பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் 1,300 கோடி ரூபாய் அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஸி, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் நாள்களை டொமினிகா குடியரசில் எண்ணிக்கொண்டிருக்கிறார். என்ன நடந்தது?
மும்பையைச் சேர்ந்த மெகுல் சோக்ஸி பிறந்ததே செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில்தான். நாடு முழுவதும் 4,000-த்துக்கும் மேற்பட்ட கிளைகளைப் பரப்பியிருந்த கீதாஞ்சலி என்ற நகைக்கடையின் உரிமையாளரான மெகுல் சோக்ஸி, வங்கிக் கடன் மோசடியில் தேடப்படும் மற்றொரு நபரான நீரவ் மோடிக்கு தாய் வழி மாமன் உறவுமுறை கொண்டவர். மெகுல் சோக்ஸிக்கு சிக்கல் தொடங்கிய 2013ம் ஆண்டு முதல்தான். அப்போது பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதுடன், வழக்கும் பதியப்பட்டது. அந்த வழக்கில் கைதாகாமல் தப்பிவந்த அவர், 2018ம் ஆண்டு பி.என்.பி வங்கிக் கடன் மோசடியில் சிக்கினார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி
பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்பாக 1,300 கோடி ரூபாய் அளவுக்கு கடன் மோசடி செய்திருப்பது 2018ம் ஆண்டு மார்ச்சில் பணமோசடிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மெகுல் சோக்ஸி, நீரவ் மோடி உள்ளிட்டோருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் விதித்தது. ஆனால், அதற்கு 2 மாதங்கள் முன்பாகவே, அதாவது 2018 ஜனவரி 7-ம் தேதியெ அவர் இந்தியாவை விட்டு வெளியேறி ஆன்டிகுவா – பார்படாஸில் தஞ்சமடைந்திருந்தார். அவர் இந்தியாவை விட்டு வெளியேறிய ஒரு சில நாட்களில் பி.என்.பி வங்கிக் கடன் மோசடி குறித்த தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக கீதாஞ்சலி நிறுவனத்தின் துணைத் தலைவரும் சோக்ஸியின் நம்பிக்கைக்குரியவருமான விபுல் சைதாலியாவைக் கைது செய்தது சிபிஐ. அதேபோல், சோக்ஸி மற்றும் நீரவ் மோடியின் பணியாளர்கள் 6 பேர், பி.என்.பி வங்கி ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தன்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை, அவை அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையே என மெகுல் சோக்ஸி தொடர்ந்து கூறிவந்தார்.
மும்பையில் அவருக்குச் சொந்தமான 15 ஃபிளாட்டுகள், 17 அலுவலகங்கள், கொல்கத்தாவில் இருக்கும் ஷாப்பிங் மால், அலிபாகில் இருக்கும் 4 ஏக்கர் ஃபார்ம் ஹவுஸ் மற்றும் நாசிக், நாக்பூர், மகாராஷ்டிராவின் பன்வால், தமிழகத்தின் விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் 231 ஏக்கர் நிலங்களையும் விசாரணை அமைப்புகள் கைப்பற்றி, சீல் வைத்தன.
மெகுல் சோக்ஸி கடத்தல்
ஆன்டிகுவா சிட்டிசன்சிப் வைத்திருந்த காரணத்தால் அந்த நாட்டில் செட்டிலான சோக்ஸியை இந்தியாவுக்குக் கொண்டுவர சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தன. இந்தநிலையில், கடந்த மே 23-ம் தேதி ஆன்டிகுவாவில் இருந்து சோக்ஸி மாயமானதாக அவரது வழக்கறிஞர் ஒரு தகவலை ஊடகங்களில் தெரிவித்தார். மே 23-ம் தேதி மாலை 5.15 அளவில் வீட்டில் இருந்து காரில் வெளியே கிளம்பியவரை அதன்பின்னர் யாராலும் பார்க்க முடியவில்லை. அந்த காரை போலீஸார் ஜாலி ஹார்பர் பகுதியில் இருந்து மீட்டனர். அவரைக் கண்டுபிடிக்க விசாரணையை முடுக்கிவிட்டது ஆன்டிகுவா அரசு. அதேநேரம், அவர் கியூபாவுக்குத் தப்பியோடியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து மூன்று நாள்கள் கழித்து மே 26-ம் தேதி கரீபிய நாடான டொமினிகாவில் மெகுல் சோக்ஸி கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயன்ற அவரைக் கைது செய்ததாக லோக்கல் போலீஸார் கூறினார்கள். இது அவரை நாடு கடத்துவதற்காக ஆன்டிகுவா கோர்ட்டில் சிபிஐ நடத்தும் வழக்கு விசாரணையில் இந்தியாவின் கருத்துக்கு வலுசேர்த்தது. ஆனால், அவரது வழக்கறிஞர் சொல்லும் கதையே வேறுவிதமானது. இந்தியர் என்று நம்பப்படும் ஒருவர் ஆன்டிகுவாவில் இருந்து சோக்ஸியைக் கடத்தி படகில் டொமினிகா கொண்டுவந்ததாகவும் குற்றம்சாட்டுகிறார். தற்போது டொமினிகா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் இருக்கும் மெகுல் சோக்ஸியை நாடு கடத்த அந்நாட்டு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. அதேபோல், ஆன்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்ஸியுடன் பெண் ஒருவர் தினசரி நடைபயிற்சியின்போது பழகியதாகவும், அவர்தான் இந்தக் கடத்தலின் முக்கியப்புள்ளி என்றும் சோக்ஸியின் வழக்கறிஞர் சொல்கிறார். மேலும், மருத்துவமனையில் சோக்ஸியைச் சந்தித்தப்போது முகத்தில் அவருக்குப் பல இடங்களில் காயம் இருந்ததாகவும், கண்கள் வீங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மெகுல் சோக்ஸி நாடு கடத்தப்படக் கூடாது என டொமினிகாவின் எதிர்க்கட்சியான யூனியன் வொர்க்கர்ஸ் பார்ட்டியும், ஆன்டிகுவா மற்றும் பார்படாஸின் எதிர்க்கட்சியான யுனைட்டெட் புராகரஸிவ் அலையன்ஸும் வலியுறுத்தி வருகின்றன. கட்சிக்கு நன்கொடை அதிக அளவில் கிடைக்கும் என்ற நோக்கத்திலேயே மெகுல் சோக்ஸிக்கு அந்தக் கட்சிகள் ஆதரவளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Also Read – பிரதமராக 7 ஆண்டுகள் நிறைவு… மோடி பற்றிய 7 சுவாரஸ்யத் தகவல்கள்!