கார்த்திக் சுப்புராஜ் முதல் லோகேஷ் கனகராஜ் வரை… ஃபேன் பாய் மொமண்ட் இயக்குநர்கள்!

அப்போ ஃபேன் பாய்.. இப்போ அந்தந்த ஸ்டார்களின் டைரக்டர்ஸ் எனக் கலக்கும் இளம் இயக்குநர்களும் அவர்கள் தங்கள் தலைவனுக்கு செய்த சிறப்பான, தரமான சம்பவங்களும் பற்றி இங்கே.

கார்த்திக் சுப்புராஜ்

ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ்
ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்புராஜ்

சின்ன வயதிலிருந்தே தீவிர ரஜினி ரசிகர் கார்த்திக் சுப்புராஜ். இவரது முதல் படமான ‘பீட்சா’ படத்தில் ஓரிடத்தில் இருந்த ரஜினி ரெஃபரன்ஸ், இரண்டாவது படமான ‘ஜிகர்தண்டா’ படத்தில் ஏராளமாகவே குவிந்திருந்தது. டைரக்டர் ஆனபிறகும் தொடர்ந்து ஃபேன் பாயாகவே ரஜினியின் ஒவ்வொரு படத்தின் ரிலீஸின்போதும் செயல்பட்டுவந்த இவருக்கு 2019-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் ‘பேட்ட’ படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே படம் முழுக்க ஏகப்பட்ட மாஸ் மொமண்ட்ஸ். ரஜினியை தான் எப்படியெல்லாம் பார்க்கவேண்டும் என ஒவ்வொரு ரஜினி ரசிகரும் எதிர்பார்ப்பார்களோ அதையெல்லாம் இந்தப் படத்தில் லிஸ்ட் போட்டு செய்திருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.

நெல்சன்

விஜய் - நெல்சன்
விஜய் – நெல்சன்

‘கத்தி’ படம் வந்த சமயத்தில் தன்னை இந்த உலகுக்கு யாரென்றே தெரியாத காலத்தில் நெல்சன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் போட்ட சிலாகிப்பு ஸ்டேட்டஸ்கள் எல்லாம் தற்போது வைரல் ஆகிவருகிறது. அந்த அளவுக்கு ஒரு ட்ரூ விஜய் ஃபேனாக இருந்த நெல்சன்தான் தற்போது அவரது நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கிவருகிறார்.  சமீபத்தில் வெளியான ‘அரபிக்குத்து’ பாடலும் அதில் விஜய் போட்ட ஸ்டெப்ஸுமே போதுமே, விஜய்யை அந்தப் படத்தில் நெல்சன் எப்படியெல்லாம் காட்டியிருப்பார் என யூகிப்பதற்கு.

பிருத்விராஜ்

மோகன்லால் - பிருத்விராஜ்
மோகன்லால் – பிருத்விராஜ்

தமிழ்நாட்டில் ரஜினி – கார்த்திக் சுப்புராஜ்  எப்படியோ அதேபோல மலையாளத்தில் மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணி. ஒரு வெற்றிகரமான நடிகராக வலம் வரும் பிருத்விராஜுக்கு டைரக்சனில் ஆர்வம் ஏற்பட்டு முதன்முதலாக டைரக்ட் செய்தது தன்னுடைய தலைவன் மோகன்லாலைத்தான். கிட்டத்தட்ட ‘பேட்ட’ படம் போலவே மோகன்லால் ரசிகர்கள் அவரை எப்படியெல்லாம் பார்க்க விரும்புவார்களோ அப்படியெல்லாம் காட்சிகளை அமைத்து அவர் இயக்கிய ‘லூசிஃபர்’ மிகப்பெரிய ஹிட். அதேபடத்தின் இரண்டாம் பாதியில் பிருத்விராஜ் ஒரு சின்ன ரோலில் வந்திருந்தாலும் தன் தலைவனுக்கு வழிவிட்டு அடக்கியே வாசித்திருப்பார். இப்படி மாஸாக மோகன்லாலைக் காட்டிய பிருத்விராஜூக்கு அவரை முழுக்க முழுக்க காமெடியாகவும் ரொமாண்டிக்காவும் காட்ட ஆசை வந்தது. அப்படி அவர் ஆசைப்பட்டு ரசித்து இயக்கிய படம்தான் ‘ப்ரோ டாடி’ சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க மோகன்லால் ராஜ்ஜியம்தான். 

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன்
லோகேஷ் கனகராஜ் – கமல்ஹாசன்

வெறித்தனமான கமல் ரசிகர் லோகேஷ். இவரது அனைத்துப் படங்களிலும் கமலின் ரெஃபரன்ஸ் நிச்சயம் இருக்கும். இவரது ‘கைதி’ படத்திற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது கமலின் ‘விருமாண்டி’ படம்தான் என ஒரு மேடை தவறாமல் பதிவு செய்திருக்கிறார் லோகேஷ். சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படம் கூட கிட்டத்தட்ட கமலின் ‘நம்மவர்’ படத்தின் தொடர்ச்சி போலத்தான். இப்படி தனது மற்றப் படங்களிலேயே தனது தலைவனுக்கு வெறித்தன ஃபேன்பாய் மொமண்ட்களை வைத்த லோகேஷ் தற்போது கமல் நடிப்பிலேயே ‘விக்ரம்’ படத்தை இயக்கிவருகிறார். அதில் எவ்வளவு  ஃபேன்பாய் மொமண்ட்கள் இருக்கும் எனக் கேட்கவா வேண்டும்? சாம்பிள் பீஸாக வந்த ‘விக்ரம்’ டீஸரே கொலமாஸ்..!

Also Read: `லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கரியரின் 6 முக்கியமான டர்னிங் பாயிண்ட்ஸ்!

1 thought on “கார்த்திக் சுப்புராஜ் முதல் லோகேஷ் கனகராஜ் வரை… ஃபேன் பாய் மொமண்ட் இயக்குநர்கள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top