நான் விளையாடும் விதம், என்னுடைய எதிர்காலம், நடத்தை, விளையாட்டு என இவற்றைப் பற்றி நிறைய பேர் எனக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள். ஆனால், அவற்றிலிருந்து முடிந்தவரை விலகியிருக்கவே விரும்புகிறேன். எனது கவனத்தை அவை திசைதிருப்புவதை நான் விரும்பவில்லை. மைதானத்தில் நீங்கள் பந்து ஒன்றை மட்டுமே எதிர்க்கொள்வீர்கள். அங்கு நீங்கள் தோல்வியடைந்தால், அதற்கு பொறுப்பாளி நீங்கள் ஒருவர் மட்டுமே. எனவே, உங்கள் வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்பதை முடிவு செய்வது நீங்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அதேநேரம், நான் கோயில்களுக்குச் செல்வதை உங்களால் அதிகம் பார்த்திருக்க முடியாது. ஒருவர் தன்னையே முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். மன அமைதி எனக்கு ரொம்பவே முக்கியம். நடைமுறைக்காக ஒருசிலவற்றை ஏன் செய்ய வேண்டும்? அதற்குப் பதிலாக எப்போதும் போலவே எனக்கு நான் உண்மையாக இருப்பேன்.
உங்களுக்குப் பிடித்த விளையாட்டில் இருந்து பணம் சம்பாதிப்பது எந்தவகையிலும் தவறில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் கடுமையாக உழைத்தால், அதிலிருந்து பலன் கிட்டும். இதில் எந்தத் தவறும் இல்லை. அதேநேரம், நீங்கள் கடுமையாக உழைக்காமல், அதிலிருந்து பலன் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும்போதுதான், அது தவறாகிறது.