அமேசான் பிரைமில் கடந்த 2019-ம் ஆண்டு தி ஃபேமிலி மேன் முதல் சீசன் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் சீசன் 2 நாளை அதாவது ஜூன் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியா மணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் நடித்துள்ளனர். சமந்தாவுக்கு ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் தொடர் இந்த ஃபேமிலி மேன் சீசன் 2. இந்த தொடருக்கான ட்ரெய்லர் கடந்த மே மாதம் 19-ம் தேதி வெளியானது. தொடர்ந்து மூன்று நாள்கள் டிரெண்டிங்கில் இருந்த இதன் ட்ரெய்லர் இதுவரை 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த தொடர் அதே அளவு சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
தி ஃபேமிலி மேன் முதல் சீசனில் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே – நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் வாழ்க்கைக் கதையை முன்வைத்தனர். அதோடு சேர்த்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தூண்டப்பட்டு நடத்தப்படும் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்களை ஹீரோ முறியடிப்பதாகவும் காட்டப்படும். இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் காஷ்மீரின் புவிசார் அரசியல் நிலைமை ஆகியவை பற்றியும் காஷ்மீரில் உள்ள மக்களுக்கு விசாரணை அமைப்புகள் மீதான அவநம்பிக்கை பற்றியும் இணைய வசிதகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் ஆகியவற்றை முடக்குவதன் பின்னால் உள்ள அரசியல் பற்றியும் முதல் சீசனில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முந்தைய சீசனைப் போலவே இரண்டாவது சீசனில் இலங்கைப் போராளிகள் தொடர்பான பிரச்னைகளைப் பேச இருப்பதாகத் தெரிகிறது. தமிழர்களையும் பிரச்னையையும் தவறாக சித்தரிப்பதும் சமந்தா இதில் கிளர்ச்சியாளராக நடித்திருப்பதும்தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சமந்தாவின் நான் எல்லோரையும் சாகக் கொல்லுவேன்’ போன்ற வசனங்கள் கடுமையான எதிர்ப்பைக் கிளப்பியுள்ளன. இந்த நிலையில், ஈழ ஆதர்வாளர்கள் சமந்தாவுக்கு எதிராக #ShameonYouSamantha’ ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் நேற்று டிரெண்ட் செய்தனர். இதனைத் தொடர்ந்து சம்ந்தாவின் ரசிகர்கள் இன்று #WeSupportSamantha’ மற்றும்
#WeLoveSamantha’ போன்ற ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இந்தத் தொடரை தடை செய்ய வேண்டுமென மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த தொடர் தமிழர்களை எதிர்மறையான கண்ணோட்டத்தில் காட்டுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். “தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்திருப்பவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். தமிழ் கலாசாரம் மற்றும் மக்களின் உணர்வுகளை இந்தத் தொடரின் வழியாக புண்படுத்தியுள்ளனர். எனவே, இந்த தொடர் குறித்து மக்கள் தங்களது கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்” என்று எழுதியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுதொடர்பாக வெளிட்டுள்ள அறிக்கையில், “இந்தியில் வெளியாகும் தி ஃபேமிலி மேன் சீசன் 2 தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்த போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல. ஈழத்தில் 2 லட்சம் தமிழர்களை சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குப் பறிகொடுத்துவிட்ட சூழ்நிலையிலும் மிகப்பெரும் சனநாயகவாதிகளாக நின்று அறப்போராட்டம் வாயிலாகவும் சட்டப் போராட்டம் வாயிலாகவும் உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் தீவிரவாதிகளென காட்ட முனைவது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!” என்று தெரிவித்துள்ளார்.
ஃபேமிலி மேன் தொடரின் இயக்குநர்கள் ராக் மற்றும் டிகே சர்ச்சைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ட்ரெய்லரில் வெளியான ஒருசில காட்சிகளை வைத்து சில அனுமானங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த தொடரில் பணியாற்றியுள்ள முன்னணி நடிகர்களும் எழுத்தாளர்களும் தமிழ மக்கள் மற்றும் அவர்களின் உணர்வுகளை நன்கு அறிவோம். தமிழ் மக்கள் மீது எங்களுக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது. சீசன் ஒன்றைப் போலவே இந்த இரண்டாவது சீசனையும் மக்கள் காத்திருந்து மக்கள் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் இந்த தொடரைப் பார்த்ததும் எங்களை நிச்சயம் பாராட்டுவீர்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
மனோஜ் பாஜ்பாய் இந்த சர்ச்சைகள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தக் குழுவில் தமிழர்கள் அதிகம் உள்ளனர் என்பதை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “ராஜ் மற்றும் டி.கே, சமந்தா, பிரியாமணி, எழுத்தாளர் சுமன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் உணர்வுகள் மீதான மரியாதையை நிலைநிறுத்த அவர்கள் தேவையானவற்றை செய்துள்ளனர். பன்முகத்தன்மையை நம்பும் தொடராகவே இது உருவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா இதுதொடர்பாக எந்த வார்த்தையையும் பேசாதது தமிழர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. சமந்தா இதுதொடர்பாக பேசினால் ஃபேமிலி மேன் தொடருக்கு இன்னும் அதிகமாக விமர்சனங்கள் எழும் என்பதால் அவர் பேசவேண்டாம் என அமேசான் சமந்தாவிடம் கேட்டுக்கொண்டதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read : இளையராஜா பாடல்களின் சுவாரஸ்ய பின்னணி தெரிஞ்சுக்கலாமா? #HBDIlayaraja