ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற திருச்சி நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் படுகொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். என்ன நடந்தது?
ஆடு திருட்டு
திருச்சி நவல்பட்டு காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக ஆடு திருட்டு தொடர்பாக புகார்கள் அதிகம் வந்திருக்கின்றன. இதையடுத்து, அப்பகுதிகளில் போலீஸார் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தினர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் ஏட்டு சித்திரைவேல் ஆகியோர் திருவெறும்பூரை அடுத்த சின்ன சூரியூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரு சக்கர வாகனங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் ஆடு ஒன்று வைத்திருந்ததையும் பார்த்திருக்கிறார்கள். இதையடுத்து, அவர்கள் வண்டிகளை நிறுத்தி சோதனையிட முயன்றிருக்கிறார்கள். ஆனால், இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்தாமல் செல்லவே, போலீஸார் இருவரும் அவர்களை துரத்தியிருக்கிறார்கள்.

வேகமாகச் சென்ற அவர்களது வாகனத்தைத் துரத்த முடியாமல் ஏட்டு சித்திரைவேல் வழிதவறியிருக்கிறார். ஆனால், எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் அவர்களைத் தொடர்ந்து 15 கி.மீ தூரம் விரட்டிச் சென்றிருக்கிறார். திருச்சி மாவட்ட எல்லையைத் தாண்டி புதுக்கோட்டை எல்லைக்குள் நுழைந்த அவர்கள், கீரனூர் அருகே திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் 54-ஏ ரயில்வே சுரங்கப் பாதையில் நீர் தேங்கியிருந்தால் தப்ப முடியவில்லை. இதையடுத்து, அவர்களைத் தனியாளாகப் பிடித்த எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் சித்திரைவேலுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். மேலும், கீரனூர் பகுதியில் வசிக்கும் மற்றொரு எஸ்.எஸ்.ஐ-யான சேகருக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். சேகர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் தலையில் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடந்திருக்கிறார். இதையடுத்து, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் விசாரணை
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி டிஐஜி சரவண சுந்தர், திருச்சி எஸ்.பி சுஜித் குமார், காவல் ஆணயர் கார்த்திகேயன், புதுக்கோட்டை எஸ்.பி நிஷா பார்த்திபன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த நீரில் தூக்கி எறியப்பட்ட எஸ்.எஸ்.ஐ பூமிநாதனின் செல்போன், வாக்கி டாக்கி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதுதொடர்பாக கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆடு திருட்டு தொடர்பாக பழைய குற்றவாளிகள் 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஒரு கோடி ரூபாய் நிதியுதவி
ஆடு திருடும் கும்பலாம் எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்தார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்தார். திருச்சி சோழமா நகரில் குடும்பத்துடன் வசித்துவந்த எஸ்.எஸ்.ஐ பூமிநாதன், நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியை அடுத்த சந்தைவெளி கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு கீதா என்ற மனைவியும் குகன் என்ற மகனும் இருக்கிறார்கள். அவரது உடல் திருச்சி சோழமா நகரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நான்கு பேர் கைது
பூமிநாதன் கொலை தொடர்பாக 4 பேரைக் கைது செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். கொலை நடந்த பகுதியில் பதிவான செல்போன் உரையாடல்கள், ஆடு திருடும் கும்பலை பூமிநாதன் விரட்டிச் சென்ற பாதையில் இருந்த சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய போலீஸார், இரண்டு சிறுவர்கள் உள்பட 4 பேரைக் கைது செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களில் 19 வயதான மணிகண்டன் என்பவரும் ஒருவர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள், ஆடு திருடப் பயன்படுத்திய இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் புதுக்கோட்டை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
0 Comments