அவார்டு படங்கள் என்றாலே மெதுமெதுவாக நகரக் கூடிய உட்கார்ந்து பார்க்க முடியாத படங்கள் என்ற கட்டுக்கதை காலங்காலமாக இங்கே இருக்கிறது. சில படங்கள் அதுபோல் தீவிர சினிமா ஆர்வலர்கள் மட்டுமே பார்க்கும்படியாக இருந்தாலும், பல படங்கள் அப்படி இல்லை என்பதே உண்மை. பல அவார்டுகளைக் குவித்து செம்ம எங்கேஜிங் சினிமா அனுபவம் தந்த தமிழ்ப் படங்களைத்தான் இந்த வீடியோ ஸ்டோரியில் பார்க்கப்போகிறோம். இதற்காக, 2010-ம் ஆண்டில் இருந்து வெளியான 10 படங்களை எடுத்துக்கொள்வோம்.
1. ஆரண்ய காண்டம் (2010)
எஸ்பிபி சரண் தயாரிப்பில், தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் 2010-ல் வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’. படம் வெளியானபோது தியேட்டரில் சரியாக ஓடவில்லை என்பதுதான் உண்மை. தீவிர சினிமா ஆர்வலர்கள் மட்டும் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் சர்க்கிளுக்கு பரிந்துரை செய்து வந்தனர். பின்னர், அந்தப் படத்துக்காக, சிறந்த முதல் பட இயக்குநர், சிறந்த எடிட்டிங் என இரு தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. அதன்பின்புதான் ஆரண்ய காண்டம் பற்றிய டாக் பரவலானது. விஜய் டிவியிலும், விஜய் டிவி யூடியூப் சேனலிலும் வியூஸ்கள் அள்ளின.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தப் படம் அப்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது நடந்த சம்பவங்களே அதன் தரத்துக்குச் சான்று. அன்றைய தினம் ராணி சீதை ஹாலில் பிற்பகலில் ஷோ போடுவதாக அறிவித்தார்கள். மவுன்ட் ரோடு வரை க்யூ நிற்க ஆரம்பித்துவிட்டது. எனவே, அதை கேன்சல் செய்துவிட்டு இரவு உட்லண்ஸ் சிம்பொனியில் படத்தைப் போடுவதாகச் சொல்ல, அங்கும் ஏற்கெனவே ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும் கூட்டம் டேரா போட்டது. அங்கேயும் கன்ட்ரோல் பண்ண முடியாமல், பெரிய ஸ்க்ரீனான உட்லண்ட்ஸில் திரையிடப்பட்டது. ஒட்டுமொத்த ரசிகர்களும் முதல் சீனில் இருந்து க்ளைமாக்ஸ் வரைக்கும் ஆரவாரத்தோட எஞ்சாய் பண்ணாங்க. ‘இது ஃபிலிம் ஃபெஸ்டிவல் தானா அல்லது சூப்பர் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் ஷோவா?’ன்ற டவுட்டே வந்துச்சு. அந்த அளவுக்கு எங்கேஜிங்கான தெறிக்கிவிடுற படத்தை தியேட்டர் ரிலீஸ் அப்போ மிஸ் பண்ண குற்ற உணர்வு இன்னிக்கும் பலருக்கும் உண்டு.
எல்லா தரப்பு ஆடியன்ஸுக்குமே ஈஸியா புரியற வகையில் கட்டமைக்கப்பட்ட ‘நியோ நாய்ர்’ (neo-noir) திரைக்கதை, க்ளீஷேக்களை கொன்று தீர்த்த கேரக்டரைசேஷன், அட்டகாசமான காஸ்டிங் – பெர்ஃபார்மன்ஸ், மிரட்டும் பின்னணி இசைன்னு தமிழ் சினிமாவையை புரட்டிப்போட்ட ‘கேங்ஸ்டர்’ படம்னா, அது ஆரண்ய காண்டம்தான்!
2. வாகை சூடவா (2011)
சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைக் குவித்த படம்தான் சற்குணம் இயக்கி 2011-ல் வெளிவந்த ‘வாகை சூடவா’. முதலுக்கு எந்த மோசமும் இல்லைன்ற அளவுக்கு தியேட்டர்ல நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. ஆனா, அது பத்தாதுன்ற அளவுக்கு ரொம்ப எங்கேஜிங்கான, இன்ட்ரஸ்டிங்கான, ஒர்த்தான படம் இது. செங்கல் சூளையில் கொத்தடிமைகளா இருக்கும் அப்பாவி கிராம மக்களுக்கு கல்வி மூலமாக ஓர் ஆசியர் புதிய விடியலை ஏற்படுத்துவதுதான் ஒன்லைன். ரொம்ப சீரியஸான சப்ஜெக்ட்டை பீரியட் டிராமாவா செதுக்கியிருப்பார் இயக்குநர் சற்குணம். விமல் – இனியா ரொமான்ட்டிக் போர்ஷன் எல்லாம் அவ்ளோ க்யூட்டா இருக்கும். அதுவும் அந்த சர சர சாரக் காத்து சாங் இருக்கே… வாவ்!

லெதர் பேக் டிரான்சிஸ்டர், அந்தக் காலத்து உணவுகள்னு நம்மையும் அறுபதுகளில் மூழ்கிப் போற அளவுக்கு காட்சி அமைப்புகளும் தொய்வில்லாத திரைக்கதையும் ஆகச் சிறப்பா இருக்கும். இந்தப் படத்தோட டீட்டெய்லிங் ஒர்க் வேற லெவல்ல இருக்கும். ஏற்கெனவே பாத்திருந்தா கூட, இதோ பத்து வருஷம் ஆச்சு. இப்ப பார்த்தா கூட நல்ல திரை அனுபவம் கிட்டுவது உறுதி!
3. வழக்கு எண் 18/9 (2012)
2012-ன் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது வென்ற படம் ‘வழக்கு எண் 18/9’. மொபைல் போனின் வக்கிர முகம், ஆசிட் வீச்சு கலாச்சாரம், கந்துவட்டி அக்கிரமம், கொத்தடிமை கொடுமை… இப்படி பல நெகட்டிவ் விவகாரங்களையும், எளிய மனிதர்களின் பேரன்பையும் பதிவு செய்த இந்தப் படம், எளிய மக்களை அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்துதுன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கும். இவ்ளோ சீரியஸான சப்ஜெக்டா இருக்கே, ரொம்ப உருக்கமாதான் படம் முழுக்க போகுமான்னு நினைக்க வேண்டாம். திரைக்கதையின் இயல்புத் தன்மை நம்மை ரொம்ப நெருக்கமாக ஃபீல் பண்ண வைச்சு, க்ரைம் த்ரில்லருக்கே உரிய இம்பாக்டோடு பக்கா எங்கேஜிங்கா இருக்கும்.

இந்தப் படம் வந்தப்ப இன்ஸ்பெக்டர் முத்துராமன் கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டது. சில நரித்தனமான போலீஸ் அதிகாரிகளின் ஒட்டுமொத்த பிரதிநிதியா ஆடியன்ஸை அலறவிட்டிருக்கும் அந்தக் கதாபாத்திரம். பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வு மிக்க நம் சமூகத்தின் கண்ணாடியாவே இந்தப் படம் வந்திருக்கும். இன்னிக்கும் ஒவ்வொரு சீனும் வியந்து பார்க்குற அளவுக்கு ஒர்த்தான படம் இது.
4. குற்றம் கடிதல் (2014)
சில படங்கள் தியேட்டர் ரிலீஸுக்கு முன்னாடியே தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டு, தேசிய விருது வென்ற பிறகு, அந்த ஹைப்போட தியேட்டர்ல ரிலீஸ் பண்றது உண்டு. அப்படியான ஒரு படம்தான் ‘குற்றம் கடிதல்’. புது இயக்குநர், புது முகங்கள், படம் எப்படி இருக்கும்னே யூகிக்க முடியாத பேக்ரவுண்டோடதான் 2014-ன் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதோட ரிலீஸ் ஆச்சு. விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு இருந்தாலும், தியேட்டரில் சொல்லிக்கிற அளவுக்கு ரெஸ்பான்ஸ் இல்லை. அதேநேரத்துல ஃபிலிம் ஃபெஸ்டிவல்ஸ்ல நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது, ஆரண்யம் காண்டம் போலவே.

ஒரு பையனை இளம் டீச்சர் ஆவேசத்துல அடிச்சுடுவாங்க. அதுக்கு அப்புறம் அந்தப் பையன் என்ன ஆச்சு? அந்த டீச்சருக்கு என்னென்ன நடக்குது? இந்த ரெண்டு பேரையும் சுத்தியிருக்குறவங்க என்னென்ன செய்றாங்க? – இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம், ஆரம்பம் முதல் இறுதி வரை ஓர் அட்டகாச த்ரில்லர் படம் மாதிரி பரபரன்னு போகும். பிரம்மா இயக்கி இந்தப் படம், சமூக அரசியலைத் தாண்டி சைக்கலாஜிக்கல் ஆஸ்பெக்ட்ல ரொம்ப நல்லா டீல் பண்ணியிருக்கும். இந்தப் படத்தை பார்க்காதாங்க, ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். இப்படி ஒரு சப்ஜெக்டை எடுத்து, சீட் நுனில உட்கார வைக்க முடியுமான்ற வியப்பு ஏற்படும்.
5. காக்கா முட்டை (2015)
தமிழ் சினிமாவில் பல கட்டுக்கதைகளைத் தகர்த்தெறிந்த படம்னா, அது காக்கா முட்டைதான். உலக சினிமா ரேஞ்சுல இருக்குற படங்கள் ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்குதான் லாயக்கு, ஸ்டார் வேல்யூ இல்லாம கமர்ஷியலா சக்ஸஸ் ஆக முடியாதுன்ற மாதிரியான பல பேத்தல்களை பொளந்து கட்டுச்சு. தியேட்டர்களில் எல்லா தரப்பு மக்களுக்குமே பயங்கர உற்சாகத்தோட பார்த்துத் தீர்த்த படம் இது. தேவையான ப்ரோமோஷனும், மக்களுக்கு படத்தை பார்க்குறதுக்கான அவெய்லபிளிட்டியையும் ஏற்படுத்தி கொடுத்தா நிச்சயம் உருப்படியான படங்களை மக்கள் பாக்ஸ் ஆபிஸ் ஆக்குவாங்கன்ற நம்பிக்கையையும் இந்தப் படம் கொடுத்துச்சு.

மெட்ரோ சிட்டில இருக்குற குடிசைப் பகுதியில் வசிக்கும் ரெண்டு சிறுவர்களின் பீட்சா வாங்கிச் சாப்பிடும் வேட்கைதான் ஒன்லைன். கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்துற மாதிரி, ஒரு சிம்பிளான ஸ்டோரிலைன்ல நம் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வு அரசியலை ரொம்ப ரொம்ப இயல்பும் சட்டயரும் நிறைந்த திரைக்கதையால மக்களுக்கு கடத்தியிருப்பாரு இயக்குநர் மணிகண்டன். இதுவும் ஒரு வகையில சார்லி சாப்ளின் பாணி படம்தான். காமெடி படமா பார்க்குறங்களுக்கு வெடிச்சி சிரிக்கவைக்கிற காமெடி படமா தெரியும்; அரசியல் படமா பார்க்குறவங்களுக்கு அள்ள அள்ள குறையாத கன்டென்ட் கொடுக்கும். சிறந்த குழந்தைகள் திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளை அள்ளிய இந்தப் படம், பார்க்கப் பார்க்க திகட்டாத அனுபவம் தரும் அற்புதமான சினிமா.
6. கிருமி (2015)
2015-ல் சத்தமே இல்லாம ரிலீஸ் ஆகி, ஓரளவு ரெஸ்பான்ஸ் கிடைச்ச படம் ‘கிருமி’. சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது வாங்கிச்சு. கதை, திரைக்கதை, வசனத்தில் இயக்குநர் அனுசரணுடன் இயக்குநர் மணிகண்டனும் இணைந்து பணியாற்றி இருந்தார். கதிர் நடித்த முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று.

இந்தப் படத்தோட கதைக்களமே வித்தியாசமானது. போலீஸ் சார்ந்த ஒரு சோஷியல் – த்ரில்லர் சினிமா. ஒருடைம்ல சென்னையில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ரொம்ப பரவலா இருந்துச்சு. சென்னைல நைட்ல லத்தி எடுத்துட்டு போலீஸோட சில இளைஞர்கள் கெத்தா சுத்திட்டு இருப்பாங்க. அப்படி ஒரு இளைஞராக கதிர் நடிச்சிருப்பார். போலீஸ் இன்ஃபார்மராகவும் இருப்பார். அந்தக் கேரக்டரின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் அவரை புரட்டிப் போடும். அதுல போலீஸ், ரவுடியிசத்தை உள்ளடக்கிய சிஸ்டம் எப்படி இயங்குதுன்னு பகிரங்கமா சொல்லியிருப்பாங்க. ஹீரோயிசம் காட்ட முனைகிற அந்த சாமானிய இளைஞர் க்ளைமாக்ஸ்ல காட்டப்படுற விதம், நம்ம சொசைட்டியோட இயல்பை அப்படியே பிரதிபலிக்கும். ஸ்டார்ட்டிங்ல இருந்து எண்டு வரைக்கும் பிசிறு தட்டாம பக்காவா ஸ்க்ரீன்ப்ளே இருக்கும். குறிப்பாக, சப்போர்ட்டிங் ஆக்டர் சார்லி தன்னோட ஆல்டைம் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸை கொடுத்திருப்பார். இந்தப் படத்தை இயக்கிய அணுசரண் தான் ‘சுழல்’ வெப்சீரிஸின் இயக்குநர்களில் ஒருவர். அந்த வெப் சீரிஸின் மற்றொரு இயக்குநர்… ‘குற்றம் கடிதல்’ பிரம்மா என்பது கூடுதல் தகவல்.
7. விசாரணை (2015)
2015-ல் சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து, 2016-ல் தியேட்டரில் ரிலீஸான படம் ‘விசாரணை’. குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த லாபம் ஈட்டிய படங்களில் இதுவும் ஒன்று. மூன்று தேசிய விருதுகளுடன், சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் பிரிவில் ஆஸ்கர் ரேஸுக்கு அதிகாரபூர்வமான அனுப்பப்பட்ட இந்த வெற்றிமாறனின் படைப்பில், எளியவர்களோ, பணமும் அதிகாரமும் படைத்தவர்களோ, சமயத்துக்கு தகுந்த மாதிரி அவர்களை டீல் செய்யும் காவல்துறையின் அப்ரோச்சைக் கண்டு மக்கள் திடுகிட்டுப் போனதுதான் உண்மை. ‘லாக்கப்’ நாவலைத் தழுவிய திரைக்கதையில் போலி என்கவுன்ட்டர் மேட்டரை தொட்ட விதத்தை தரமான சம்பவங்களை நிகழ்த்தியிருப்பார் வெற்றிமாறன்.

ஒரு பக்கம் தினேஷ் இயல்பான பெர்ஃபார்மன்ஸ்ல ஸ்கோர் பண்ண, இன்னொரு பக்கம் சமுத்திரக்கனி – கிஷோர் ரெண்டு பேரும் மிரட்டி இருப்பாங்க. எந்த இடத்திலும் நம்மை அசதி ஏற்படுத்தாம, ரொம்ப இன்டென்ஸா படம் நகரும். காட்சிகளும் வசனங்களும் நமக்கு சிஸ்டம் பத்தின புரிதலை கூட்டும். படம் முடிச்சிட்டு வீட்டுக்குப் போகும்போது எதிர்ல கேஷுவலா வர்ற போலீஸ்காரரை பார்த்தவுடன் ஒரு மாதிரி நமக்கு குலை நடங்கும். இந்த இம்பாக்ட்தான் ‘விசாரணை’ படத்தோட ஹைலைட்டே. ‘ஜெய்பீம்’ மாதிரியான படத்தைப் பார்க்க ஓரளவு தைரியம் கொடுத்ததே ‘விசாரணை’தான்னு சொல்லலாம்.
8. கே.டி. (எ) கருப்புதுரை (2019)
2019-ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது உள்பட பல்வேறு திரைப்பட விழா விருதுகளை வென்று விமர்சகர்களால் கொண்டாட்டப்பட்ட படம் ‘கே.டி. என்கிற கருப்புதுரை’. உறவுகளுக்கு பாரமாக இருந்து உயிர்விட விரும்பாத முதியவருக்கும், உறவுகளே இல்லாத சிறுவனுக்கும் இடையிலான பந்தமும் பயணமும்தான் இந்தப் படம். மிக மிக உணர்வுபூர்வ ஒன்லைனை எடுத்துக்கொண்டு மக்களின் வாழ்வியலைக் காட்டிக்கொண்டே நம் மனதை மயக்கும் Road மூவியாக பயணிக்கிறது இந்தப் படம்.

பேராசிரியர் மு.ராமசாமி, சிறுவன் நாகவிஷால் இருவரும்தான் ஒட்டுமொத்த படத்திலும் பெரும் பகுதிகளில் வலம் வருகின்றனர். அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பும், அவர்களது நடிப்பும் நம்மை அவர்களுடனேயே பயணிக்க வைக்கிறது. எந்த இடத்திலும் டயர்டாகாமல் எங்கேஜிங்காக செல்லும் இந்தப் படம் ரிப்பீட் மோடில் பார்க்கத்தக்கது.
இந்தப் படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸாகாத ஆதங்கத்தை இயக்குநர் மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததை குறிப்பிட்டே ஆக வேண்டும். “’கே.டி.’ படத்துக்கான திரைகள் ஏன் குறைவாக உள்ளன. அதே நேரத்தில் மக்கள் சுமாராக இருக்கிறது என்று சொன்ன படங்கள் அதிக திரைகளில் உள்ளன. அது ஏன் என்று யாராவது எனக்கு விளக்க முடியுமா? கே.டி.க்கு நிறைய திரைகள் தேவை. மக்கள் தீர்ப்பு, மகேசன் தீர்ப்பு. எனவே மக்களே, தயவுசெய்து நான் புரிந்துகொள்ள உதவுங்கள்” என்று ஆதங்கத்தைக் கொட்டியிருந்தார். ஆனால், ஓடிடியில் ரிலீஸான பின் லாக்டவுன் காலத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று என்பதையும் கவனிக்க வேண்டும்.
9. கடைசி விவசாயி (2021)
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரீல்ஸ்களில் அதிகம் பகிரப்பட்ட காட்சிகளை வரிசைப்படுத்தினால், நிச்சயம் அதில் ‘கடைசி விவசாயி’ பட காட்சிகளுக்கு உண்டு. அதுவும் அந்த கோர்ட் ரூம் சீன் எல்லாம் மக்களை வெகுவாக ஈர்த்ததை சொல்லித்தான் தெரியணும்னு இல்லை. 2021-ல் வெளிவந்த மணிகண்டனின் இந்தப் படம், தமிழ் சினிமாவுக்கு மகுடம் சூட்டும் இன்னொரு படைப்பு என்றால் அது மிகையாகாது.

ஒரு கரிசல் கட்டு கிராமம்… அந்த மக்கள் தங்கள் குலதெய்வத்தை மறந்துபோய் பல ஆண்டுகளுக்குப் பிறகு வழிபட வேண்டிய சூழல்… அதுக்கு ஒரு மரக்கால் புது நெல் தேவை… அப்போதுதான் தங்களோட நிலத்தை வீட்டு மனைகளுக்காக கொடுத்துட்டு விவசாயம் செய்வதையே நிறுத்திவிட்டதை அந்த மக்கள் உணர்கிறார்கள். அந்தக் கிராமத்தின் ‘கடைசி விவசாயி’யிடம் போய் மண்டியிடுகிறார்கள் அந்த கிராம மக்கள். அந்த புதுநெல்லை விளைவிக்கப் படுற பாட்டை என்ன அற்புதமான திரைக்கதையா நகர்த்தியிருக்காங்க.
அதுவும் ப்ரொட்டாகனிஸ்டான அந்த தாத்தா கேரக்டருக்கும், அவரோட பெர்ஃபார்மன்ஸுக்கு ஈடு இணையே இல்லை. இந்த மாதிரி உன்னதமான படைப்புகளுக்கு உறுதுணையா இருக்குற விஜய் சேதுபதியை எவ்ளோ வேணுன்னாலும் கொண்டாடலாம். பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் ரசிகர்கள் அனைவருக்குமே அற்புதமான திரை அனுபவத்தைக் கொடுத்த இயக்குநர் மணிகண்டனை நம் தமிழ் சினிமா தன்னோட கடைசி படம் வரைக்கும் காலம்பூரா கொண்டாடணும்.
10. மண்டேலா (2021)
எதிரும் புதிருமான ரெண்டு கிராமங்கள். அவர்களுக்க்கு ஒற்றைப் பஞ்சாயத்து. அங்கு முடிதிருத்தும் கலைஞனாக யோகி பாபு. அவரை அவமதித்துப் புறக்கணிக்கும் அந்த இரு கிராமங்களையும் சேர்த்து பஞ்சாயத்து தேர்தலை வருகிறது. இதையொட்டி, யோகிபாபுவின் ஒற்றை வாக்குக்காக வாக்குக்காக என்னென்ன அட்ராசிட்டிகள் செய்யப்படுகின்றன என்பதை சட்டயர் பாணி நகைச்சுவையுடன் பட்டையைக் கிளப்பிய படம் ‘மண்டேலா’. 2021-ல் வெளியான இந்தப் படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குநர், வசனத்துக்கான சிறந்த திரைக்கதை ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருதுகளை அள்ளினார் இயக்குநர் மடோன் அஸ்வின்.

கழிப்பறை சுத்தம் செய்ய அழைக்கும்போதுகூட காரில் ஏற்றாமல், அதன் பின்னாலேயே யோகி பாபுவை பல கிலோ மீட்டர் ஓடிவரச் செய்த காட்சி, பின்வாசல் வழியாக வந்து முடிதிருத்தச் சொல்வது என சாதியப் பாகுபாட்டை அப்பட்டமாக சொன்ன இந்தப் படைப்பு, முழுக்க முழுக்க எங்கேஜிங்கான சினிமாவும் கூட. ஒரு நையாண்டிப் படைப்பில் ஒட்டுமொத்த இந்தியாவில் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கும் ஒட்டுமொத்த வாக்கு வங்கி அரசியலையும் துகிலுரித்துக் காட்டிய இந்தப் படமும் நல்ல சினிமாவை மக்கள் நிச்சயம் கொண்டாடித் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையை விதைத்தது.
Hey there, You’ve done a fantastic job. I’ll definitely digg it and personally recommend to my friends. I’m sure they’ll be benefited from this website.
A person essentially help to make seriously articles I would state. This is the very first time I frequented your website page and thus far? I surprised with the research you made to create this particular publish incredible. Great job!