பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஜேஎம் பைனான்சியல் அசெட் ரிகன்ஸ்ட்ரக் ஷன் உள்ளிட்ட பல வங்கிகளில் விஜய் மல்லையா சுமார் ரூபாய் 9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். அவர்மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து விசாரணைகளை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கிலாந்து அரசு அவரைக் கைது செய்துள்ளது.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அவரது சொத்துகளை முடக்க இங்கிலாந்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவருக்கு எதிராக பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரிக்ஸ், மல்லையா கடன்களை முழுமையாக மற்றும் நியாயமாக செலுத்துவார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் அவரை திவாலானவர் என்று அறிவித்தார். “இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உண்மையான காரணங்கள் எதுவும் இல்லாததால் மேல் முறையீட்டுக்கு அனுமதி கோரும் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று ப்ரிக்ஸ் தெரிவித்தார். இதனால், மல்லையா நிதி தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள மல்லையாவின் சொத்துக்களும் முடக்கப்படுகின்றன.

இங்கிலாந்து நீதிமன்ற அறிவிப்புகளைத் தொடர்ந்து மல்லையாவின் வங்கிக் கணக்குகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் முடக்கப்படுவதால் ரூபாய் 50,000-க்கு மேல் அவரால் கடன் வாங்கவும் முடியாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி புதிய நிறுவனங்களை உருவாக்கவும் முடியாது. மல்லையாவின் சொத்துகளை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், மல்லையாவின் சொத்துகளை முடக்கி கடன் தொகையை மீட்க வங்கிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. வங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. எனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாகவும் மல்லையா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Also Read : தேர்தலில் தி.மு.க-வினரே எனக்கு எதிராகச் செயல்பட்டார்கள்… துரைமுருகன் பேசியதன் பின்னணி?
0 Comments