சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டேவிட் வார்னரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
#SRHvsRCB 5 பாயிண்ட் மேட்ச் ரிப்போர்ட்
-
1 அசத்தல் ரஷீத் கான்
டி20 கிரிக்கெட்டில் அழுத்தமாக முத்திரை பதித்து வரும் ரஷீத் கான், இந்தப் போட்டியிலும் சிறப்பாகப் பந்துவீசினார். சன்ரைசர்ஸ் அணிக்கு அவரது நான்கு ஓவர்கள் முக்கியமானதாக இருக்கும். அந்தவகையில், ஆர்.சி.பிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசிய ரஷீத், 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்.சி.பி பேட்டிங் ஆர்டரின் முக்கிய தூண்களான டிவிலியர்ஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோருக்கு எதிராக மொத்தமாக 18 பந்துகளை வீசிய அவர் ஒரே ஒரு பவுண்டரி உள்பட 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேபோல், டிவிலியர்ஸின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆர்.சி.பி-க்கு நெருக்கடி கொடுத்தார்.
-
2 கோலி விரக்தி
ஆர்.சி.பி வெற்றி பெற்றிருந்தாலும், கேப்டன் விராட் கோலிக்கு இந்த நாள் சிறப்பானதாக அமையவில்லை. ஸ்லோ இன்னிங்ஸ் ஆடிய விராட் கோலி 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜேசன் ஹோல்டர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் ஆட்டமிழந்த கோலி, விரக்தியில் டக் அவுட்டில் இருந்த சேரை பேட்டால் அடித்தார். இது ஐபிஎல் விதிமீறல் என்பதால், அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டது. `ஐபில் நடத்தை விதிகளை மீறியதை விராட் கோலி ஒப்புக்கொண்டார். மேட்ச் ரெஃப்ரியின் முடிவே இறுதியானது’ என்று ஐபிஎல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
3 மேக்ஸ்வெல்லின் ஐந்தாண்டு காத்திருப்பு
சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆர்.சி.பி வீரர் மேக்ஸ்வெல் 41 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தான் சந்தித்த முதல் 16 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து மெதுவாக இன்னிங்ஸைத் தொடங்கிய மேக்ஸ்வெல், 38 பந்துகளில் அரைசதமடித்தார். இதற்கு முன்பு கடந்த 2016 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்கெதிராக விளையாடியபோது மேக்ஸ்வெல் அரைசதமடித்திருந்தார். அந்தப் போட்டியில் 42 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தார் மேக்ஸ்வெல்.
-
4 வார்னர் அரைசதம்
150 ரன்கள் டார்க்கெட்டோடு களமிறங்கிய சன்ரசர்ஸ் அணிக்கு கேப்டன் வார்னர் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். மணீஷ் பாண்டேவோடு இரண்டாவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த வார்னர், 37 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவுட்டாகும்போது சன்ரைசர்ஸின் வெற்றிக்கு 40 பந்துகளில் 54 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால், 48 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.
-
5 மேட்சை மாற்றிய ஷாபாஸ் அகமது!
பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பதே கடினம் என்ற நிலையில் இருந்த ஆர்.சி.பி வீரர் ஷாபாஸ் அகமதின் ஒரு ஓவர்தான் போட்டியையே மாற்றியது. 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை எடுத்திருந்தது சன்ரைசர்ஸ் அணி. 24 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில், செட்டாகி விளையாடிக் கொண்டிருந்த ஜானி பேரிஸ்டோவ், மணீஷ் பாண்டே இருவர் களத்தில் இருந்தபோது, 17-வது ஓவரை வீச வந்தார் ஷாபாஸ் அகமது. அந்த ஓவரின் தொடக்கத்தில் சன்ரைசர்ஸ் எளிதாக வென்றுவிடும் என்ற நிலையில் இருந்த மேட்சை மாற்றிக் காட்டினார் ஷாபாஸ். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஜானி பேரிஸ்டோவ், மணீஷ் பாண்டேவை வெளியேற்றிய ஷாபாஸ் அகமது, கடைசி பந்தில் இளம் வீரர் அப்துல் சமத்தையும் வெளியேற்றினார். அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தம் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசியிருந்த ஷாபாஸ் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
Photo Credits - BCCI
0 Comments