லாக்டவுன் வெர்ஷன் இன்ஃபினிட்டி போய்கொண்டிருக்கிறது. கொரோனா 2-வது அலை வீசிக்கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளே முடங்கியிருக்கிறார்கள்?! அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர முடிகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நண்பர்களுக்கு கடந்த வாரம் 10 ஓ.டி.டி-யில் பார்க்க மற்ற மொழிப் படங்கள் பத்தைப் பரிந்துரைந்தோம். அதே வரிசையில் அடுத்த செட் ஆஃப் 10 படங்களைப் பார்க்கலாம் வாங்க!
Also Read – லாக்டவுனில் பார்க்க 10 ஃபீல் குட் படங்கள்! (பார்ட் – 1)
-
1 Agent Sai Srinivasa Athreya :
`ஜதி ரத்னாலு' நவீன் பாலிஷெட்டியின் மற்றொரு ப்ளாக்பஸ்டர் படம் இது. மூட நம்பிக்கையை செம காமெடியாக சொல்லியிருக்கிறார்கள். 2019-ல் வெளியான இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் கொரோனாவால் கணவரை இழந்த வயதான பெண்மணி ஒருவருடன் வீடியோ காலில் பேசியிருந்தார் நவீன் பாலிஷெட்டி. இவர் நடித்த `ஜதி ரத்னாலு' படத்தோடு சேர்த்து இந்தப் படத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார் அந்தத் தாய். அதைக் கேட்டதும் நெகிழ்ந்துவிட்டார். இதை அந்தப் பெண்மணியின் மகன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். நவீனின் ரகளையான காமெடி பட்டாஸ்களோடு சேர்த்து இவரது நடிப்பும் படத்திற்கு மிகப் பெரிய பலமாய் அமைந்திருந்தது.
-
2 Chhichhore
தற்கொலைக்கு எதிரான படம்தான் `சிச்சோரி'. அதுவும் கடந்த வருடம் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்ட சுஷாந்த் நடித்த படம். இதுதான் இன்னும் மன வேதனை. ஹாஸ்டலில் நடக்கும் எக்ஸ்ட்ரீம் ஃபன்களில் ஆரம்பித்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதுவரை ஒரு ஃபீல் குட் டிராவலாகத்தான் இந்தப் படம் இருக்கும். படத்தில் சுஷாந்த், தனது மகனிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தாலாட்டு. இதைத் தவிர லவ், ஃப்ரெண்ட்ஷிப், சீனியர் - ஜூனியர் ரிலேஷன்ஷிப், காலேஜ் கல்ச்சுரல்ஸ் என இடம்பெற்றிருக்கும் அனைத்தையும் நம் வாழ்வோடு பொருத்திப் பார்க்க முடியும்.
-
3 Varathan
இதைப் பார்க்கும் முன் ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ்தான் இதற்கு மிகப் பெரிய பலம். ஃபகத்தை `சைக்கோத்தனமான நடிகர்' என்று அவரது ரசிகர்கள் செல்லமாக அழைப்பதுண்டு. அதை இந்தப் படத்தின் க்ளைமாக்ஸில் பார்க்கலாம். பல இடங்களில் பொறுமை காத்து வரும் ஃபகத், க்ளைமாக்ஸின்போது வீறிட்டு எழுகிறார். அந்த ஒரு மொமன்ட்தான் மொத்த படமும்.
-
4 Porinju Mariyam Jose
`ஜோசஃப்' படத்தில் நடித்த ஜோஜு ஜார்ஜ்தான் இந்தப் படத்தின் நாயகன். அவரின் நண்பராக செம்பன் வினோத் நடித்திருப்பார். இவரும் செய்யும் லூட்டியோடு க்ளைமாக்ஸில் எதிர்பாராத ஒரு டிவிஸ்ட்டும் இருக்கிறது. இது ஒரு பக்கா கமர்ஷியல் படம். காமெடி, ஆக்ஷன், லவ் என எல்லாமே கலந்துகட்டி இருக்கக்கூடிய ஒரு படம். இதில் இடம்பெற்றிருக்கும் பாடல்களும் ஸ்கிப் செய்ய முடியாதபடி இருக்கும். ஏகப்பட்ட மாஸ் மசாலா அனுபவங்களை இந்தப் படத்தில் அனுபவிக்கலாம்.
-
5 Hit :
கடந்த வருடம் தெலுங்கில் வெளியான மிக முக்கியமான படம். நானி தயாரிப்பில் விஷ்வக் சென் ஹீரோவாக நடித்திருப்பார். எப்பேற்பட்ட இக்கட்டான கேஸ்களையும் அசால்ட்டாக டீல் செய்வதுதான் ஹீரோவின் ஸ்டைல். கார் ப்ரேக்டவுன் ஆகி நெடுஞ்சாலையில் தனது அப்பாவுக்காக காத்துக்கொண்டு நிற்கிறார் ப்ரீத்தி. இவரைப் பார்த்த போலீஸும் என்னவென கேட்கிறார். தனது அப்பாவுக்காக காத்திருக்கிறார் என அவரிடம் சொல்வார். ஆனால், மறுநாள் ப்ரீத்தி மிஸ்ஸிங். அங்கிருந்து ஆரம்பமாகிறது கதை.
-
6 Nani's Gang Leader :
நானி நடிப்பில் வெளியான சிரிப்பு பட்டாசுதான் `கேங் லீடர்'. படத்தின் ஆரம்பத்தில் ஒரு திருட்டு நடக்கிறது. அதை செய்த 5 நபர்களும் கொலை செய்யப்படுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இவர்களின் நெருக்கமான சொந்தங்கள் ஏன் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என கண்டுபிடிக்கக் கிளம்புகிறார்கள். இதற்குள் எப்படி நானி வந்தார், வந்த பிறகு என்னென்ன லூட்டிகள் நடக்கிறது என்பதுதான் மிச்ச படம். சரண்யா, லட்சுமி, குட்டி பாப்பா ப்ரான்யா என ஒவ்வொருவரும் தங்களது பெஸ்ட்டைக் கொடுத்திருப்பார்கள்.
-
7 Anjaam Pathira
கடந்த வருடம் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியான த்ரில்லர் படம்தான் `அஞ்சாம் பதிரா'. சைக்காலஜி துறையில் பணியாற்றும் குஞ்சாக்கோ போபன், கேரளா காவல்துறையுடன் சேர்ந்து ஒரு சீரியல் கொலையை விசாரிக்க உதவுகிறார். கொலையாளி யாராக இருப்பார் என்ற பதற்றத்திலேயே நம்மை படம் முழுக்க வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முடிச்சாக அவிழும் போது படம் சுவாரஸ்யத்தின் உச்சிக்கே செல்கிறது.
-
8 Ulidavaru Kandante
ரக்ஷித் ஷெட்டி இயக்கி நடித்த படம் `உலிடவரு கண்டன்டே'. ஆந்தாலஜியாக உருவாகியிருக்கும் இந்தப் படம் தமிழில் `ரிச்சி'யாக வெளியானது. நிவின் பாலி ஹீரோவாக நடித்திருப்பார். கன்னடத்தில் வெளியான கல்ட் ரக சினிமாதான் இந்தப் படம். கதை நம்மை ஒரு பக்கம் பிரமிக்க வைத்தால் டெக்னிக்கல் விஷயங்கள் நம்மை மிரல வைக்கும். அதே சமயம் அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும் வேற லெவலில் ஒர்க்அவுட் ஆகியிருக்கும். படம் பார்த்து முடிந்த பிறகு ரக்ஷித் ஷெட்டி சொல்லும் `Cuban kid' கதை கட்டாயம் உங்களது மைண்டில் ஓடிக்கொண்டே இருக்கும்.
-
9 Good Newwz
அக்ஷய் குமார், தில்ஜித், கரீனா கபூர், கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில் வெளியான படம் `குட் நீயூஸ்'. ஒரு பக்காவான ஃபேமிலி டிராமா அதோடு சேர்த்து காமெடிக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத இரு தம்பதியினர், செயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கு சில பல குழப்படிகள் ஏற்பட, மொத்தக் கதையும் காமெடியாக நகரத் தொடங்குகிறது.
-
10 Avane Srimannarayana
ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் வெளியான ஃபேன்டஸி படம்தான் `அவனே ஶ்ரீமன் நாராயாணா'. கற்பனையான உலகில் கதை நகர்வதால் லாஜிக்கை எல்லாம் ஒரு பக்கம் ஓரங்கட்டி விடலாம். 3 மணி நேரம் என்பதால் படம் ஒரு கட்டத்தில் லேசாக போர் அடிக்க ஆரம்பித்தாலும் மீண்டும் ஸ்பீடு எடுத்துவிடும். `இரும்புகோட்டை முரட்டு சிங்கம்' ஃபார்மட்டில் ஒரு ஜாலியான படம் பார்த்த ஃபீலை கட்டாயம் இது உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.
0 Comments