப்படுத்த இருக்கிறது. குறைந்த விலையில், நிறைந்த தரத்தில் வலிமை சிமென்ட், முதல் கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30,000 டன் என்ற அளவில் விற்கப்பட இருக்கிறது.

புதுச்சேரி இளைஞரின் புதிய முயற்சி!

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழந்தவர்கள் பயன்படுத்திய வீட்டுப் பொருட்களை புதுச்சேரியைச் சேர்ந்த அய்யனார் என்ற இளைஞர் தேடித் தேடி சேகரித்து வருகிறார். ஆண்டுக்கொரு முறை மாணவர்களுக்காகக் காட்சிப்படுத்துகிறார். சூப்பர்!

டோக்கனுக்கு பதில் க்யூ ஆர் கோடு!

கொரோனா பெருந்தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு டோக்கனுக்குப் பதிலாக க்யூ ஆர் கோடு பொறிக்கப்பட்ட காகித டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சிறப்பு!

T20 World Cup: இந்தியா சறுக்கியது எங்கே… #IndVsPak போட்டியின் 4 முக்கிய தருணங்கள்!