அஜித் கார்,பைக் ஓட்டி பார்த்திருப்பீங்க, மாஸா டயலாக் பேசி பார்த்திருப்பீங்க, துப்பாக்கி சுட்டு பார்த்திருப்பீங்க.. ஏன்.. ஏரோநாட்டிகல் ஸ்டூடண்ஸுக்கு கிளாஸ் எடுத்துக்கூட பார்த்திருப்பீங்க. ஒரு படத்துக்கு கதை எழுதி பார்த்திருக்கீங்களா..அதே படத்துல கோ-டைரக்டராகவும் காஸ்டியூம் டிசைனராகவும் வேலை பார்த்திருக்கிறதைப் பார்த்திருக்கீங்களா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
தொடர் தோல்வியில் இருந்த அஜித் 2007-ஆம் ஆண்டு ‘பில்லா’ படம் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார். அந்த சூழ்நிலையில் அவருடைய அடுத்த படம் என்னவாக இருக்குமென தமிழ்நாடே எதிர்பார்த்துக் கிடக்க, தனது அடுத்த படம் நடிகர் திலகம் குடும்பத்துக்கு சொந்தமான சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனத்துக்கு என அறிவித்தார் அஜித். சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பு என்றதும் ‘பில்லா’ போலவே சிவாஜியின் ‘புதிய பறவை’ படத்தை ரீமேக் செய்து அதில் அஜித் நடிக்கப்போவதாகவும் கே.எஸ்.ரவிக்குமார் அதை இயக்கப்போவதாகவும் முதலில் செய்திகள் வரத்தொடங்கியது. அதை தயாரிப்பாளர் பிரபு மறுக்கவே அதன்பிறகு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ப்ராஜெக்ட்டுக்குள் வந்தார். வட சென்னை பேக்டிராப்பில் நடக்கும் ஒரு கதையை அஜித்திடம் சொல்லி ஒகே செய்த கௌதம் மேனன், அதற்கு ‘சுராங்கனி’ எனத் தலைப்பிட்டு பரபரவென வேலைகளைத் தொடங்கினார்.
ஆனால், கதை விஷயத்தினாலோ அல்லது வேறு ஏதோ சில காரணங்களாலோ அஜித்துக்கும் கௌதம் மேனனுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட, கௌதம் மேனன் அந்த ப்ராஜெக்டிலிருந்து வெளியேறினார். ஆனால் திட்டமிட்டப்படி உடனே படத்தைத் தொடங்கவேண்டும் என்னும் சூழ்நிலையில் தரணி, விஷ்ணுவர்தன், சரண் ஆகிய இயக்குநர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க தயாரிப்பு நிறுவனம் நினைக்கையில் அஜித் தனது ஆஸ்தான இயக்குநரான சரணை தேர்ந்தெடுத்தார். முன்னதாக இந்தக் கூட்டணி ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களைத் தந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்த சூழ்நிலையில் சரண் சொன்ன கதையில் அஜித்துக்கு உடன்பாடு எட்டவில்லை. அதன்பிறகுதான் அஜித் சொன்ன ஒரு ஒன்லைனை அவருடன் சேர்ந்து சரணும் யூகிசேதுவும் பணியாற்றி மிகக் குறுகிய காலத்தில் அதை ஒரு முழு திரைக்கதையாக மாற்றினார்கள். கூடவே அந்த கூட்டணி சேர்ந்து படத்தின் வசனங்களையும் எழுதியது. அதுதான் 2010-ஆம் ஆண்டு பிப்-5 ஆம் தேதி வெளியான ‘அசல்’ படம். அஜித் அப்பா –மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அவருக்கு ஜோடியாக சமீரா ரெட்டி, பாவனா நடித்த இந்தப் படத்தில் அஜித் காஸ்டியூம் டிசைனராகவும் இணை இயக்குநராகவும் பணியாற்றியிருந்தார்.
முதல் நாள் ‘அசல்’ படம் பார்த்த அஜித் ரசிகர்கள் அனைவரும் டைட்டில் கார்டில் அஜித்தின் பெயர் அடுத்தடுத்து நான்கு முறை வருவதைப் பார்த்ததும் ஸ்வீட் சர்ப்பரைஸாகி ஒவ்வொரு முறையும் விசில் அடித்து கொண்டாடினார்கள்.
Also Read – `ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் ரசிகர்களே… உங்களுக்கான சின்ன டெஸ்ட்!