தீயின் வெரைட்டி குரல், அறிவின் பாடல் வரிகளோடு சேர்த்து சந்தோஷின் இசையும் பாடலுக்கு எக்ஸ்ட்ரா அழகு சேர்த்தது. செல்வராகவனில் ஆரம்பித்து ஆர்யா, சித்தார்த், கௌதம் கார்த்திக், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் இந்தப் பாடலைப் பாராட்டி ட்வீட் போட்டுள்ளனர். அந்தப் பாடல் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.
-
1 ஒப்பாரி
சந்தோஷ் - அறிவு கூட்டணி பாடலை ஒப்பாரி வடிவத்தில் அமைத்திருக்கின்றனர். தமிழ்நாட்டின் முக்கிய வகைப் பாடல் வகைகளுள் ஒன்றான ஒப்பாரி, இறந்தவரின் வரலாற்றை கதை வடிவத்தில் பாடுவது. அந்த வகையில் இயற்கை அழிந்துகொண்டிருப்பதையும், இங்கிருக்கும் இயற்கை வளங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு மட்டுமல்ல பாகுபாடின்றி அனைத்து உயிரனங்களுக்குமே சமம் என்பதை ஒப்பாரியாக உருவாக்கியிருக்கின்றனர். ஆனால், ஒப்பாரியை ஓலமாக இல்லாமல் முழுக்கவே ஒரு செலிப்ரேஷன் மோடில் மாற்றியிருக்கிறார்கள்.
-
2 மொழிகளைக் கடந்த இசை
இசைக்கு மொழி தேவையில்லை என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சான்று. காரணம், உலக மக்கள் அனைவரும் இந்தப் பாடலையும் இதில் புதைந்திருக்கும் அர்த்தத்தையும் உணர்ந்து கொண்டாடி வருகின்றனர். பாடலின் கமென்ட் செக்ஷனை கொஞ்சம் உருட்டிப் பார்த்தால் பல்வேறு மொழி பேசும் மக்களை அங்கு காண முடிகிறது. அதிலும் கேரளாவைச் சேர்ந்தவர்களே அங்கு அதிகம். இது மட்டுமின்றி இலங்கையிலும் இந்தப் பாடல் டிரெண்டாகி வருகிறது.
-
3 `தீ’-யின் மேஜிக்கல் வாய்ஸ்
விவரிக்க முடியாத சில எமோஷன் கொண்ட பாடல்களை தீ பாடியிருக்கிறார். தனித்துவம் கொண்ட அந்த மேஜிக்கல் வாய்ஸுக்கு சொந்தக்காரான தீக்ஷிதா என்கிற தீ, ஸ்பாட்டில் செம சைலன்ட். சக ஆர்டிஸ்களிடம் மிகுந்த பணிவோடும் அமைதியாகவும்தான் உரையாடுவார். தான் இயக்கிய மூன்று படங்களில் தீயை பாட வைத்துவிட்டார் ரஞ்சித். அந்த சமயங்களில் பாடலும், படமும் பேசும் அரசியல் குறிந்த சந்தேகங்களை ரஞ்சித்திடம் கேட்டுத் தெரிந்துகொள்வார் தீ.
-
4 மில்லியன்களைக் கடந்த பார்வைகள்!
இந்தப் பாடலை தயாரிப்பதற்கான மொத்த செலவும் ரூ40 - 45 லட்சத்துக்குள் முடிந்துவிட்டது. தனியிசைக்காகவும் அதை மையப்படுத்திய கலைஞர்களுக்காகவும் ஏ.ஆர்.ரஹ்மான் உதவியில் தொடங்கப்பட்ட சேனல்தான் `Maajja'. இந்த சேனலில் மொத்தமே 2 பாடல்கள் மட்டுமே அப்லோட் செய்யப்பட்டிருக்கின்றன். அதில் என்ஜாய் எஞ்சாமி பாடல் மட்டும் 25 மில்லியின் பார்வைகளை நெருங்கியுள்ளது. அளவான செலவு கொண்ட தயாரிப்பாலும், இத்தனை மில்லியன் பார்வையாலும் கிரியேட்டர்களுக்கு நல்ல லாபத்தையே ஈட்டித் தந்திருக்கிறது இந்தப் பாடல்.
-
5 பட்ஜெட்
இப்பாடலில் காடு போன்று காட்டப்பட்ட மொத்த இடமுமே செட்தான். பேக்கிரவுண்டில் LED திரையை வைத்துக்கொண்டு ஒரு போர்ஷனை முடித்துள்ளனர். இதைத் தவிர கிராமத்து போர்ஷனில் அங்கிருக்கும் மக்களை வைத்து மீதமுள்ள பாடலை விஷுவலாக்கிவிட்டனர். சம்பளம் தவிர செட்டுக்கான செலவு, காஸ்டியூம் மட்டுமே இதில் மேஜர் செலவாக இருக்கக்கூடும். இதனால்தான் பாடலுக்கான செலவும் கட்டுக்குள் இருந்துள்ளது.
-
6 பெயர்க் காரணம்
அறிவு, அவருடைய பாட்டியான வள்ளியம்மையை வைத்துதான் இந்தப் பாடலின் வரிகளை செதுக்கியிருக்கிறார். அவருடைய பாட்டி போலத்தான் ஏறத்தாழ எல்லோருடைய பாட்டிமார்களும் அவர்களுடைய பேரன் - பேத்திகளை `ஏஞ்சாமி' என்றுதான் அழைப்பர். இதை மையமாக வைத்துதான் பாடலுக்கான டைட்டிலும் சூட்டப்பட்டுள்ளது.
-
7 ரஹ்மானின் பாராட்டு
இந்தப் பாடலை வைத்து ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்கும் வாய்ப்பு அறிவுக்குக் கிடைத்திருக்கிறது. தனியிசையைப் பற்றியும், தனியிசைக் கலைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் பற்றியும் இருவரும் நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றனர். `கேட்கும்போதே ஃபுல் பாசிடிவிட்டியா இருக்கு' என்று அறிவை பாராட்டியுள்ளார் ரஹ்மான்.
குக்கூ குக்கூ...
0 Comments