செப்டிங் டேங்க் உயிரிழப்புகள் பற்றிய செய்தியை மாதத்திற்கு ஒரு முறையாவது நம் கண்ணில் படும். ஆனால் அப்படியான உயிரழப்புகளில் இதுவரை யாருமே தண்டிக்கப்பட்டதில்லை என்ற உண்மையை எடுத்துக் காண்பிக்கிறது ‘விட்னஸ்’ படம்.
செம்மஞ்சேரியைச் சேர்ந்த இந்திராணி தூய்மைப் பணியாளராக இருக்கிறார். அவருடைய மகன் பார்த்திபன் நீச்சல் வீரன். ஒரு நாள் வேலை முடித்து வீடு திரும்பும்போது மகன் வீட்டில் இல்லை. தேடத்தொடங்கியவருக்கு அவர் செஃப்டிக் டேங்கில் இறங்கியதால் விஷவாயு தாக்கி இறந்துவிட்டதாகச் சொல்கிறது காவல்துறை. ஆக்டிவிஸ்ட் பெத்துராஜ் உதவியுடன் வழக்கு தொடுக்கிறார். பார்த்திபன் இறந்த அதே அப்பார்ட்மெண்டைச் சேர்ந்த ஷ்ரத்தா சில ஆதாரங்கள் கொடுத்து உதவுகிறார். இறுதியில் பார்த்திபனை மலக்குழிக்குள் இறக்கிவிட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? இந்திராணிக்கு நீதி கிடைத்ததா என்பதே ‘விட்னஸ்’ படத்தின் கதை.
எந்த வித தயக்கமும் இல்லாமல் நிறைய உண்மைகளை வெளிப்படையாக பேசுகிறது விட்னஸ் படம். குறிப்பாக இத்தகைய அநீதிகளுக்குப் பின்னால் சாதிய ஏற்றத்தாழ்வுதான் காரணம் என்பதை வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடந்தால் காவல்துறை யார் பக்கம் நிற்கிறது, எளிய மக்களை எவ்வளவு அலட்சியமாக கருதுகிறார்கள், அடுத்தவர்களை கைகாட்டி எளிதாக தப்பித்துக்கொள்ளும்படி அரசு இயந்திரம் எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது என்பதை சமூகத்தின் கண்ணாடியாக அப்படியே பிரதிபலிக்கிறது ‘விட்னஸ்’!
Also Read – அடிவாங்குறதுக்குனே பா.ஜ.க-ல இருக்கவங்க இவங்கதான்!
வழக்கறிஞர் சிபி, ஷ்ரத்தாகிட்ட Manual Scavenging-அ ஏன் முழுசா ஒழிக்க முடியலைனு கேட்பார். அரசாங்கத்துகிட்ட அவ்வளவு காசு இல்லைனு சொல்ல முடியாது. அதே நேரம் இதுக்கு தீர்வு கண்டுபிடிக்கற அளவுக்கு அறிவியல் மேதைகளும் இருக்காங்க. அப்படி இருந்தும் ஏன் ஒழிக்க முடியலைனு விவாதம் போகும். அப்போ அந்த வழக்கறிஞர், ‘இதை ஒழிச்சே ஆகணும்ங்குற வைராக்கியம் அரசாங்கத்துக்கிட்ட இல்ல. அதுதான் காரணம்’ என்று சொல்வார். இதுதான் இந்தப் படம் சொல்ல விரும்பும் செய்தி. அந்த வைராக்யம் ஏன் இல்லை என்பதற்கு படத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார்கள். ஆர்கிடெக்டாக இருக்கும் ஷ்ரத்தா ஆட்டோமெட்டிக் Sewage cleaning இருப்பதுபோல ஒரு அபார்ட்மெண்டுக்கான பிளானை வடிவமைக்கிறார். ஆனால் அதெல்லாம் ஆடம்பரம் என்று ரிஜெக்ட் செய்கிறது அவர் வேலை பார்க்கும் நிறுவனம். குறிப்பாக யாருமே எதிர்பார்க்காத அந்த க்ளைமேக்ஸ் புதுமையாக இருந்தது.
ரோகினியும் மற்றவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படி ஒரு கதையை படமாக்க நினைத்த இயக்குநருக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துகள் மெதுவான திரைக்கதை, டாக்குமெண்டரி ஃபீலைக் கொடுக்கும் காட்சிகள் என சில விசயங்களில் இன்னும் கூடுதலாக மெனக்கெட்டிருக்கலாம். ஆனால் சொல்ல வந்த விசயத்தை எந்த சமரசமும் இல்லாமல் சொல்லிச் செல்லும் ‘விட்னஸ்’ திரைப்படம் விருதுகளை குவிக்கும் என்று நம்பலாம். டிசம்பர் 9 முதல் இந்தப் படத்தை சோனி லைவ்வில் பார்க்கலாம்.