எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விவாதத்துக்குத் தயார் என்றால் நாங்களும் தயாராகத்தான் இருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார். என்ன நடந்தது?
இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை
தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய கும்பகோணம் தி.மு.க எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், தளபதி, தளபதி என்கிறீர்களே… உங்கள் தலைவர் எந்தப் படைக்குத் தளபதி? முடிந்தால் ராயபுரம் தொகுதியில் நின்று என்னை வென்று காட்டட்டும்’ என்று என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால்விட்டிருந்தார். இன்றைக்கு அவரால் இந்த அவைக்குள் கூட வர முடியவில்லை. அவருக்கு எதிராக ஐட்ரீம்ஸ் மூர்த்தியை நிறுத்தி வென்று காட்டியவர் முதலமைச்சர் ஸ்டாலின்’ என்று பேசினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,அவையில் இல்லாதவரைப் பற்றி பேச வேண்டாம். மானியக் கோரிக்கையைப் பற்றி மட்டும் பேசுங்கள்’ என்று அறிவுறுத்தினார்.
ஸ்டாலின் – எடப்பாடி விவாதம்!
இதையடுத்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, `அவையில் இல்லாத ஒருவரைப் பற்றி பேசுவது முறையற்றது. வேண்டுமென்றால் 2017-ல் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்ட பின்னர் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போத் என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும். அதைப்பற்றி விவாதிக்கலாமா?’ என்று கேட்டார்.
அதன்பின்னர் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், `விவாதம் செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில்தான் எங்கள் உறுப்பினரை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். மானியக் கோரிக்கை விவாதத்தின் போது ஒவ்வொரு உறுப்பினருக்கும் 15 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இதில், உறுப்பினர்கள் தங்களின் கோரிக்கையைப் பற்றி மட்டும் பேச வேண்டும். தேவையில்லாத விஷயங்களைப் பேச வேண்டாம்’’ என்று அறிவுறுத்தினார். மேலும்,நீங்கள் விவாதத்துக்குத் தயார் என்றால் நாங்களும் தயார்தான்’’என்றும் அவர் பேசினார்.
அவை முன்னவர் துரைமுருகன், `முதலமைச்சரே இந்த விவகாரத்தில் விவாதம் வேண்டாம் என்றுதான் நினைக்கிறார். பெருந்தன்மையாக நடந்துகொண்ட அவருக்கு நீங்கள் நன்றிதான் தெரிவிக்க வேண்டும்’என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, விவாதம் வேண்டாம் என்றுதான் முதலமைச்சரும் நினைக்கிறார். அதனால், இந்த விவகாரத்தை இத்தோடு முடித்துக் கொள்ளலாம் என்று கூறி முடித்துவைத்தார்.
Also Read – திராவிடக் களஞ்சியம் சர்ச்சை… எதிர்ப்பும் அரசின் விளக்கமும் – பின்னணி என்ன?