அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கொல்கத்தாவுக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி மெதுவாக இன்னிங்ஸைத் தொடங்கியது. நிதிஷ் ராணா விக்கெட்டை நான்காவது ஓவரிலேயே இழந்த அந்த அணி, பவர்பிளேவில் 45 ரன்கள் எடுத்தது. 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 65 என்றிருந்த அந்த அணியின் ஸ்கோர், 14 ஓவர்களில் 86/5 என்றானது. இந்த போட்டியிலும் கொல்கத்தா மிடில் ஆர்டர் சொதப்பல் தொடர்ந்தது. மெதுவான இன்னிங்ஸ் ஆடிய சுப்மன் கில், 38 பந்துகளில் 43 ரன்களும், ராகுல் திரிபாதி 17 பந்துகளில் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் மோர்கன், சுனில் நரேன் ஆகியோர் ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்தனர். வழக்கமாக கே.கே.ஆரின் ஆபத்பாந்தவனாக அவதாரம் எடுத்த `பர்த்டே பாய்’ ஆண்ட்ரே ரஸல், 27 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். இதனால், கடைசி 5 ஓவர்களில் மட்டும் கொல்கத்தா 59 ரன்கள் சேர்த்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே அந்த அணி சேர்த்தது.
155 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய டெல்லிக்கு முதல் ஓவரிலேயே பூஸ்ட் கொடுத்தார் பிரித்வி ஷா. ஜூனியர் கிரிக்கெட்டில் தன்னோடு விளையாடிய சகவீரரான ஷிவம் மவி வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக ஆறு பவுண்டரிகளைப் பறக்கவிட்டு தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்தார். ஒரு வொய்ட் உள்பட ஷிவம் மவி ஓவர் முடிவில் டெல்லியின் ஸ்கோர் 25-0 என்றிருந்தது. அந்த ஷாக்கிலிருந்து ஷிவம் மவியும் கொல்கத்தாவும் கடைசிவரை மீளவே முடியவில்லை. பவர்பிளேவில் டெல்லியின் ஸ்கோர் 67/0. முதல் ஆறு ஓவர்களை கொல்கத்தாவின் ஐந்து பௌலர்கள் வீசியும் விக்கெட் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து அதிரடி காட்டிய பிரித்வி ஷா, 41 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் பிரித்வி ஷா. அந்த அணிக்கெதிராகக் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4 அரைசதங்கள் உள்பட 323 ரன்களை அவர் எடுத்திருக்கிறார். கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி 5 போட்டிகளில் 64.60 சராசரியாக வைத்திருக்கும் பிரித்வியின் ஸ்டிரைக் ரேட் 171.80.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஷிகர் தவான், 47 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கேப்டன் பண்ட், 16 ரன்களுடன் நடையைக் கட்ட, ஸ்டோயிஸும் ஹெட்மெயரும் டெல்லியின் வெற்றியை 16.3 ஓவர்களிலேயே உறுதி செய்தனர். ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற டெல்லி, நெட் ரன்ரேட் அடிப்படையில் சி.எஸ்.கேவுக்கு அடுத்தபடியாக புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. முதல் மூன்று இடங்களில் இருக்கும் அணிகள் 10 பாயிண்டுகளை வைத்திருக்கும் நிலையில், நான்காவது இடத்தில் இருக்கும் மும்பை 6 புள்ளிகளையே பெற்றிருக்கிறது. ஐபிஎல் 2021 சீசனில் ஹைதராபாத்துக்குப் பிறகு ஐந்தாவது தோல்வியை கொல்கத்தா பதிவு செய்திருக்கிறது.
போட்டிக்குப் பிறகு பேசிய கொல்கத்தா கோச் மெக்கல்லம், `எப்படி விளையாட வேண்டும் என பிரித்வி ஷா எங்களுக்குப் பாடம் எடுத்திருக்கிறார்’ என அடுத்த மேட்சில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என ஹிண்ட் கொடுத்துவிட்டுப் போனார்.
Photo Credits – BCCI