“எளியவர்களுக்கு எல்லாமும்…” ஒரு கனவு… ஒரு வெற்றி… சாஷே புரட்சியின் கதை!

30 வருஷத்துக்கு முன்னாடி நான் பிறந்து வளந்த கிராமத்துல ஒரு அண்ணன் சைக்கிள்ல பின்னாடி ஒரு பெரிய டிரே கட்டிகிட்டு வருவாரு… அவர் 2 கிலோ மீட்டர் தள்ளி இருந்த இன்னொரு பெரிய ஊர்ல மளிகை கடை மாதிரி ஒன்னு வச்சிருந்தாரு… அவர் சைக்கிள் டிரேல சில பொருள்களைக் கொண்டு வந்து சுற்றுப்புற கிராமங்களில் விப்பாரு…  அடுத்து காலம் போகப் போக அவர் சைக்கிள் ஊருக்குள்ல வந்து விக்குறது குறைய ஆரம்பிச்சது… அவரோட மளிகை கடை மாதிரி இருந்ததை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்னு பேர் மாத்தினாரு… இப்போ அது சூப்பர் மார்கெட்டா இருக்கு… அந்த சைக்கிள்ல அவர் வித்த பொருள் என்ன தெரியுமா…? பொருளை விடுங்க, அந்த விற்பனைக்கு அவர் வச்ச பேர் ஒன்னு இருக்கு… அது “லூஸ்ல விக்குறது…”

அவரோட சைக்கிள் டிரேல, துணி சோப் பவுடர், சொட்டு நீலம், தேங்காய் எண்ணெய், ஷாம்பு இப்படி பல பொருள்களைக் கொண்டு வருவாரு…  அவர் விக்குறது எல்லாமே 5 ரூபாவுக்கு எண்ணெய், 1 ரூபாவுக்கு சோப் பவுடர், ஷாம்பு, 3 ரூபாவுக்கு சின்ன சோப் கட்டி இப்படித்தான் இருக்கும்.

பொருள்களை அளவுல விக்காம கம்மியான விலையில் இப்படித்தான் விற்பனையை அவர் செய்தாரு.
அந்தக் காலத்துல வந்த, 10 ரூபாய் மதிப்புள்ள ஒரு பெரிய லைஃப்பாய் சோப்புக்கட்டியை குறைந்தபட்சம் 100 துண்டுகளாகூட வெட்ட முடியும்… ஆனா, அதை 5 துண்டுகளாக மட்டும் வெட்டி ஒரு துண்டை 2 ரூபாய்க்கு விற்பாரு… இதான் லூஸ்ல விக்குறது.  தேங்காய் பத்தைனு ஒரு ஐட்டம் போனவாரம் கடைக்குப் போகும் போது இன்னமும் லூஸ்ல விக்குறதை பார்த்தேன். இப்படி லூஸ்ல நீங்க சமீபத்துல வாங்குன பொருள் என்னனு கமெண்ட் பண்ணுங்க…

ஏன் இந்த லூஸ்ல விக்குறது பிரபலமா இருந்ததுன்னா, கிராமப் பகுதிகளில் வருமாணம் குறைந்த சூழலில், தினக்கூலியாகவே, வாராந்திரக் கூலியாகவோ வாழ்பவர்களால் ஒரு பெருந்தொகையை கொடுத்து இந்த பொருள்களை மொத்தமா வாங்கி சேமிச்சு வைக்க முடியாது. அதுவே சின்ன தொகையை தேவைப்படும் போது செலவு செய்துக்கலாம்னா அது கொஞ்சம் சுலபமான வேலை. ஆனா, அவங்களுக்குத் தேவைப்படும் போது அந்தப் பொருள் கிடைக்கனும், இப்படி ஒரு பொருளை லூஸ்ல விக்கும் போது அதுல கலப்படங்கள் நடக்க வாய்ப்பிருக்கு, அந்தப் பொருள் தரமிழந்து போக வாய்ப்பிருக்கு இந்த மாதிரி பல சிக்கல்களும் இதுல இருக்கு… 

my secret plan to rule the world book
Photo by Ann H on Pexels.com

Startup கலாசாரத்துல சில தாரக மந்திரங்கள் இருக்கு… 

“பயன்படுத்துபவர்களுடைய பிரச்சினையை உங்களால் உறுதியா தீர்க்க முடியும்னா… நீங்க பாதி வெற்றியை அடைஞ்சுட்டதா அர்த்தம்”,

“உங்க வெற்றி மட்டுமே இலக்கு இல்லை, பயன்படுத்துபவர்களுடைய வெற்றியும்தான் இலக்கு”

“வெற்றி எப்போவும் தனியா வராது… கூடவே இன்னும் சில போட்டியாளர்களையும் கூட்டிட்டு வரும்…  அதற்கும் சேர்ந்து அப்கிரேட் ஆகணும்.”

அப்படி ஒருத்தர், இந்த ‘லூஸ்ல விக்குறது’ல இருந்த சில பிரச்சினைகளுக்குத் தன்னால் தீர்வு தர முடியும்னு நம்பினார்… தீர்வையும் தந்தார்… அவர் மட்டும் வெற்றியடையலை, வாடிக்கையாளர்களும் வெற்றி அடைஞ்சாங்க. கூடவே போட்டியாளர்களும் வந்தாங்க, அப்போவும் அசராம அப்கிரேட் ஆனார்…

Also read : Yahoo வீழ்ந்தது ஏன்… எங்கே சறுக்கியது அதன் பிஸினஸ்?

மேல சொன்ன இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு ஒருத்தர் கிட்ட இருந்தது. அது “சாஷேக்கள்”(sachets). கடலூர் பக்கத்துல கிராமப் பகுதி மக்களுக்கு டால்கம் பவுடர், எப்ஸம் உப்பு போன்றவற்றை சின்ன சின்ன பாக்கெட்டுகளில் அடைத்து விற்றார். சேமித்து வைப்பது, கலப்படத்தை தவிர்ப்பது, வாங்கக்கூடிய விலைனு அத்தனை பிரச்சினைகளுக்குமான தீர்வு அவரிடம் இருந்தது. அவர் யார்னு உங்களால சொல்ல முடியுமான்னு கேட்டா நிறைய பேர்… CavinKare நிறுவனத்தைச் சேர்ந்த C.K Rajkumar , C.K Ranganathan பெயர்களை சொல்லுவாங்க… சிக் ஷாம்பு சாஷேக்கள் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையும் சாஷேக்கள் பக்கம் கவனத்தை திரும்பவைத்தவர்கள்தான் அவர்கள்னு சொல்லலாம்… அது உண்மையும் கூட…

சின்னி கிருஷ்ணன் – சாஷே புரட்சியின் தந்தை

ஆனால், இந்த சாஷே புரட்சியில் இவங்களுக்கும் முன்னோடி ஒருத்தர் இருக்கார்… அவர்தான் சின்னி கிருஷ்ணன். மேலே சொன்ன C.K Rajkumar , C.K Ranganathan ஆகியோரின் தந்தை.  1970-களிலேயே கடலூரில் இந்த சாஷே புரட்சியை அவர் ஆரம்பித்து வைத்திருக்கிறார். விதை அவர் போட்டது… விருட்சமாக்கியது அவர் புதல்வர்கள்.

சின்னி கிருஷ்ணன்

சின்னி கிருஷ்ணனின் இந்த முயற்சிகளின் போது அவர் முதலில் யோசித்த ஒரு விஷயம், “நான் எந்த ஒரு பொருளையும் விற்க யோசிக்கும் போது அந்தப் பொருளை ஒரு கூலித் தொழிலாளியாலும் வாங்க முடியுமா” என்பது தான்.
முதலில் PVC பைப்களுக்கு சீல் வைக்கும் எந்திரத்தை தனக்கேற்றவாறு மாற்றியமைத்திருக்கிறார். மெல்லிய பிளாஸ்டிக் உறைகளில் நீரை நிரப்பி அந்த இயந்திரத்தின் மூலம் சாஷேக்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கிய சின்னி கிருஷ்ணனின் முதல் முயற்சி தோல்வி. மீண்டும் மீண்டும் பல கட்ட சோதனை முயற்சிகளுக்குப் பிறகு தேங்காய் எண்ணெய், தேன், ஷாம்பு, டால்கம் பவுடர், எப்சம் உப்பு போன்ற பொருள்களை சின்ன சின்ன சாஷேக்களில் மிகக்குறைந்த விலையில் கொண்டு வந்திருக்கிறார். இதையெல்லாம் அவர் செய்தது 50 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் போன்ற ஒரு சிறு நகரத்தில்.

தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் சின்னி கிருஷ்ணன் செய்த முயற்சிதான் சாஷேக்களின் புரட்சிக்கு முதல் அடி. இங்கிருந்து கிளம்பிய யோசனை ஒட்டு மொத்த இந்தியாவுக்குமானதாய் மாறி இந்திய வணிகத்தில் பல மில்லியன் டாலர் தொழிற்சாலையாக உருமாறி நிற்கிறது. இத்தனை கனவும் துவங்கியது “எளியவர்களுக்கும் எல்லாமும் போய்ச் சேர வேண்டும்” என்ற அவரின் யோசனையில்தான்.

சின்னி கிருஷ்ணன்
சின்னி கிருஷ்ணன்

Startup என்கிற வார்த்தை பரவலாக புழக்கத்துக்கு வருவதற்கு முன்பே அதன் தாரக மந்திரங்களை அடித்து நொறுக்கி வெற்றிக்கொடியை நாட்டியவர் சின்னி கிருஷ்ணன். இன்றைய Startup முயற்சியில் இறங்குவோருக்கு சின்னி கிருஷ்ணன் வாழ்க்கை சொல்வது ஒரு செய்திதான். “வாய்ப்பிருக்கும் இடத்தில் எல்லோம் எளியவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டடையுங்கள், வெற்றி தானாகவே வரும்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top