பயணிகளைக் குழப்பும் பேருந்துகள்!
திருத்தணி, பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளில் இருக்கும் பெயர்ப்பலகைகள் பயணிகளை பெருங்குழப்பத்துக்கு ஆளாக்குகிறதாம். பெயர்ப்பலகையில் ஒரு ஊர் பெயர் இருக்க பேருந்து வேறு ஊருக்கு செல்கிறதாம். பயணிகள் சந்தேகத்தில் கண்டக்டர், டிரைவரைக் கேட்டால் சரியாக பதில் சொல்வதுகூட இல்லையாம். என்னமோ போங்க!
ஹெச்.ராஜாவால் கடுப்பான ஆளுநர்!
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சமீபத்தில் சந்தித்தார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என மனு அளிக்கச் சென்ற அவர், பிடிவாரண்ட் நிலுவையில் இருக்கும் ஹெச்.ராஜாவை அழைத்து சென்றது சர்ச்சையானது. இதனால், தன்னைப் பார்க்க வருபவர்களை இறுதி செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என அதிகாரிகளை ஆளுநர் கடிந்துகொண்டாராம். ரைட்டு!
பள்ளி இடத்தில் அ.தி.மு.க கம்பம்!
சேலம், இடைப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி கட்டடத்தின் ஓரத்தில் காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் அ.தி.மு.க-வினர் அக்கட்சியின் பொன்விழா ஆண்டு தொடக்கத்தையொட்டி கம்பம் வைத்து கொடியேற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்மணி போலீஸில் புகார் அளித்துள்ளார். எதுக்கு?!
களத்தில் இறங்கிய இளைஞர்கள்!
புதுச்சேரி, கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் சேர்கிறது. இந்த வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. மக்கள் மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததால் அப்பகுதி இளைஞர்களே முன்வந்து கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரினர். இளைஞர்களுக்கு கிளாப்ஸ்!
விங்க்ஸ் ஆண்ட் சாங்க்ஸ்!
கால்நடை மருத்துவப் பேராசிரியர்களான ஸ்ரீகுமார் மற்றும் வெங்கட்ராமன் இணைந்து பொத்தேரி அருகே காட்டுப்பாக்கம் பண்ணையில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுத்து `விங்க்ஸ் ஆண்ட் சாங்க்ஸ்' என்ற பெயரில் புத்தகமாக ஆவணப்படுத்தியுள்ளனர். இந்தப் புத்தகத்தில் உள்ள க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்தால் பறவையின் ஒலிகளைக் கேட்க முடியும். சூப்பர்ல!
புலியை மையமாக வைத்து உருவாகும் `ரேஞ்சர்’!
தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் டி23 புலி பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், புலியை மையமாக வைத்து `ரேஞ்சர்’ என்றப் படத்தை தரணிதரன் இயக்கி வருகிறார். புலிகளின் முக்கியத்துவம், மலைவாழ் மக்களின் அனுபவம், கொஞ்சம் கற்பனைக் கலந்து இந்தப்படம் உருவாகி வருகிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்!
சீமான் பேச வாய் இருக்காது!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா குறித்து பேசியது கதர் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இனியும் சீமான் கொச்சையாகப் பேசினால், அவர் பேசுவதற்கு வாய் இருக்காது என மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ரஞ்சன்குமார் பேசியிருப்பது பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. ஆத்தி!