ரஜினி - லதா  மேரேஜ் ஸ்டோரி!

ரஜினி - லதா திருமணத்தின்போது என்ன நடந்ததுங்குறதைத்தான்  நாம பார்க்கப்போறோம்.

லதா ரஜினியைப் பேட்டி எடுத்து 7 மாதங்களுக்குப் பிறகு இவர்களின் திருமணம் 1981-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் திருப்பதி கோயிலில் நடந்தது. தினசரி அதிகாலையில் சுப்ரபாதம் திருப்பதி கோயிலில் முழங்கும். அதேபோல், இவர்களது திருமணமும் ஏழுமலையான் சந்நிதியில் சுப்ரபாதம் முழங்க நடந்திருக்கிறது.

திருமணத்துக்கு முதல் நாள் ரஜினியின் அண்ணன் சத்யநாரயணா, லதா குடும்பத்தின் சார்பில் அவரது தாய், தந்தை மற்றும் சகோதரி குடும்பத்தினர் காரில் சென்று திருப்பதியில் ஒரு காட்டேஜில் தங்கியிருக்கிறார்கள். திருமணம் முடிந்தவுடன் திருச்சானூர் சென்று பத்மாவதி தாயார் சந்நிதியிலும் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு காரில் உடனடியாகத் திரும்பினார் ரஜினி

அன்று காலை 10 மணிக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்த கே.பாலச்சந்தரின் நெற்றிக்கண் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். 7 மாதங்களுக்கு முன், பாலசந்தரின் 'தில்லுமுல்லு’ படப்பிடிப்பின்போது அரும்பிய ரஜினி - லதா காதல், அதே பாலசந்தரின் ’நெற்றிக்கண்’ ஷூட்டிங்கின்போது திருமணத்தில் முடிந்தது.

எத்திராஜ் காலேஜில் பி.ஏ ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்த மாணவி லதா, ரஜினியைப் பேட்டி எடுத்தபோது ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி சரளமாகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

அப்போது, ‘மிஸ்டர் ரஜினி உங்கள் திருமணம் எப்போது?’ என்று லதா கேள்வி கேட்க, ’குடும்பப் பாங்கான பெண் கிடைக்கும்போது என் திருமணம் நடைபெறும்' என்று ரஜினி பதில் சொல்லியிருக்கிறார்.

`விளக்கமாகச் சொல்லுங்கள்’ என்று லதா துணைக் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு, ’உங்களை மாதிரி பெண் கிடைத்தால், நான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று பதிலளித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது திருமண ஆசையை ரஜினி கூறவே, பெற்றோரிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் லதா.

திருமணத்துக்கு முந்தைய நாளான 25-02-1981-ல் திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தனது திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்போது, ஏழுமலையான் சந்நிதியில் மாலை மாற்றி திருமணம் செய்துகொள்ள சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறேன். திருமணத்துக்கு பத்திரிகையாளர்கள் கேமிராவுடன் யாரும் வர வேண்டாம்.

ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் கூடினால் பிரச்னையாகிவிடும் என்று சொன்ன ரஜினி, சென்னையில் திருமண வரவேற்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு எல்லோரையும் அழைக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

அதற்கு பத்திரிகையாளர்கள் தரப்பில் இருந்து, ’அப்படி வந்தா’ என்று கேள்வி வரவே, ஆத்திரமடைந்த ரஜினி, `உதைப்பேன்’ என்று பதில் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை ஒரு சில பத்திரிகையாளர்கள் அவரிடம் சுட்டிக்காட்டவே, வருத்தம் தெரிவித்த ரஜினி, ‘அப்படிச் சொன்னதற்கு வருந்துகிறேன்... சாரி! ஆனாலும், திருப்பதிக்கு யாரும் வரவேண்டாம். கேமராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கிறதைத் தவிர வேறு வழி தோணாது!’ என்று சொல்லியிருக்கிறார், ரஜினி.

திருமணத்தின்போது பத்திரிகையாளர்கள் சிலர் திருப்பதிக்கு கேமராவோடு வந்திருப்பதைப் பார்த்த ரஜினி டென்ஷன் ஆகிவிட்டாராம். அவரை சமாதானப்படுத்தி வேறுவழியாக வெளியே கூட்டி வந்திருக்கிறார்கள்.

திருமணத்துக்கு ஏன் அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை என்று ரஜினியே விளக்கம் கொடுத்திருந்தார். ``எனது திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. என்னோடு நெருங்கிப் பழகிய, என் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களைக்கூட, ’வாருங்கள் என் திருமண கோலத்தைக் கண்ணாரக் கண்டு ஆசீர்வதியுங்கள்'' என்று அழைக்கவில்லை.

இதற்குக் காரணம் என்ன? அழைப்பிதழ் அச்சடித்து, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று கொடுப்பது, தபால், தந்தி, ரேடியோ வசதிகள் இல்லாத அந்தக் காலத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் அது எதற்கு?

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

என்னைப்போன்ற ஒரு நடிகனுக்குத் திருமணம் என்றால், அடுத்த நிமிடமே மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக நவீன வசதிகள் இருக்கின்றன. அதனால் அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை. என் திருமணத்துக்கு உடன் பிறந்தவர்கள் தவிர, வேறு எவரையும் அழைக்கவில்லை. வயது முதிர்ந்த என் தந்தையிடம் கூட, மானசீகமாகத்தான் வாழ்த்து பெற்று இருக்கிறேன்’’ என்று ரஜினி கூறியிருந்தார்.

திருமணம் முடிந்து 2 வாரங்கள் கழித்து 1981 மார்ச் 14-ல் சென்னை தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் ரஜினியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், நடிகர்கள் கமல்ஹாசன் தொடங்கி திரையுலகப் பிரபலங்கள் பலரும் திரளாக வந்து வாழ்த்தினர்.

ரஜினி திருமணம் செய்துகொண்ட மாணவி லதா, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியான சுதாவின் தங்கை. லதாவின் பெற்றோரிடம் பேச ரஜினி ரொம்பவே தயங்கியிருக்கிறார். அதன்பிறகு ஒய்.ஜி.மகேந்திரனிடம் சொல்ல, ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா முரளி பிரசாத் ஆகியோர் லதாவின் பெற்றோரிடம் பேசி சம்மதம் பெற்றிருக்கிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகும் இரண்டு மாதங்கள் கல்லூரி சென்று தனது படிப்பை முடித்திருக்கிறார் லதா. தாங்கள் ரகசியமாக வைத்திருக்க எண்ணிய செய்தியை 7 மாதங்களுக்கு முன்பே வெளியிட்ட நாளிதழ் நிருபரை செய்தியாளர் சந்திப்பின்போது பார்த்த ரஜினி, அவரை அருகில் அழைத்து கைகொடுத்து, பாராட்டியிருக்கிறார். எப்படி இந்த செய்தி வெளியானது என்று ஆச்சர்யப்பட்டதாகவும் ரஜினி அப்போது சொல்லியிருந்தார்.