Red Section Separator

தமிழகம் இன்று: தொடர்பு எல்லைக்கு வெளியே கோவை போலீஸ்; நீலகிரி வாட்ஸ்அப் உதவி - உள்ளூர் செய்திகள்!

தொடர்பு எல்லைக்கு வெளியே காவல்துறை!

கோவை, வால்பாறை உட்கோட்டத்தில் 7 காவல் நிலையங்கள் உள்ளன. பொதுமக்கள் காவல்துறையினரை தொடர்புகொள்ள `லேண்ட் லைன்’ இணைப்பு உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இந்த காவல் நிலையங்களில் `லேண்ட் லைன்’ செயல்படாமல் உள்ளன. சில சமயங்களில் `ரிங்’ சப்தம் கேட்டும் அதிகாரிகள் எடுப்பதில்லையாம். ரைட்டு!

திண்டுக்கல் வந்த விவசாயிகளின் அஸ்தி!

உ.பி-யில் பா.ஜ.க-வினரின் கார் பாய்ந்து 5 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் அஸ்தி நாடு முழுவதும் எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி செலுத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஏற்பாடு செய்தது. அவ்வகையில், விவசாயிகளின் அஸ்தி வேன் மூலம் திண்டுக்கல்லுக்கு வந்தது. விவசாயிகள், அரசியல் கட்சியினர் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

பெண் தரமறுத்தவரை தாக்கிய இளைஞர்!

விழுப்புரம், செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், அய்யனார். இவரது மகளும் அதே பகுதியைச் சேர்ந்த டேனியல்ராஜா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். டேனியல்ராஜா, அய்யானாரிடம் திருமணம் செய்ய பெண் கேட்டு சென்றுள்ளார். அவர் தர மறுக்கவே, அய்யனாரைத் தாக்கியுள்ளார். அய்யனாரின் புகாரின் பேரில் போலீஸார் டேனியல்ராஜை கைது செய்தனர். என்னத்த சொல்ல!

ஒரே வாரம்... எல்லாம் சரியாகும்!

ஈரோடு, பெருந்துறை பேரூராட்சியில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ ஜெயக்குமார், மக்களின் குறைகளைக் கேட்டபின், ``நெடுஞ்சாலை, மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் என எல்லா பிரச்னைகளும் ஒரு வாரத்தில் தீர்க்கப்படும்” என கூறியுள்ளார். பார்ப்போம்!

கைத்தறி சேலை கண்காட்சி!

ஈரோடு, மேட்டூர் சாலை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைத்தறி சேலைகள் கண்காட்சி தொடங்கியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தொடங்கிய இந்த கண்காட்சி நவம்பர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சேலைகள் ரூ.480 முதல் ரூ.2,500 வரை விற்கப்படுகிறது. சேலைகளுக்கு 10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மிஸ் பண்ணாதீங்க!

காரில் வந்து ஆடு திருட்டு!

திருவள்ளூர் பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் இறைச்சிக் கடை ஒன்றில் இரவோடு இரவாக இரண்டு ஆடுகளைத் திருடிச் சென்றிருக்கிறார்கள். அத்தோடு, இரண்டு முயல்கள், 10,000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றையும் திருடிய மர்ம நபர்களை போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடி வருகிறார்கள். புடிங்க சார் அவங்கள!

பாண்டியர்கால தமிழ் கல்வெட்டு!

ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுந்தரபாண்டிய சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் வைணவத்தின் ஒரு பிரிவினரான வைகானசர் மூலம் பெருமாள் கோயிலுக்கு பணத்தை தானமாக வழங்கப்பட்ட செய்தியை குறிக்கக்கூடிய கல்வெட்டாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார். வாவ்!

ரேஷனில் பழுப்பு நிறத்தில் அரிசி!

அருப்புக்கோட்டை தாலுகாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அப்பகுதி மக்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த அரிசியை நம்பிதான் உள்ளனர். ஆனால், இங்கு வழங்கப்படும் அரிசியில் கடும் நாற்றம் வீசுவதோடு, பழுப்பு நிறத்தில் காணப்படும் அவற்றில் வண்டுகளும் உள்ளன என்கிறார்கள், அப்பகுதி மக்கள். அரசின் கவனத்துக்கு!

வாட்ஸ் அப் மூலம் உருவான வீடு!

நீலகிரி, அய்யங்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர்கள், பாப்பச்சன் - லீலா தம்பதி. மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த இவர்களுக்கு உதவ அப்பகுதியைச் சேர்ந்த யோகண்ணன் வாட்ஸ் அப் குழு ஒன்றை தொடங்கினார். 86 பேர் கொண்ட இந்தக் குழு மூலம் ரூ.6.5 லட்சம் திரட்டப்பட்டு வீடு கட்டி முடிக்கப்பட்டது. செம!

பள்ளிக்கு செல்லக்கூட சாலை இல்லை!

மதுரை, மல்லப்புரம் ஊராட்சி எம்.எஸ்.புரத்தில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடிப்படை வசதி எதுவும் செய்துகொடுக்கப்படவில்லை என்கிறார்கள். ஊராட்சி ஒன்றிய பள்ளிக்குச் செல்ல சாலை வசதிகூட இல்லாமல் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அதிகாரிகள் உதவி செய்வார்களா?

ஆனைவாரி நீர்வீழ்ச்சி: திடீர் வெள்ளத்தில் சிக்கிய தாய், மகளை மீட்ட இளைஞர்கள் – குவியும் பாராட்டு!