அமெரிக்காவில் டெலிவிஷன் இண்டஸ்ட்ரியில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்நாட்டில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக எம்மி அவார்ட் கருதப்படுகிறது. அகாடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் மற்றும் நேஷனல் அகாடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இந்த எம்மி விருதை வழங்கி வருகின்றன. அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான எம்மி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானது. இந்த விருது பட்டியலில் அமெரிக்காவின் மிகப்பிரபலமான நடிகரான டான் சீடில் என்பவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
டிஸ்னி ப்ளஸ் தளத்தில் ஃபால்கன் அண்ட் தி விண்டர் சோல்ஜர் என்ற டெலிவிஷன் மினி சீரிஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த சீரீஸை இந்த சீரிஸில் நடிகர் டான் சீடில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். வெறும் 98 வினாடிகள் மட்டுமே இந்த சீரீஸில் அவர் தோன்றுவார். அந்தக் காட்சியும் மிகவும் சாதாரணமான காட்சியாகவே இருக்கும். இந்த நிலையில் அவரின் பெயர் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது பலரின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், டான் சீடிலுக்கே இந்தவிருது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வேடிக்கையாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எம்மி விருதுக்கு டான் சீடில் தகுதியானவர் என்று அவரது ரசிகர்கள் ஒப்புக் கொண்டாலும் அவரை ஏன் இந்த விருதுக்கு பரிந்துரை செய்துள்ளனர் என மற்றொரு தரப்பினர் கொந்தளித்து வருகின்றனர். டான் சீடில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய நலம் விரும்பிகளுக்கு நன்றி. என்னுடைய ஹேட்டர்கள் என்னை மன்னித்துவிடுங்கள். இந்த விருதுக்கு எப்படி பரிந்துரைக்கப்பட்டேன் என்பது எனக்கும் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நெட்டிசன்களின் ட்வீட்டுகளுக்கும் வேடிக்கையாக பதிலளித்து வருகிறார். இந்த மாதிரியான சம்பவங்கள் நடப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பும் இதே மாதிரியான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. `ஷேக்ஸ்பியர் இன் லவ்’ திரைப்படத்தில் நடித்ததற்காக 1999-ம் ஆண்டு நடிகை ஜூடி டென்சுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அந்தப் படத்தில் இவர் எட்டு நிமிடம் மட்டுமே நடித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
பிரபல நடிகர் டான் சீடில் அமெரிக்காவில் 1964-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி பிறந்தார். டினால்ட் ஃப்ராங்க் சீடல் என்பதுதான் இவரின் முழுப்பெயர். பள்ளி பருவத்தில் இருந்தே கலைத்துறையின் மீது ஆர்வம் உடையவர். 1980-களில் நடிகராக அறிமுகமாகிய இவர் நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களை உடையவர். ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் பின்னாள்களில் மிகவும் முக்கியமான வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். கேப்டன் அமெரிக்கா : சிவில் வார், அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார், கேப்டன் மார்வல், அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம், ஐயர்ன் மேன் 2 மற்றும் 3 உள்ளிட்ட பல பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார். மார்வல் ஸ்டுடியோஸின் டெலிவிஷன் சீரீஸ்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது ஆர்மர் வார்ஸ் என்ற சீரீஸ் மற்றும் வொயிட் நாய்ஸ், பிரின்ஸ் ஆஃப் டார்க்னஸ் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
டான் சீடில் 2005-ம் ஆண்டு வெளியான ஹோட்டல் ருவாண்டா என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இரண்டு முறை கோல்டன் குளோப் விருதை தி ரேட் பேக் மற்று ஹவுஸ் ஆஃப் லைஸ் படங்களுக்காக வென்றார். இந்தப் படங்களைத் தவிர்த்தும் சில படங்களுக்காக இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மைல்ஸ் எஹெட் என்ற பாடலுக்காக கிராமி விருதையும் வென்றுள்ளார். ஃபியர் இட்செல்ஃப் என்ற ஆல்பத்திற்காக இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவையெல்லாம் தவிர்த்து எம்மி விருதுக்காக மட்டும் இந்த ஆண்டையும் சேர்த்து சுமார் 11 முறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஆனால், எம்மி விருதை இவர் இதுவரை பெறவில்லை. இந்த நிலையில்தான் இப்போது 98 வினாடிகள் நடித்தற்காக எம்மி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இந்த முறையாவது அவருக்கு விருது கிடைக்குமா? என்று அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அப்படி விருது கிடைத்தது என்றால் அது சாதனையாக வரலாற்றில் பதிவாகும்.
Also Read : `மாஸ்டர் கார்டு’-க்கு செக்!… ரிசர்வ் வங்கி நடவடிக்கையின் பின்னணி என்ன?