ஜெமினி பிரிட்ஜ் குதிரையும் ரிட்டர்ன் டிக்கெட்டும்... ஜெமினி பிரிட்ஜ் வரலாறு!

ஜெமினி பிரிட்ஜ்ல இருக்குற குதிரை சிலைக்கும் லோக்கல் ட்ரெயின் ரிட்டன் டிக்கெட்டுக்கும் ஒரு செம்மயான கனெக்சன் இருக்கு. ஜெமினி பிரிட்ஜ்னு சொல்லப்படுற அண்ணா மேம்பாலம்தான் சென்னையோட ஹார்ட்னு சொல்வாங்க.

பல ஊர்கள்ல இருந்து சென்னைக்கு வர்றவங்க கண்டிப்பா இந்த பாலத்துல ஒரு முறையாவது பயணம் போயிருக்க வாய்ப்பிருக்கு. ஒரு மணி நேரத்துல 20 ஆயிரம் வாகனங்கள் கடந்து போற இந்த பாலம்தான் தமிழ்நாட்டுல கட்டப்பட்ட முதல் மேம்பாலம்.

சென்னை மவுண்ட் ரோடுனு அழைக்கப்பட்ட அண்ணா சாலை 400 வருச பழமையானது. ஜார்ஜ் கோட்டையிலிருந்து கிண்டி வரைக்கும் கிட்டத்தட்ட 15 கி.மீ இருக்கும். சென்னையோட முக்கியமான ஒரு ரோடா இருந்த அண்ணா சாலை அப்போவே டிராஃபிக் நெருக்கடியாதான் இருந்தது.

1969-வது வருசம் கலைஞர் முதல்வர் ஆகியிருக்காரு. அப்போ மவுண்ட் ரோடுல ஒரு மேம்பாலம் கட்டுனா இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்னு நினைக்குறாங்க. 1969-ல இந்தப் பாலம் கட்டப்பட்டப்போ இந்தியாவுலயே மிக நீண்ட பாலமா இருந்தது.

அப்போ இந்தியால இருந்ததே இரண்டு மேம்ப லம்தான். தமிழ்நாட்டிலேயே முதல் மேம்பாலம் இதுதான். அப்போவே 66 லட்ச ரூபாய் செலவில் 21 மாதங்கள்ல கட்டப்பட்ட இந்த பாலத்துக்கு மறைந்த முதல்வர் அண்ணாவோட பெயர் வைக்கப்பட்டது. ஆனா மக்களைப் பொறுத்தவரைக்கும் இது ஜெமினி பிரிட்ஜ்தான்.

அந்த காலத்துல பிரபலமா இருந்த ஜெமினி ஸ்டுடியோஸ் அங்கதான் இருந்தது. அந்த ஏரியா பெயரே ஜெமினி சர்க்கிள்தான். அதனால அங்க கட்டப்பட்ட இந்த பாலத்துக்கு ஜெமினி பிரிட்ஜ் என்று மக்களே பெயர் வைத்தார்கள்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

1971 வது வருடம் ஜூலை 1-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது இந்தப் பாலம். அன்றைய தேதிக்கு அந்தப் பாலத்தில் பீக் ஹவர்ஸ்ல ஒரு மணி நேரத்திற்கு 9,000 வாகனங்கள் போனதாக சொல்லப்படுகிறது.  2010-ல் இது 16 ஆயிரம் வாகனங்களாக இருந்தது. இப்போது ஒரு மணி நேரத்திற்கு 20 ஆயிரம் வாகனங்கள் இந்தப் பாலத்தின் மீது கடக்கிறது.

அண்ணா மேம்பாலத்துக்கு இரண்டு பக்கமும் ஒரு வீரன் குதிரையை பிடித்து நிறுத்துவது மாதிரியான சிலை இருக்கும். இந்த சிலைக்கு ஒரு காரணம் இருக்கிறது. 1970 வது காலகட்டங்கள்ல கிண்டியில் குதிரைப் பந்தயம் மிகவும் பிரபலமாக இருந்தது.

சினிமா நடிகர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை பலரும் இந்தக் குதிரைப் பந்தயத்தை சூதாட்டமாக ஆடி வந்தார்கள். லாட்டரி சீட்டுக்கு அடிமையா இருந்தது  மாதிரி மக்கள் இதற்கு அடிமையாக இருந்தார்கள்.

ஒரு சுவாரஸ்யமான செய்தி. சென்னையின் லோக்கல் டிரெயினில் பயணித்தவர்களுக்கு ரிட்டர்ன் டிக்கெட் என்ற கான்சப்ட் நன்றாகத் தெரியும். இந்த ரிட்டர்ன் டிக்கெட் கான்சப்ட் கொண்டு வந்ததற்கே இந்தக் குதிரைப் பந்தயம்தான் காரணமாம்.

மற்ற ஏரியாக்களில் இருந்து கிண்டி வந்து குதிரைப் பந்தயத்தில் மொத்த பணத்தையும் இழந்துவிட்டு திரும்பிச் செல்லவே காசு இல்லாமல் ஏராளமானவர்கள் நிற்பார்களாம். அதற்காகவே கிளம்பும்போதே ரிட்டர்ன் டிக்கெட் எடுப்பதற்குத்தான் இந்த கான்சப்ட் கொண்டு வரப்பட்டது.

1973-வது வருடம் இந்தக் குதிரை பந்தயத்துக்கு தடை விதித்த கலைஞர் இதன் நினைவாக குதிரையை ஒரு வீரன் பிடித்திருப்பது போன்ற சிலையை வைக்க முடிவு செய்தார்.

சிற்பி எம்.என் ஜெயராமன் இந்தச் சிலைகளை வடிவமைத்தார். பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவனையும் அவர் குதிரையையும் போல இருக்க வேண்டும் என்று கலைஞர் சொல்லி அதன்படி உருவாக்கினார் ஜெயராம்.

ஒரே சாலை.. இரண்டு சிலை.. ஒரே தலைவர்.. இரண்டு கட்சி! இந்த அண்ணா மேம்பாலத்துக்கு அருகிலேயே ஒரு பெரியார் சிலை இருக்கும். இதை நிறுவியவர் எம்.ஜி.ஆர். அண்ணா சாலையில் இன்னொரு பெரியார் சிலை சிம்சனில் இருக்கும். அதை நிறுவியவர் கலைஞர். இரண்டும் 1974-ஆம் ஆண்டு வைக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்தநாள், நினைவுநாள் வரும்போதெல்லாம் கலைஞரும் ஸ்டாலினும் சிம்சனில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள். ஜெயலலிதாவும் ஓ.பி.எஸ்ஸூம் ஜெமினி பிரிட்ஜ்ஜில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள். இப்படி ஒரு சம்பவமும் இந்த சிலையில் இருக்கிறது.

இந்த வருடத்தோட அண்ணா மேம்பாலம் கட்டி 50 வருடம் ஆகுது. இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுது அண்ணா மேம்பாலம். சென்னைல இருக்குறவங்க உங்களுக்கு ஜெமினி பிரிட்ஜ்ல நடந்த, நீங்க பார்த்த சுவாரஸ்யமான சம்பவங்களை ஷேர் பண்ணுங்க.