ஊரே போற்றிப் புகழும் சீரிஸ்களில் இருந்து தப்பித்து நாமே புதிதாக ஒரு சீரிஸ் பார்த்து ரசிக்கும்போது உள்ளுக்குள் ஓர் உணர்வு ஏற்படும். அப்படியான ஒரு சீரிஸ்தான் ‘Dexter’. 2006-ல் தொடங்கி 2013 வரை ஒளிபரப்பானது. அதுவும் OTT பிரபலமாகாத சமயத்தில் பார்த்து மகிழ்ந்த ஒரு Enjoyable சீரிஸ்தான் `Dexter’. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
மு.கு : இது ரிவ்யூ இல்லை. அனுபவம்.

பொதுவாக சீரிஸைப் பல ரகங்களாகப் பிரிக்கலாம். முக்கியமான ஒன்று மினி சீரிஸ். வெளிவந்த ஒரே சீஸனோடு மொத்த கதையும் முடிந்துவிடும். இது சமீபத்தில் வந்தது. இரண்டாவது நார்மல் சீரிஸ். அதாவது ஊரே போற்றிப் புகழும் மணி ஹெய்ஸ்ட், ஸ்க்விட் கேம், கேம் ஆஃப் த்ரோன்ஸ் வகையறா. சீஸன்களும் எபிசோடுகளும் குறைவு. அடுத்தது sitcom வகை சீரிஸ். இது தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் ஹிட் அடித்தது மிகக் குறைவு. அதாவது Friends, Big Bang Theory, Office டைப் ஆஃப் சீரிஸ். ஆனால் இதிலே How I met Your Mother, Brooklyn Nine-Nine போன்ற சீரிஸ்களும் மிஸ் பண்ணாமல் பார்க்கூடியவை. கடைசியாக Long Term சீரிஸ். Mentalist, Grimm, Dexter ரக சீரிஸ்கள். இது போன்ற சீரிஸ்களில் பல சீஸன்கள் பல பல எபிசோடுகள் இருக்கும்.

உதாரணத்துக்கு நம் ஆர்டிகிளின் நாயகன் டெக்ஸ்டரையே பார்க்கலாம். 7 வருடங்களில் 8 சீஸனாக வெளிவந்த இந்த சீரிஸில் மொத்தம் 96 எபிசோடுகள். ஒவ்வொன்றும் 50 நிமிடங்கள். கதை, கிளைக்கதை என நம் வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறிவிடும் ஓர் சீரிஸ் வகைதான் இந்த Long term series. அதில் ஒன்றான டெக்ஸ்டர் சீரிஸ் முடிந்த பிறகும் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு வேற மாதிரி ஒரு எனர்ஜியோடு வந்திருக்கிறது. இது ரெகுலராக ஃபாலோ செய்யும் டெக்ஸ்டர் ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. காரணம், ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற பிரபல ஓடிடி தளங்களில் இல்லாமல் Voot என்ற தளத்தில் வெளியாகியிருக்கிறது.
10 வருடங்களுக்குப் பிறகு டெக்ஸ்டர் மோர்கனை திரையில் பார்க்கும்போது ஒருவித ஆத்ம திருப்தியை அளிக்கிறது. தமிழ் சினிமாவில் பல படங்களில் நம்மை ஆட்கொண்டு ரசிக்க வைத்த பிறகுதான் சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, தளபதி எல்லாம். ஆனால் ஒரே படைப்பில் ஒரு மனிதனை பார்த்துப் பழகி ரசிக்க வைப்பதெல்லாம் அதற்கு நிகரானது. உதாரணம் Game of thrones பீட்டர் டிங்லேஜை சொல்லலாம். ஸ்க்விட் கேமின் நாயகனைச் சொல்லலாம், மணி ஹெய்ஸ்ட் ப்ரொஃபஸரை சொல்லலாம். அப்படியானவர்தான் டெக்ஸ்டர் மோர்கனும்.

கதைப்படி இவர் போலீஸ் டிபார்மென்ட் Forensic-ல் வேலை செய்பவர். அதாவது இவரே கொலை செய்துவிட்டு அதே இடத்தை ஃபாரன்சிக் ஆய்வு செய்பவர். கதையின் ஒன்லைனே அவ்வளவு சுவாரஸ்யத்தைக் கிளப்பியது. அப்படித்தான் மொத்த சீரிஸும் அமைந்திருந்தது. 7 வருட காலம் மெல்ல மெல்ல வெளியான சீரிஸை ஒரு மாத காலத்தில் பார்த்து முடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அதாவது வெளிநாடுகளில் வெப் சீரிஸ் என்ற ஒன்று அறிமுகமான சமயம் Mentalist நான் பார்த்து நெகிழ்ந்த முதல் லாங் டேர்ம் சீரிஸ். அதற்குப் பின்பு டெக்ஸ்டர்தான். பல சினிமாத்தனங்கள் இதில் இடம்பெற்றிருந்தாலும் பல Life Lesson இதில் இருக்கிறது.
குறிப்பாக ஒவ்வொரு இக்கட்டான சூழலையும் ஹீரோ சமாளிக்கும் முறையே நமக்கு பெரிய பாடம். இவர் செய்யும் சீரியல் கொலைகளைத் தவிர்த்துவிட்டு மனிதனாக இவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது கட்டாயம் இவருக்கு ரசிகராகிவிடுவோம். கௌதம் மேனன் பட ஸ்டைலில், (அதாவது நல்ல கௌதம் மேனன் படங்கள்) வாய்ஸ் ஓவரில் தனக்குத்தானே இவர் பேசிக்கொள்ளும்போது ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
இப்படி வியப்பில் ஆழ்த்திய ஒரு சீரிஸ்தான் டெக்ஸ்டர். இதன் டைட்டில் ட்ராக்கை பல வருடங்களாக ரிங் டோனாக வைத்திருந்தேன். இப்படி ஒரு படைப்பும், ஹீரோவும் ரீ-என்ட்ரி கொடுக்கிறது என்று நினைத்தபோது சிரீஸ் ரசிகர்கள் செம ஹேப்பி. அதை ஈடுகட்டும் விதமாக அமைந்தது சமீபத்தில் வெளியான Dexter: New Blood.

லாங் டேர்ம் சீர்ஸாக வெளிவந்த இந்த சீரிஸின் ரீ-என்ட்ரி, மினி சீரிஸாக வார வாரம் வெளிவர இருக்கிறது. முதல் எபிசோடே தாறுமாறாக இருந்தது. என்னடா இது பழைய தலைவன் மிஸ் ஆகுறானே என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு பக்காவான ஒரு எண்டிங்காக இருந்தது முதல் எபிசோடின் முடிவு.
மொத்தமாக எபிசோடுகள் வெளியான பிறகு வேறு ஒரு ஆர்டிகிளில் அதைப் பற்றி கதைக்கலாம்.
0 Comments