கொரோனா இரண்டாவது அலை பொருளாதாரத்தை மிக மோசமாக பாதித்திருக்கிறது. பல இடங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட முக்கியமான துறைகளும் பின்னடவைச் சந்தித்திருக்கின்றன. பொருளாதாரம் மீள்வதற்கு ரியல் எஸ்டேட் துறை முக்கியம் ஏன்?
ரியல் எஸ்டேட் துறை
பின்னடவை சந்தித்திருக்கும் ரியல் எஸ்டேட் துறை மீள்வதற்கு ஒரு வாய்ப்பாக கொரோனா இரண்டாவது அலை குறைந்து வருவதைப் பார்க்கிறார்கள் நிபுணர்கள். ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை நாட்டின் முக்கியமான 8 நகரங்களில் புதிய வீடுகளின் விற்பனை ஏப்ரல் – ஜூன் காலாண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% சரிந்திருப்பதாகச் சொல்கிறது PropTiger என்ற புரோக்கரேஜ் நிறுவன ஆய்வு. அதேவேளையில், ஜனவரி – மார்ச் வரையிலான முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் இந்த வீழ்ச்சி 76% என்கிறார்கள். அந்த எட்டு முக்கிய நகரங்கள் – அகமதாபாத், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி தலைநகர் பகுதி மற்றும் புனே.
கொரோனா இரண்டாவது அலையால் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் வீடுகள் வாங்கலாம் என முடிவெடுத்திருந்த பல வாடிக்கையாளர்களையும் தங்களது முடிவை நிறுத்தி வைக்கச் செய்திருக்கிறது. மிகப்பெரிய அளவிலான வேலை இழப்பு, ஊதியம் குறைப்பு போன்றவையும் அவர்களின் வாங்கும் சக்தியைக் குறைத்திருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் ஓரளவுக்கு விற்பனையான வீடுகள் என்பது ரூ.45 லட்சம் வரையிலான விலை கொண்ட அஃபோர்டபிள் செக்மெண்ட் வீடுகள்தான் என்பது கட்டுமான நிறுவனங்கள் சொல்லும் தரவு. இதனால், புதிய கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதிலும் அந்த நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.
புதிய புராஜக்டுகளைத் தொடங்குவதில் ஆர்வம் குறைந்து வரும் நிலையில், ஏற்கெனவே கட்டிமுடிக்கப்பட்டு தயாராக இருக்கும் வீடுகள் விற்பனையும் மந்தமாகவே இருப்பதாகச் சொல்கிறார்கள். கொரோனா ஊரடங்கு சூழலிலும் இந்தியாவின் டாப் 7 நகரங்களில் கட்டுமான நிறுவனங்கள் சுமார் 36,260 வீடுகளை விற்பனைக்காக பட்டியலிட்டதாகச் சொல்கிறது ரியல் எஸ்டேட் கன்சல்டண்ட் நிறுவனமான Anarock. அதிகபட்சமாக ஹைதராபாத்தில் 8,850 வீடுகளும் மும்பையில் 6,880 வீடுகளும் பெங்களூரில் 6,690 வீடுகளும் 2021-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் லாஞ்ச் செய்யப்பட்டிருக்கின்றன. இதில், 24,570 வீடுகள் மட்டுமே விற்பனையாகியிருப்பதாகவும் அந்த நிறுவனம் சொல்கிறது. முந்தைய காலாண்டில் 58,290 வீடுகள் விற்பனையாதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 58% வீடு விற்பனை சரிந்திருக்கிறது.
பொருளாதாரம்
ரியல் எஸ்டேட் துறை மீண்டு வந்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக இருக்கும் என்பது நிபுணர்கள் கருத்து. பெரும்பாலானா மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. இதனால், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த வீடுகள் மட்டுமில்லாமல் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் எனப்படும் வணிக ரீதியிலான ரியல் எஸ்டேட்டில் முதலீடும் கணிசமான அளவு குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. Care Ratings ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் 2021 நிதியாண்டில் முந்தைய ஆண்டை விட கமர்ஷியல் ரியல் எஸ்டேட்டில் முதலீடு என்பது 31.7 மில்லியன் சதுர அடியாக, அதாவது 23% குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வொர்க் ஃப்ரம் ஹோம் மோடுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் மாறியிருப்பதால், புதிய அலுவலகங்கள் கட்டுவது அல்லது வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் குறைந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் துறை மெதுவாக பின்னடைவிலிருந்து எழுந்து வருவது நம்பிக்கையளிக்கும் டிரெண்டாக இருப்பதாகச் சொல்கிறார்கள். வொர்க் ஃப்ரம் ஹோம் சூழலால் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களில் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாலும் நகர்ப்புறங்களில் ரியல் எஸ்டேட் துறை அடிவாங்க முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
Also Read – தங்கத்தின் விலை ஏன் ஒவ்வொரு நகரத்துக்கும் மாறுபடுகிறது… எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?