தங்கம்

புதிய ஹால்மார்க் முத்திரை விதியில் என்ன பிரச்னை… தங்க நகைக் கடைக்காரர்கள் எதிர்ப்பது ஏன்?

மத்திய அரசின் புதிய ஹால்மார்க் விதிகள் அமல்படுத்தப்பட்டிருப்பது எதிர்ப்புத் தெரிவித்து இரண்டரை மணி நேர அடையாள கடையடைப்புப் போராட்டம் நடத்தியிருக்கிறார் தங்க நகைக் கடை உரிமையாளர்கள். புதிய விதிகளில் என்ன பிரச்னை… நகைக்கடை உரிமையாளர்கள் அதை எதிர்ப்பது ஏன்?

ஹால்மார்க் முத்திரை

ஹால்மார்க்
ஹால்மார்க்

தங்க நகைகளின் சுத்தத்தைக் குறிக்க அவற்றில் ஹால்மார்க் முத்திரை பதிப்பார்கள். இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) ஹால்மார்க் முத்திரை பதிப்பது கட்டாயமாக்கப்படாமல் இருந்தது. ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட நகைகளை மக்கள் நம்பிக்கையுடன் வாங்கினர். இந்தநிலையில், ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய விதியை மத்திய அரசு கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் படிப்படியாக அமல்படுத்தியது. முதற்கட்டமாக நாடு முழுவதும் இருக்கும் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 258 மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. நகைக்கடைகளில் விற்கப்படும் அனைத்து நகைகளிலும் 6 இலக்க தனி ஹால்மார்க் அடையாள எண் (HUID) பொறிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு ஹால்மார்க் ஐ.டி இல்லாமல் நகைகளை விற்றால் நகைக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட இருக்கிறது.

நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பது ஏன்?

தங்க நகைகளைப் பொறுத்தவரை பெரிய கடைகள் ஏற்கனவே ஹால்மார்க் முத்திரையைப் பயன்படுத்தி வருகின்றன. தங்கத்தின் தரத்தை உறுதி செய்யும் ஹால்மார்க் முத்திரையை வரவேற்கும் நகைக்கடை உரிமையாளர்கள், தனி ஹால்மார்க் அடையாள எண் (HUID) கொண்டுவரப்படுவதையே எதிர்ப்பதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்து பேசிய சென்னை நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் உதய் உம்மிடி, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி ஆகியோர், “ஹால்மார்க் பிரச்னையில்லை. தனி ஹால்மார்க் அடையாள எண்ணைக் கொண்டுவர வேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையம் எடுத்த தன்னிச்சையான முடிவையே எதிர்க்கிறோம். இதன்மூலம் தங்க நகையை யார் வாங்குகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன என்பதைக் கண்காணிப்பார்கள். இந்திய தர நிர்ணய ஆணையம் நகைகளின் தரத்தைப் பார்ப்பதை விட்டுவிட்டு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தேவையற்றது’’ என்றனர்.

சென்னை நகை வியாபாரிகள் சங்கம்
சென்னை நகை வியாபாரிகள் சங்கம்

அதேபோல், `ஹால்மார்க் தனி அடையாள எண்ணைப் பெற காத்திருப்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு வர குறைந்தது 5 முதல் 10 நாட்கள் தாமதம் ஏற்படும். புதிய விதிமுறையால் தங்கத்தின் விலையும் கடுமையாக உயரும்’ என்பது நகைக்கடை உரிமையாளர்களின் வாதம்.

அரசு என்ன சொல்கிறது?

இந்திய தர நிர்ணய ஆணையம்
இந்திய தர நிர்ணய ஆணையம்

நகைகள் ஒவ்வொன்றிலும் தனி ஹால்மார்க் முத்திரை எண் இருப்பதால், நுகர்வோருக்குப் பாதுகாப்பு என்பதுடன் அரசுக்கு முறையாக வரி வருவாய் சென்றடையும். கடத்தல் தங்கம் தவிர்க்கப்பட்டு, தேசவிரோத செயல்களுக்காக தங்கம் பயன்படுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்படும். நகை விவரங்கள் பி.ஐ.எஸ் இணையதளத்தில் இடம்பெறுவதால், தங்கம் விற்பவர், அதன் தரம், வாங்குவோர் என வரலாறு அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். தங்க நகை அனைத்திலும் லோகோ, காரட் தரம், எச்.யூ.ஐ.டி முத்திரை எண் இடம்பெறுவதால் நுகர்வோருக்கு வாங்குவதற்கு சரியான ஆவணம் கிடைக்கிறது. விற்பனையாளர்களும் ஜி.எஸ்.டி, வருமான வரி போன்றவற்றை நேர்மையாகக் கையாள முடியும் என்பதே இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் வைக்கும் வாதம். அடையாள போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்கிறார்கள் நகைக்கடை உரிமையாளர்கள்.

Also Read – கோல்டு பாண்டை விட விலை குறைவு… தங்கம் வாங்க இது சரியான நேரமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top