ஹரிஹரன்… 10 மொழிகளில் 15,000 பாடல்களுக்கு மேல் பாடியவர். தமிழில் இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என எந்த ஹீரோவுக்கு பாடினாலும் அந்த ஹீரோவுக்கு ஏற்ற மாதிரியே இவரது குரலும் இருக்கும். அப்படி ஒரு ரேர் பீஸ் ஹரிஹரனைப் பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.
பாடகர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்களுக்கேற்ற ஒரு காம்போ செட்டாகி விட்டால் அடுத்தடுத்து அதே காம்போவில் ஹிட் பாடல்கள் வருவது வழக்கமாகிவிடும். அப்படி ஹரிஹரனுக்கு ஆல் டை ஹிட் காம்போ என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் – ஹரிஹரன் காம்போதான். ரஹ்மானின் முதல் படமான ரோஜாவில் தமிழா தமிழா பாடலில் ஆரம்பித்து அம்பிகாபதி படத்தின் உன்னால் உன்னால் பாடல் வரைக்கும் கிட்டத்தட்ட 32 படங்களில் இணைந்து வேலை பார்த்திருக்கிறார்கள். அதே போல் ஹரிஹரனுக்கு ஆஸ்தான பாடகி என்றால் அது சித்ராதான். இவரும் பம்பாய் படத்தின் உயிரே உயிரே பாடலில் ஆரம்பித்து சமீபத்தில் ரிலீஸான சீதா ராமம் படத்தின் தூதா பாடல் வரைக்கும் பாடியிருக்கிறார்.
ஹரிஹரனை ஒரு பாடகராக தெரிந்த பலருக்கும் அவர் ஒரு இசையமைப்பாளர் என்பது தெரியா என்று தெரியவில்லை. இவர் 80 -களிலிருந்தே இண்டிபெண்டண்ட் ஆல்பங்களை இசையமைத்து வருகிறார். 1996 ஆம் ஆண்டு இவரும் லெஸலீயும் சேர்ந்து இசையமைத்த க்ளோனியல் கசின்ஸ் என்கிற ஆல்பம் பயங்கர ஹிட்டானதால், இன்று வரைக்கும் க்ளோனியல் கசின்ஸ் என்ற ஆல்பத்தில் பெயரையே இவர்களது காம்போவின் பெயராக மாற்றி 5 ஆல்பங்களுக்கும் 2 தமிழ்ப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்கள். தமிழில் சரண் இயக்கிய மோதி விளையாடு மற்றும் ஆர்யா நடித்த சிக்கு புக்கு படங்களுக்கு இந்த இரட்டையர்தான் இசை.
ஹரிஹரன் படங்களில் பாடல்கள் பாடி நமக்கும் கொடுக்கும் மேஜிக்கல் அனுபவத்தைவிட லைவ்வாக மேடையில் பாடும் போது அப்படியான மேஜிக்கல் அனுபவங்கள் நிறைய கொடுப்பார். குறிப்பாக சில சம்பவங்களை மட்டும் இப்போ சொல்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் பாடுவதற்கு முன்பு, இந்தப் பாடலின் முதல் இரண்டு வரியை வேறு, வேறு விதமாக பாடி அசத்தியிருப்பார். அதேப்போல் ஏ.ஆர்.ரஹ்மானோடு ஒரு நிகழ்ச்சியில் பாடுவதற்கு முன், ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக சரிகமப-வை ரசிகர்களோடு சேர்ந்து வைப் பண்ணியிருப்பார். இளையராஜாவோடு ஒரு நிகழ்ச்சியில் காசி படத்தின் என் மன வானில் பாடலை ஜாம்மிங் செஷன் மாதிரி பண்ணியிருப்பார். இது மாதிரி பல சம்பவங்கள் சொல்லிட்டே போகலாம்.
Also Read – மனநிலை மல்லாக்க கிடக்குதா… `காக்கா கதை’ வைசாக் பாட்டுலாம் கேளுங்க!
ஹரிஹரன் பாடிய பல தமிழ் பாடல்கள் அந்தப் படங்கள் வந்த சமயத்தில் ஹிட்டானதோடு இல்லாமல் இன்றுவரைக்கும் பலரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்குனு சொல்லலாம். அப்படிப்பட்ட சில பாடல்களை மட்டும் இங்க குறிப்பிடலாம்னு நினைக்கிறேன். முத்து படத்தோட விடுகதையா, மின்சாரக்கனவு படத்துல வெண்ணிலவே, சூர்யவம்சம் படத்துல ரோஜாப்பூ, நேருக்கு நேர் படத்துல அவள் வருவாளா, மறுமலர்ச்சி படத்துல நன்றி சொல்ல உனக்கு, உயிரே படத்துல தக்க தையா, ஜோடி படத்துல ஒரு பொய்யாவது சொல், ஹே ராம் படத்துல நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி, உன்னை நினைத்து படத்துல யார் இந்த தேவதை, வேட்டையாடு விளையாடு படத்துல மஞ்சள் வெயில்னு இந்த லிஸ்ட் ரொம்பவே பெருசு. இதே மாதிரி ஹரிஹரன் பாடிய வேற எந்த பாடலை நீங்க தினமும் கேட்பீங்கனு மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.