ஓலா தொழிற்சாலை

Ola Factory: `10,000+ பெண்களுக்கு வேலை; உலகின் மிகப்பெரிய ஆல் வுமன் ஃபேக்டரி’ – ஓலா அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன?

கிருஷ்ணகிரி அருகே அமைந்திருக்கும் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் ஃபியூச்சர் ஃபேக்டரியில் 10,000-த்துக்கும் அதிகமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஓலா ஃப்யூச்சர் ஃபேக்டரி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 500 ஏக்கர் பரப்பளவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியைப் பொறுத்தவரை முதல் பேஸில் ஆண்டுக்கு 20 லட்சம் வாகனங்கள் என்றும், தொழிற்சாலை முழுமையாக இயங்கத் தொடங்கும்போது ஆண்டுக்கு ஒரு கோடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது ஓலா நிறுவனம்.

பாவிஷ் அகர்வால்
பாவிஷ் அகர்வால்

உலகின் மிகப்பெரிய ஆல் வுமன் ஃபேக்டரி

ஓலா நிறுவனத்தின் இந்தத் தொழிற்சாலையில் 10,000-த்துக்கும் அதிகமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அந்த நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால். இதுகுறித்து அவர், “ஓலா ஃபியூச்சர் ஃபேக்டரி முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் தொழிற்சாலை என்பதை அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். முதற்கட்டமாக தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டிருக்கும் பெண் தொழிலாளர்களை வரவேற்கிறேன். தொழிற்சாலை முழுமையாக இயங்கத் தொடங்கும்போது 10,000-த்துக்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அதன்மூலம், உலகின் மிகப்பெரிய ஆல்வுமன் ஃபேக்டரி என்ற பெருமையையும், உலக அளவில் பெண்களால் நடத்தப்படும் ஆட்டோமொபைல் உற்பத்தித் தொழிற்சாலை என்ற சாதனையையும் இது படைக்கும்.

ஓலா நிறுவனம் சார்பில் முன்னெடுக்கும் முயற்சிகளில் இது முதலாவது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய தொழிலாளர்கள் தரப்பை உருவாக்கவும், பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்கவும் இது உதவும். பெண்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை அளிப்பது அவர்களின் வாழ்க்கைத் தரத்தி மேம்படுத்துவது மட்டுமல்லாது அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் உதவும். பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பதால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 27% அளவுக்கு வளர்ச்சிபெற முடியும் என்கின்றன சில ஆய்வுகள். இதற்கு நம் எல்லோருடைய கூட்டுப் பங்களிப்பு அவசியம். குறிப்பாக, பெண்களின் பங்களிப்பு 12% என்ற அளவில் மிகவும் குறைவாக இருக்கும் ஆட்டோமொபைல் துறை முன்வர வேண்டும்” என்று பாவிஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார். முழுக்க முழுக்க பெண் தொழிலாளர்கள் பணிபுரிய இருக்கும் இந்தத் தொழிற்சாலையில் 3,000 ரோபோட்டுகளும் நிறுவப்பட இருக்கிறது.

ஓலா தொழிற்சாலை
ஓலா தொழிற்சாலை

எந்தெந்த வேலைகளில் பெண்கள் இருப்பார்கள்?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அசெம்ப்ளி லைன் முழுக்க முழுக்க இயந்திரங்களால் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது தவிர, புரடக்‌ஷன் அசிஸ்டெண்ட் தொடங்கி சூப்பர்வைசர் வரை பல்வேறு தொழில்நுட்பப் பணியிடங்களில் தமிழகம், அதைச்சுற்றியுள்ள மாநிலங்களைச் சேர்ந்த பெண்களே பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்று தெரிகிறது. `தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு வாகனங்களுக்கும் அவர்களே பொறுப்பு’ என்கிறது ஓலா நிறுவனம்.

கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலையில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான பெண்கள் வேலையைத் தொடங்கியிருக்கும் நிலையில், அவர்கள் அனைவரையும் டிரெய்னி என்ற அடிப்படையிலேயே வேலைக்கு எடுத்திருக்கிறது அந்த நிறுவனம். தொழிற்சாலையின் முழுநேர ஊழியர்களான பின்னர், மருத்துவக் காப்பீடு, பேறுகால விடுப்பு உள்ளிட்ட மற்ற சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படும் என்கிறது நிறுவனம். தொழிற்சாலைக்குள்ளும், அதைச் சுற்றியும் இருக்கும் காடுகள் பராமரிப்பிலும் பெண் ஊழியர்களையே நியமிக்க இருக்கிறார்கள். ஓலா நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ஓலா தொழிற்சாலை
ஓலா தொழிற்சாலை

முதல் தொழிற்சாலையா?

இந்தியாவில் முழுக்க முழுக்க பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் முதல் தொழிற்சாலையா ஓலா என்று கேட்டால். இல்லை என்பதுதான் பதில். இதற்கு முன்பாக, கோயம்புத்தூரில் வால்வ் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக முழுக்க பெண் தொழிலாளர்களைக் கொண்டே இயங்கி வருகிறது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் ஹரித்துவார் தொழிற்சாலை கடந்த 2014-ம் ஆண்டு முதலே 100% பெண் தொழிலாளர்களாலேயே இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் தொழிற்சாலைகள் எல்லாம் அளவில் சிறியவை. ஓலா போல் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களைக் கொண்டவை அல்ல. உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 12% என்ற அளவிலேயே இருக்கிறது. இதனாலேயே ஓலாவின் இந்த பிரமாண்ட முயற்சிக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பு குவிந்து வருகிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இதன் விற்பனை செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்: மாடல்கள் – விலை

2022 வாக்கில் உலகின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் 20% அதிகமான இடத்தைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்து ஓலா நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியிருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையில் S1 மற்றும் S1 Pro என்ற இரண்டு மாடல்களை ஓலா அறிமுகப்படுத்தியிருக்கிறது. ரூ.99,000, ரூ.1,29,000 என்ற எக்ஸ் ஷோரும் விலையில் ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்தியிருக்கிறது அந்த நிறுவனம்.

Ola S1

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்திய சந்தையில் ரூ.99,000 என்ற விலையில் பொஷிஷன் செய்யப்பட்டிருக்கும் ஓலாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது. 8.5 கிலோவாட் அதிகபட்ச திறனை வெளிப்படுத்தும் இந்த ஸ்கூட்டர் 2.9 கிலோவாட் பேட்டரியுடன் வருகிறது. ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் 121 பயணிக்க முடியும் என்கிறது ஓலா. தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிக ரேஞ்ச் கொண்ட ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்று. பிக்-அப்பைப் பொறுத்தவரை 0-40 கி.மீ 3.6 விநாடிகளிலுஇம் 0-60 கி.மீ 5 விநாடிகளிலும் எட்டலாம் என்கிறது ஓலா. இந்த வேரியண்டின் டாப் ஸ்பீட் 90 கி.மீ என்கிறது அந்த நிறுவனம். 10 நிறங்களில் வெளிவரும் இந்த வேரியண்டில் நார்மல், ஸ்போர்ட் என இரண்டு மோடுகளில் ஓட்ட முடியும்.

Ola S1 Pro

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

S1 வேரியண்டை விட சில கூடுதல் வசதி, திறனுடன் வெளிவரும் இந்த மாடலை ரூ.1,29,000 (எக்ஸ் ஷோரும்) என்ற விலையில் ஓலா அறிமுகப்படுத்தியிருக்கிறது. 181 ரேஞ்ச், 3.9 கிலோவாட் பேட்டரி, டாப் ஸ்பீடு 115 கி.மீ என்கிறது ஓலா. 0-40 கீ.மீ 3 விநாடிகளில் எட்டிவிடலாம் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த வேரியண்டில் நார்மல், ஸ்போர்ட், ஹைப்பர் என 3 மோடுகளில் டிரைவ் செய்ய வசதி இருக்கிறது.

Also Read – 2 விநாடிக்கு ஒரு வாகனம்; 10,000 வேலைவாய்ப்பு – ஓலாவின் கிருஷ்ணகிரி ஃபேக்டரியில் என்ன ஸ்பெஷல்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top