எஞ்சாய் எஞ்சாமி, நீயே ஒளி பாடல்களை எழுதிய தெருக்குரல் அறிவைத் தவிர்த்துவிட்டு பாடகி தீ மற்றும் கனடாவைச் சேர்ந்த பாடகர் வின்செண்ட் டி பால் ஆகியோர் படத்துடன் வெளியான பிரபல இதழின் அட்டைப்படம் சர்ச்சையாகியிருக்கிறது. என்ன நடந்தது?
தெருக்குரல் அறிவு
வடசென்னையைச் சேர்ந்த பாடகரும் சமூக ஆர்வலருமான தெருக்குரல் அறிவு எழுதி, பாடிய எஞ்சாய் எஞ்சாமி பாடல் உலக அளவில் ஹிட்டடித்தது. இந்தப் பாடலை இலங்கை – ஆஸ்திரேலிய பாடகியான தீ இணைந்து பாடியிருந்தார். யூ டியூபில் 290 மில்லியன் பார்வைகளுக்கு மேல் பெற்றிருக்கும் இந்தப் பாடலை வெளியிட்டது மஜா அமைப்பு. சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானால் உருவாக்கப்பட்டது அந்த அமைப்பு. சாதியரீதியிலான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்துவரும் தெருக்குரல் அறிவு எழுதிய நீயே ஒளி பாடலும் மஜாவில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடல்தான் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி ஹிட்டடித்த பா.இரஞ்சித்தின் `சார்பட்டா பரம்பரை’ படத்தின் தீம் சாங்காகவும் இடம்பிடித்திருந்தது. இந்தப் பாடலை கனடாவைச் சேர்ந்த வின்செண்ட் டி பால் என்ற பாடகர் பாடியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இந்தப் பாடலை அவரோடு சேர்ந்து நவ்ஸ் 47, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியிருந்தனர்.
ரோலிங் ஸ்டோன் இதழ்
எஞ்சாயி எஞ்சாமி’,நீயே ஒளி’ பாடல்கள் குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ரோலிங் ஸ்டோன் இதழின் இந்தியப் பதிப்பு ஆகஸ்ட் மாத இதழின் அட்டைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த அட்டைப்படத்தில் பாடகர்களான தீ, வின்செண்ட் டி பால் ஆகியோரது படம் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. இரண்டு பாடல்களையும் எழுதிய தெருக்குரல் அறிவு படம் மிஸ்ஸிங். திட்டமிட்டே அறிவு பெயர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. அட்டைப்பட கட்டுரையிலும் அறிவு குறித்து குறைந்த அளவே எழுதப்பட்டிருக்கிறது. இதுவும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
இதுகுறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். அவரது பதிவில், “எஞ்சாயி எஞ்சாமி, நீயே ஒளி பாடல்களை எழுதியவரான தெருக்குரல் அறிவு பெயர் மீண்டும் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு பாடல் வரிகளும் மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர், மறைக்கப்படுவதை எதிர்க்கிறது என்பதை ஒப்புக்கொள்வது அவ்வளவு கடினமா?’ என ரோலிங் ஸ்டோன் இதழ், மஜா அமைப்பிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். வி.சி.க பொதுச்செயலாளர் வன்னி அரசும் இந்த விவகாரத்தில் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
Also Read – என்ஜாயி பாடலுக்கு ஏன் அந்தப் பெயர்?! – மேலும் 6 சுவாரஸ்யங்கள்