இந்தியாவின் முதல் Peoples Car – Maruti 800-ன் வரலாறு தெரியுமா?

இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டுக்கு புத்துயிர் கொடுத்த மாருதி 800 காருக்கும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியோட மகன் சஞ்சய் காந்திக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா? ஆரம்பத்துல 3 வருஷம் கூட வெயிட் பண்ணி இந்த காரை மக்கள் வாங்கிருக்காங்க… அது ஏன் தெரியுமா?.. 30 வருஷமா இந்திய சாலைகள்ல கெத்தா ஓடுன மாருதி 800 காரோட வரலாறைத்தான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

அது, 1983 டிசம்பர் மாசம். சென்னை சேப்பாக்கத்துல 30-வது சதத்தை அடிச்சு டான் பிராட்மேனோட 29 டெஸ்ட் சதங்கள்ங்குற சாதனையை சுனில் கவாஸ்கர் முறியடிச்சப்ப, குர்கான்ல இருக்க மாருதி உத்யோக் தொழிற்சாலை இந்தியாவோட பீப்புள்ஸ் கார்னு புகழப்படுற மாருதி 800 உற்பத்தில பிஸியா இருந்துச்சு.

சஞ்சய் காந்தி
சஞ்சய் காந்தி

1980-களுக்கு முன்னாடி இந்திய சாலைகள்ல ஓடுன கார்கள் எல்லாமே டிசைன்வைஸாவும் டெக்னிக்கலாவும் பல Decades பழைய கான்செப்ட் கார்கள்தான். அந்த நேரத்துல இந்திய மக்களுக்கு ஏத்தபடி கட்டுப்படியான விலையில ஒரு காம்பேக்ட் கார் வேணும்கிற ஐடியா எழத் தொடங்குச்சு. பீப்புள்ஸ் கார்-ங்குற டேக்கோட நடுத்தர மக்களுக்கான காரை உருவாக்கணும்ங்குற குரல் அழுத்தம் பெறத் தொடங்கியது சஞ்சய் காந்தியால்தான். அப்போது ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், இதற்காக மாருதி மோட்டார்ஸ் லிமிடெட் என்கிற நிறுவனத்தை 1971-ல் தொடங்கியது. அதன் முதல் எம்.டி சஞ்சய் காந்தி. 1977 எமெர்ஜென்சி முடியும்வரை காருக்கான டிசைன் உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அதன்பிறகு சஞ்சய் காந்தி விமான விபத்தி உயிரிழந்தார். 1980-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்த இந்திரா, அருண் நேருவை அழைத்து பீப்புள்ஸ் காருக்கான பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார். அதன்பின்னர், உலகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்களோடு மாருதி ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான பேச்சுவார்த்தை மற்றும் ஆய்வுகளை நடத்தியது. 1980-ல் இந்தியா சுற்றுப்பயணம் வந்திருந்த ஜப்பானின் சுசூகி நிறுவனத் தலைவருக்கு இந்தத் தகவல் தெரியவந்து, பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறார்.

மாருதி 800
மாருதி 800

அரசின் மாருதி உத்யோக் லிமிட்டெட் நிறுவனத்தோடு, 1982-ல் ஜப்பானின் சுசூகி நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஆரம்ப காலகட்டத்தில் ஜப்பானில் இருந்து முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்ட காராக இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், படிப்படியாக ஹரியானாவின் குர்கான் ஆலையில் மாருதி 800 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.  1983 டிசம்பர் 14 இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டின் முக்கியமான நாள். காம்பேக்டான, அதேநேரம் விலை குறைவான மாருதி 800 கார்களை ரூ.10,000 முன்பணம் கொடுத்து புக் செய்து கொள்ளலாம் என்கிற அறிவிப்பு, இந்தியா முழுவதும் தீயாகப் பரவியது. சுமார், 1,20,000 பேர் முன்பதி செய்த நிலையில், குலுக்கல் முறையில் மாருதி 800 காரின் முதல் ஓனராக டெல்லியைச் சேர்ந்த ஏர் இண்டியா ஊழியர் ஹர்பால் சிங் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். டெல்லியில் நடந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் இந்திரா காந்தி அவரிடம் கார் சாவியை வழங்கினார். ‘சாமானியர்களுக்கும் இந்த கார் சேவை செய்ய வேண்டும். இந்தியாவைக் கட்டமைப்பதில் இந்த கார் முக்கியமான பங்காற்றணும்’ – மாருதி 800 அறிமுக விழாவில் பிரதமர் இந்திரா காந்தி உணர்ச்சி மயமாக உதிர்த்த வார்த்தைகள் இவை.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

1979-ல் வெளியான சுசூகி ஆல்டோ காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது மாருதி 800. 1983 தொடங்கி 2014 வரை கிட்டத்தட்ட 29 லட்சம் மாருதி 800 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இவற்றில், 26 லட்சத்துக்கும் மேலான கார்கள் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. சுமார் 31 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்த இந்த கார், அம்பாசிடருக்கு அடுத்தபடியாக நீண்டகாலம் தயாரிப்பில் இருந்த கார் என்கிற பெருமையைப் பெற்றது. ஆரம்பத்தில் ரூ.47,500 என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி 800, 2014-ல் உற்பத்தியை நிறுத்தியபோது ரூ.2.1 லட்சம் என்கிற ஆரம்பவிலையில் விற்கப்பட்டது. சொந்த கார் வாங்க வேண்டும் என்கிற மிடில் கிளாஸ் மக்களின் ஆசையை நிறைவேற்றியதில் மாருதி 800 கார்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. MARUTI 800 SS80 தொடங்கி  MARUTI 800 4-SPEED MPFI வரையில் நான்கு ஜெனரேஷன் கார்கள் இந்தியாவில் விற்பனையில் இருந்தன. 2010-ல் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட BS IV விதிமுறைகள் காரணமாக மாருதி 800 கார்களை மெல்ல ஃபேஸ் அவுட் செய்ய மாருதி சுசூகி நிறுவனம் திட்டமிட்டது. 2014 ஜனவரி 18-ம் தேதியோடு மாருதி 800 கார்களின் உற்பத்தி மொத்தமாக நிறுத்தப்பட்டது. அறிமுகமாகி 27 ஆண்டுகளுக்குப் பிறகும், அதாவது 2010-ம் ஆண்டு வரை இந்தியாவில் அதிகம் சேல்ஸ் ஆகும் கார் என்கிற டேக் மாருதி 800 இடம்தான் இருந்தது. அதன்பின்னர், ஆல்டோ கார் அந்த இடத்தைப் பிடித்தது.

மாருதி 800 கார்ல உங்களுக்குப் பிடிச்ச அம்சம் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – ’வலிக்காம கொல்லுங்க சார்…’ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஏன் வீழ்ந்தது?

1 thought on “இந்தியாவின் முதல் Peoples Car – Maruti 800-ன் வரலாறு தெரியுமா?”

  1. ந.சரவணன்

    இந்த காரின் வெளித்தோற்றம் மற்றும் அது சாலைகளில் பயணிக்கும் போது தண்ணீரில் அண்ணம் நீந்தி போவது போல கண்கொள்ளாக்காட்சி…
    .இதன் அழகே அழகு பதுமை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top