தமிழ் சினிமால இருக்குற ரொம்பவே யூனிக்கான டைரக்டர்கள்ல பாலாவும் ஒருத்தர். இந்திய சினிமால இன்னைக்கு முக்கியமான ஆளா இருக்குற அனுராக் காஷ்யப், “இந்திய சினிமால பாலா மிகவும் முக்கியமான இயக்குநர். அவர் பண்ண படங்கள் ரொம்பவே என்னை பாதிச்சுது. சேது, நான் கடவுள், பரதேசினு அவர் எடுத்த எதார்த்த மக்களுக்கான சிறந்த படங்களை சொல்லிட்டே போகலாம். நான் கடவுள் பார்த்துட்டு, என் ஊரை ரொம்ப அழகா எடுத்துருக்காருனு. கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் எடுத்தேன். அதுக்காக நன்றியும் தெரிவிச்சேன்”னு நெகிழ்ந்து பேசியிருப்பாரு. பாலாவோட தாக்கத்துல சினிமாவுக்கு வந்த இயக்குநர்களோட எண்ணிக்கை ரொம்பவே அதிகம். சரி, பாலா படங்கள் நமக்குலாம் ரொம்பவே புடிக்கும். ஆனால், இந்த 4 விஷயங்கள் இல்லாமல் பாலா படமே இல்லைத் தெரியுமா? அதைப் பத்திதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

அதீத வன்முறை!
பொதுவாக பாலா படத்துல வர்ற சண்டை காட்சிகள் தத்ரூபமா இருக்கும், சினிமாத்தனம் இல்லாம, அடிச்சா டமால் டுமீல்னு சத்தம் இல்லாம நிஜமாவே அடிக்கிறது மாதிரி இருக்கும். ஆனா மொத்தமா பார்த்தா வன்முறைக்கு வன்முறைதான் தீர்வுனு ஒரு கருத்து உள்ளே மறைஞ்சிருக்கும்.
தனது அறிமுக படமான சேதுல பெரிய சண்டைகாரன்ங்குற தகுதியை வச்சிக்குற நாயகனின் காதல், அதன் இழப்புனு வன்முறை கொஞ்சம் குறைவாக இருந்தது. ஆனா, இரண்டாவது படமான நந்தாவுல வன்முறைல டாப்கியர் போட்டு டிராவல் பண்ணினார் பாலா. அப்பனை கோபத்தால் கொல்லுற மகன், ஈழத்தமிழர்களுக்கு உதவுபவருக்கு உதவுறதா ஒரு சித்தரிப்பு, வன்முறைதான் தீர்வு ‘கொன்றவனை கொல்’ங்குற மந்திரத்தை எடுத்து சொன்னார் பாலா. உண்மையில ஈழ தமிழர்க்கு அது எந்த சேதியும் இல்லை. பிதாமகன்ல குரல்வளையைக் கடிக்கிறதுங்குறது பாலா எடுத்து வச்சது வன்முறையின் உச்சமாவே இருக்கும். நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரைதப்பட்டைனு வரிசையா சினிமாக்கள்ல அடிக்கு அடி, ரத்தத்துக்கு ரத்தம், கொலைக்கு கொலைனு ஒரு பாடமே எடுத்திருப்பார் பாலா.
அவர் தேர்ந்தெடுக்குற களம் எல்லாம் சிறப்பானது, இன்னும் சொல்லப்போனா யாருமே தொட நினைக்காத கதைக்களம். ஆனா பிரச்னைகளுக்கு தீர்வா வன்முறையை முன்வைக்கிறார். சமூக அவலங்களைப் பார்க்கிற ஒவ்வொருவர் மனசுலேயும் வன்முறை ஒளிஞ்சுகிட்டுதான் இருக்கு. ஆனா எப்போவுமே அது தீர்வுக்கு வழிவகுக்காது.

அப்நார்மல் கேரெக்டர்ஸ்!
பாலாவின் மையப் பாத்திரங்களோட நம்பகத்தன்மை அசாதாரணமானது. தமிழ் சினிமாவுல இதுவரையிலும் அலசிப்பார்க்காதது. மனநோயாளி விடுதி சேது, தகப்பனைக் கொலை செய்யும் நந்தா, சுடுகாட்டில் இருக்கும் பிதாமகன், அகோரி நான்கடவுள் ஆர்யா, வெகுளியான அவன்-இவன் ஆர்யா-விஷால் கேரெக்டர்கள், பரதேசியில அப்பாவியான ஹீரோ, தாரைதப்பட்டையில விரக்தியான ஹீரோ, நந்தாவுல மகனை விஷம் வச்சு கொல்லுற தாய், பிதாமகன்ல ஏமாற்றுக்காரனைக் காதலிக்குற கல்லூரி மாணவி, அவன் இவன் பட அம்மாக்கள், முட்டாளா சித்தரிக்கப்படுற காவல்துறை அதிகாரிகள், காதலனுக்காக விரும்பாதவரை திருமணம் செய்யுற ஹீரோயின் உள்பட பல கதாபாத்திரங்களும், அவங்களைச் சுத்துன சம்பவங்களும் நம்பகத்தன்மை இல்லாம அமைஞ்சிருக்கும். பாலாவோட கதாபாத்திரங்கள் எப்போவுமே தமிழ் சினிமாவுக்குப் புதுசுதான். விளிம்பு நிலை மக்களோட வாழ்க்கை ஒட்டியே பல கதைகள் பாலாவால படைக்கப்பட்டிருக்கும்.
கதைக்குள் வாழ்க்கை!

பாலா தேர்ந்தெடுக்குற எல்லா கதைக்குள்ளயும் ஒரு குறிப்பிட்ட மக்களோட வாழ்க்கை இருக்கும். ஒரு குறிப்பிட்ட மக்களோட வாழ்க்கையைத்தான் கதைக்களமாவே கையில் எடுக்குறாரு. தன்னோட முதல் படமான சேதுவுல கல்லூரி வாழ்க்கை இருக்கும். அங்க நடக்குற நக்கல், நையாண்டி, காதல் எல்லாம் சொல்லியிருப்பாரு. அப்படியே மனநலம் பாதிக்கப்பட்டவங்களை இந்த சமூகம் எப்படி பார்க்குது. அவங்க வாழ்க்கை எப்படி இருக்குதுனும் காட்டியிருப்பாரு. நந்தா படத்துல ஜெயில்ல இருந்து வந்தவனை சமூகம், குடும்பம் எப்படி பார்க்குதுனு காமிச்சிருப்பாரு. அதேமாதிரி இலங்கைல இருந்து புலம்பெயர்ந்து வந்தவங்களோட கதையையும் கொஞ்சம் சொல்லியிருப்பாரு. மக்களை ஏமாத்தி பிழைக்கிறவனோட வாழ்க்கையையும் பிணங்களை எரிக்கிறவனோட வாழ்க்கையையும் பிதாமகன்ல சொல்லியிருப்பாரு.
நான் கடவுள் படத்துல அகோரிகளின் வாழ்க்கையை, பிச்சை எடுக்குறவங்களோட வாழ்க்கையை சொல்லியிருப்பாரு. அவன் இவன்ல திருடங்களோட வாழ்க்கையை சொல்லியிருப்பாரு. பரதேசில தேயிலை தோட்டத்துக்கு கொத்தடிமைகளாக போனவங்களோட வாழ்க்கையை காட்டியிருப்பாரு. தாரை தப்பட்டைல நாட்டுப்புற கலைஞர்களோட வாழ்க்கை, பாலியல் தொழில்னு ஒண்ணு இருக்குல அதையும் அந்தப் படத்துல சொல்லியிருப்பாரு. மைனர் பொண்ணை சுத்தி நடக்குற கதையா நாச்சியாரை உருவாக்கியிருப்பாரு. இப்படி பாலாவோட கதைக்களம் அதிகம் பேசப்படாத, கவனிக்கப்படாத எளிய மனிதர்களின் வாழ்க்கையை சுற்றி மட்டும்தான் இருக்கும். அதுல நிறைய விமர்சனங்கள் நமக்கு இருந்தாலும் அந்த மனிதர்களை கவனிக்க வைக்கிறதே பெரிய விஷயம்தான. இப்படி எல்லாக் கதைலயும் பாலா சொல்ற வாழ்க்கை முக்கியமானது.
கொஞ்சம் சீரியஸா போகுதுல… சரி, பாலாவோட கிளைமேக்ஸ் பத்தி சொன்னா மஜா ஆயிடுவீங்க!
கொலவெறி கிளைமேக்ஸ்!

பாலா படத்துல வர்ற கிளைமேக்ஸ்ல காத கடிக்கிறது, கழுத்தைக் கடிக்கிறதுனு கொண்டு கொலையறுத்து வைப்பாரு. 10 வயசுக்கு கீழ இருக்குறவங்க, பிரக்னண்ட் லேடீஸ், இதயம் பலவீனமானவங்க, வயசானவங்க – இவங்க யாருமே பாலா படத்தோட கிளைமேக்ஸை தாங்க மாட்டாங்க. கொஞ்சம் சாஃப்ட்டான கிளைமேக்ஸ் சேது படத்துலதான் வரும். தன்னோட காதலி இறந்துட்டானு தெரிஞ்சதும் அதைப் பார்த்துட்டு அப்படியே நடந்துபோவாரு. அதனால வர்ற ஃபீலிங்ஸ் வேற டிப்பார்ட்மெண்ட். மத்த படத்துல வர்ற மாதிரி கொலவெறி புடிச்ச மாதிரிலாம் இருக்காது. அதேமாதிரி நந்தா படத்துல அவங்க அம்மாவே சோத்துல விஷத்தை வைச்சு கொண்ட்ருவாங்க. பெத்த மகனையே கொன்னுட்டாங்களேனு நினைக்க தோணும். அப்புறம் பரதேசி படத்துல ஹீரோயின், ஹீரோ இருக்குற இடத்துக்கே வந்துருவாங்க. நீ எதுக்கு இங்க வந்த. போச்சுப் போனு நினைக்க தோணும்.
நாச்சியார்லயும் கொடூரமான கிளைமேக்ஸ்லாம் இருக்காது. ஆனால், அடுத்து வர்றதுதான் த்ரில்லிங்கான இடம். பிதாமகன்ல சூர்யாவை கொடூரமா கொல்லுவாங்க. அதைப் பார்த்து விக்ரம், வில்லனை அடிக்கிற ஒவ்வொரு அடிலயும் நம்ம உடம்பு நடுங்கும். காலை உடைக்கிறது. துணி துவைக்கிற மாதிரி அடிக்கிறதுனு மொத்த வன்மமும் இருக்கும். எந்தப் படத்துலயும் நடக்காத ஒண்ணு இந்தப் படத்துல நடந்துது. அதாங்க ஹீரோயினை ஹீரோ கொல்றது. ராஜேந்திரனை அடிச்சுக் கொல்றது, பூஜாவைக் கொல்றதுனு படமே ரத்தக்களறியா இருக்கும். அவன் இவன்ல ஐனாஸ மாட்டுக்கூட்டத்துல வைச்சு கொல்றதுலாம் உச்சக்கட்ட கொடூரம். எல்லாப் படத்தையும்விட ஹைலைட்னா அது தாரை தப்பட்டை கிளைமேக்ஸ்தான். சகிக்க முடியாது. பிரசவம் பார்க்குற சீன், சுரேஷை கம்பெடுத்து சசிக்குமார் குத்திக் கொல்ற சீன்லாம் என்ன இவ்ளோ வெறிப்புடிச்சு பண்ணியிருக்காருனு தோணும். சூர்யா 41 கிளைமேக்ஸ் எப்படி இருக்கப்போகுதோ?!
சரி, பாலா படங்கள்ல உங்களுக்குப் புடிச்ச சீன் ஒண்ணு சொல்லுங்க பார்ப்போம்!
Also Read: என்னங்க சொல்றீங்க… இந்த கமல்ஹாசன் படங்களெல்லாம் இன்ஸ்பிரேஷனா?!
0 Comments