சின்னங்களே கட்சிகளின் வெற்றியில் முக்கியப் பங்காற்றும். தலைவர்கள் அளவுக்கு மக்களிடம் சின்னங்களும் பிரபலம். தேர்தல் பிரசாரத்தில் ஒவ்வொரு கட்சியும், தங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க மெனக்கெடும். வேட்பாளர்கள் யாராக இருந்தாலும், `நான் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்துக்கே ஓட்டுப் போடுவேன், தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்துக்கே ஓட்டுப் போடுவேன்’ என்று பாரம்பரியமாகப் பேசும் வாக்காளர்களை இன்றும் நாம் கிராமங்களில் பார்க்க முடியும்.

காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தமிழகத்தில் புதிய திருப்புமுனையாக ஆட்சியைப் பிடித்த தி.மு.க-வுக்குப் புதிய பாடமெடுத்த தேர்தல் இது. தி.மு.க-வில் இருந்து பிரிந்துசென்று புதிய கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர் இந்தத் தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்தினார். தி.மு.க தலைமையோடு ஏற்பட்ட மோதலால் அக்கட்சியில் இருந்து விலகி 1972-ல் அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கினார். அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை இடைத்தேர்தல் வெற்றியால் அவர் புதிதாகத் தொடங்கிய அ.தி.மு.க-வுக்குத் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது.
இரட்டை இலை சின்னத்தோடு 1977-ல் எம்.ஜி.ஆர் முதல்முறையாக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலை எதிர்க்கொண்டார். இந்திரா காந்தியோடு கைகோர்த்து தேர்தலைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர். 200 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 இடங்களில் வென்றது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி 144 இடங்களில் வென்று முதல்முறையாக எம்.ஜி.ஆர் தமிழக முதல்வரானார்.
இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் இரவு, பகலாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எம்.ஜி.ஆர் சூறாவளி பிரசாரம் செய்தார். தமிழகத்தின் 233 தொகுதிகளிலும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் மட்டும் `இரட்டை இலைக்கு ஓட்டுப் போடாதீர்கள்’ என்று பிரசாரம் செய்தார்.

தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் அய்யாசாமி என்பவர் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி போன்றவை கட்சித் தலைமை சார்பில் அனுப்பப்பட்டது. அவரும் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டார். இந்தநிலையில், அ.தி.மு.க தலைமை நடத்திய அவசர ஆலோசனையில், தாராபுரம் வேட்பாளரை மாற்றுவதாக கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. அய்யாசாமிக்குப் பதிலாக அலங்கியம் பாலகிருஷ்ணன் என்பவர் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், போட்டியிலிருந்து பின்வாங்க அய்யாசாமி மறுத்துவிட்டார். இதனால், அவருக்கு அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை ஒதுக்கப்பட்டு, அவரும் தேர்தல் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார். அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அலங்கியம் பாலகிருஷ்ணனுக்கு சிங்கம் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனால், மற்ற தொகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர், தாராபுரம் தொகுதியில் மட்டும் சிங்கம் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். அந்தத் தொகுதியில் பேசிய எம்.ஜி.ஆர், `இரட்டை இலைக்கு ஓட்டுப் போடாதீங்க…’ என மறக்காமல் குறிப்பிட்டு வந்தார். தேர்தல் முடிவுகளோ வேறு மாதிரி இருந்தன. தாராபுரம் தொகுதி மக்கள் இரட்டை இலைக்கே பெரும்பான்மையை அளித்தனர். இரட்டை இலை எம்.ஜி.ஆரை வீழ்த்தியது. அந்தத் தேர்தலில் அய்யாசாமி 2,682 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இரண்டாவது இடத்தை காங்கிரஸ் வேட்பாளர் ஏ.கே.சிவலிங்கம் பிடித்தார். எம்.ஜி.ஆர் ஆதரவோடு சிங்கம் சின்னத்தில் போட்டியிட்ட அலங்கியம் பாலகிருஷ்ணனால் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.