தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வசிக்கும் சித்தரஞ்சன் சாலையில் தீக்குளித்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை 10மணியளவில் சென்னை சித்தரஞ்சன் சாலை பகுதியில் நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிளாஸ்டிக் கேனில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு திடீரென தீ குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அமைச்சர் நலம் விசாரிப்பு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த நபருக்கு 40% அளவுக்குத் தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீக்காயமடைந்த அந்த நபரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தீக்குளித்தவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஜமீன் தேவர்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் என்பது தெரியவந்தது.
இவர், தமிழ்நாடு பறையர் பேரவை என்கிற அமைப்பின் தலைவராக இருந்து வருவதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் ஜமீன் தேவர்குளம் பகுதியில் போட்டியிட வெற்றிமாறன் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலரின் தூண்டுதலால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்த வெற்றிமாறன் தென்காசியில் இருந்து சென்னை வந்து, முதலமைச்சரின் இல்லம் இல்லம் இருக்கும் சித்தரஞ்சன் சாலையில் நியாயம் கேட்டு தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் போலீஸார் நடத்திய விசாரணையில் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் திருப்புமுனையாக, கோவில்பட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் எழுந்துள்ளது.
Also Read – வாடிக்கையாளர்களே உஷார் – அக்டோபர் 1 முதல் காலாவதியாகும் 3 வங்கிகளின் காசோலைகள்!
0 Comments