தற்போதைய கொரோனா காலத்தில்.. தொற்றிலிருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடாமல் யாருமே இருக்க முடியாது. இதனால் பாதுகாப்புகள் ஏராளம் என்றாலும் அதே அளவு அசௌகர்யங்களும் இருக்கத்தான் செய்கிறது. இவற்றிலிருந்து பிரபலங்களும் அவர்களின் குடும்பத்தினரும் மட்டும் தப்பித்துவிட முடியுமா என்ன? தமிழ்நாட்டுக்குள் கொரோனா பரவ ஆரம்பித்த காலத்திலிருந்து அஜித், தன் குடும்பத்தினருக்காகவும் குறிப்பாக தனது குழந்தைகளுக்காகவும் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டார் தெரியுமா?
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அஜித்தின் `வலிமை’ படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றுவந்தது. இதில் அஜித் கலந்துகொண்டு நடித்துவந்தபோதுதான் கொரோனா முதல் அலை பரவ ஆரம்பித்தது. பரவல் அதிகரிக்க திரைத்துறையினர் காரணமாகிவிடக்கூடாது என்பதால் மத்திய அரசு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே தமிழ்த் திரையுலகினர் படப்பிடிப்புகளை நிறுத்திக்கொண்டனர். அவ்வாறு நிறுத்தப்பட்ட ஓரிரு நாட்கள் கழித்துதான் மத்திய அரசு ஊரடங்கு அறிவித்தது. இந்நிலையில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டவுடன் அஜித், உடனே தன் வீட்டுக்கு செல்லவில்லை. பொதுவாகவே தன் மனைவி, குழந்தைகள்மீது மிகுந்த பாசம்கொண்ட அஜித், இப்படியொரு சூழலில், அதுவும் இப்போதுபோல அப்போது கொரோனா பற்றி யாருக்குமே எதுவுமே தெரியாத சூழ்நிலையில், ஷூட்டிங்கில் சுமார் 200 பேருக்கும் மேல் பணிபுரிந்துவிட்டு நேரடியாக வீட்டுக்கு செல்ல அவரது மனம் இடம் கொடுக்கவில்லை. என்ன செய்வதென தீவிரமாக யோசித்த அஜித், அந்த ஸ்டூடீயோவிலேயே மேலும் 15 நாட்கள் தங்கியிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுதான் தன் வீட்டுக்குச் சென்றார். இதில் ஆச்சரயம் எதுவுமில்லை எல்லோரும் செய்யக்கூடிய ஒன்றுதான். அடுத்து அவர் செய்ததுதான் ஆச்சர்யம்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு ‘வலிமை’ பட ஷூட்டிங்கானது மீண்டும் அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. பலத்த முன்னேற்பாடுகளுடன் திட்டமிட்டபடி ஒரு மாதம் ஷூட்டிங் நடந்து முடிந்து மீண்டும் அடுத்தகட்ட ஷூட்டிங் நவம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த இடைபட்ட காலத்தில் அஜித் சென்னைக்குத் திரும்பவில்லை. தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சென்னைக்கு திரும்புவதற்கு பதிலாக, மீண்டும் நவம்பரில் ஹைதராபாத்துக்கு படக்குழு மொத்தமும் வரும்வரை, அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல், அஜித் தன் நெருங்கிய நண்பர்களுடன் தன்னுடைய ஸ்போர்ட்ஸ் பைக்கை எடுத்துக்கொண்டு, வட இந்தியா டூர் அடிக்கக் கிளம்பிவிட்டார். அதாவது படத்தில் தன்னுடைய பகுதி மொத்தத்தையும் முடித்துக்கொடுத்துவிட்டு அதன்பிறகு 15 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திவிட்டுதான் வீட்டுக்கு சென்று தன்னுடைய குடும்பத்தினரை சந்திப்பதென்பதெனத் திட்டமிட்டார் அஜித். கடந்த ஆண்டு இறுதியில் அஜித் வட இந்தியாவில் இருப்பதுபோல வெளியான ஸ்டில்கள் எல்லாமே இந்த பைக் டிரிப்பில் எடுக்கப்பட்டதுதான்.
இந்நிலையில்‘வலிமை’ படக்குழுவால் திட்டமிட்டப்படி அடுத்த ஷெட்யூலை ஹைதராபாத்தில் தொடங்கமுடியாமல் சில வாரங்கள் தாமதமாகிப் போனது. ஆனாலும் அஜித், அதை அனுசரித்துக்கொண்டு, படக்குழு ஹைதராபாத் வரும்வரை வட இந்தியாவிலேயே காத்திருந்து அதன்பிறகே தன்னுடைய போர்ஷன் மொத்தத்தையும் நடித்துக்கொடுத்துவிட்டு அதன்பிறகு 15 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டே சென்னை திரும்பினார்.
ஷூட்டிங்கில் அவர் கலந்துகொண்டபோது, கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கென்றே ஒரு பிரத்யேக டீம் ஒன்று படக்குழுவினரால் உருவாக்கப்பட்டது. அந்த குழு மூலம் ஷூட்டிங்குக்கு வரும் எல்லாரையும் ஒரு துரும்புகூட மிஸ் ஆகாமல் சானிடைசிங் செய்வது, தினசரி எல்லோருக்கும் முகக்கவசம் குறிப்பாக அஜித்துடன் நெருங்கி வேலைபார்க்கப்போகும் உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் போன்றவர்களுக்கும் தினந்தோறும் புதிய N95 மாஸ்க் வழங்குவது, புதிதாக கமிட் ஆகும் நடிகர்களுக்கு ஷூட்டிங்குக்கு முதல்நாளே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவது என அஜித்தின் ஆலோசனைப்படி பக்காவாக திட்டமிட்டுதான் எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பை நடத்திமுடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read – `அழகே அழகே அழகின் அழகே நீயடி!’ – துஷாரா விஜயனின் கலர்ஃபுல் ஆல்பம்