சிம்ரன். தமிழ் சினிமா கண்ட கதாநாயகிகளில் தனித்துவமானவர். ஒரே வருடத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக மெச்சூர்டான மனைவி ரோலிலும் அவரால் நடிக்க முடியும், அதே ஆண்டிலேயே அஜித்துக்கு ஜோடியாக இளமை ததும்பும் ரோலிலும் அவரால் நடிக்கமுடியும். பாத்திரம் எதுவானாலும் அதற்குரிய மெனக்கெடல்கள் எதையும் அலட்டல்கள் இல்லாமல் தன் நடிப்பால் வெளிப்படுத்தும் சிம்ரனின் டாப் 10 ரோல்கள் பற்றிய தொகுப்பின் முதல் பகுதி இது. (குறிப்பு : இது தரவரிசைப் பட்டியல் அல்ல)
ப்ரியா – `கண்ணெதிரே தோன்றினாள்’

அண்ணனுக்கும் காதலனுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு சராசரி இளம்பெண்ணின் பாத்திரத்திற்கு சிம்ரன் அவ்வளவு நியாயம் சேர்த்திருப்பார். சிம்ரனின் பாந்தமான நடிப்பு அப்போதிருந்த இளைஞர்கள் பலரை இப்படியொரு காதலி தனக்குக் கிடைக்கமாட்டாளா என ஏங்கவைத்தது.
இந்திரா திருச்செல்வன் – `கன்னத்தில் முத்தமிட்டால்’

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்ரன் நடித்த இந்தப் படத்தில் அவருக்கு வளர்ப்புத் தாய் வேடம். படம் முழுக்க தான் வளர்த்த குழந்தையை பிரிந்துவிடப்போகிறோமோ எனும் பரிதவிப்புடன் நடித்த சிம்ரன் ப்ளாஷ்பேக் காட்சிகளில் மணிரத்னத்திற்கேயுரிய குறும்புத்தனத்திற்கும் பொருத்தமாக இருப்பார். ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் ஒன்று போதும் தமிழ் சினிமா உள்ளவரை சிம்ரனை பேசும்.
ருக்கு – `துள்ளாத மனமும் துள்ளும்’

ஒரே படத்தில் கல்லூரிப் பெண் டூ கலெக்டர் வரை குணச்சித்திர வளைவு கொண்ட கேரக்டர் சிம்ரனுக்கு. அதுவும் முக்கால்வாசி படத்தில் பார்வையற்றவராகவும் நடித்து அசத்தியிருப்பார். கிளைமேக்ஸ் காட்சியில் விஜய்யைப் பார்த்து, ‘நான்தான் குட்டின்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா..?’ என குரல் உடைந்து சிம்ரன் கேட்கும்போது கண் கலங்காதவரே இருக்கமுடியாது.
ப்ரியா – `வாலி’

தன் காதல் கணவனுடன் இணைவதற்குத் தடையாக இருக்கும் மோகம் கொண்ட கணவனின் அண்ணன், உண்மையை ஏற்க மறுக்கும் கணவன் இவர்களுடன் ஒரே வீட்டில் இருந்துகொண்டு பிரச்னைகளை எதிர்கொள்ளும் இளம்பெண்ணாக சிம்ரன் இந்தப் படத்தில். சும்மா சொல்லக்கூடாது பிச்சு உதறியிருப்பார் சிம்ரன். தன் கணவனுடன் கணவனின் அண்னனுடனும் சேர்ந்து சிம்ரன் மனநல மருத்துவரை சந்திக்கும் ஒரு காட்சி போதும் அவர் யாரென்று சொல்ல. கனிவு, காதல், ஏமாற்றம், வருத்தம், கோபம், இயலாமை என அனைத்து உணர்ச்சிகளையும் நொடி வித்தியாசங்களில் மாற்றி மாற்றி வெளிப்படுத்தி அசத்தியிருப்பார் தலைவி.
பானு – `பார்த்தேன் ரசித்தேன்’

தன் நண்பனின் காதலை, அவனுக்கேத் தெரியாமல் பிரிக்க நினைக்கும் பொசஸிவ்னெஸ்ஸும் வில்லத்தனமும் நிறைந்த ஒரு வித்தியாசமான ரோல் சிம்ரனுக்கு. வழக்கம்போல பிச்சு உதறியிருப்பார். தன் நண்பன் பிரசாந்தின் காதலைப் பிரிக்க நினைக்க சிம்ரன் திட்டம் போடும்போதெல்லாம் அது வேறு மாதிரியானதொரு வில்லத்தன நடிப்பாக வெளிப்பட்டிருக்கும்.
Also Read – திவ்யா முதல் யாமினி வரை… செல்வராகவன் படத்தின் பெண் கதாபாத்திரங்கள்!
0 Comments