Ilayaraja

இளையராஜா பாடல்களின் சுவாரஸ்ய பின்னணி தெரிஞ்சுக்கலாமா? #HBDIlayaraja

இசைஞானி இளையராஜாவைத் தவிர்த்துவிட்டு தமிழ் சினிமா இசை வரலாற்றை எழுத முடியாது. 1976-ல் அன்னக்கிளியில் தொடங்கிய பயணம் மூன்றாவது தலைமுறை ஹீரோக்கள் வரை நீண்டிருக்கிறது. `ராஜா சார் பாட்டுதான் எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு ஒரே ஆறுதல்’ என்று சொல்லும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது இசைக்கு உணர்வூட்டுபவர்கள். பாடல்களுக்காகவே படங்கள் ஓடிய வரலாறெல்லாம் இருக்கிறது. ஆயிரம் படங்களுக்கு மேல் சுமார் ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இசைராஜா இளையராஜா பாடல்கள் சில உருவான சுவாரஸ்யப் பின்னணி உங்களுக்காக…

புது மாப்பிள்ளைக்கு…. பப்பாப்பரெ… நல்ல யோகமடா – அபூர்வ சகோதரர்கள்

அபூர்வ சகோதரர்கள் அப்பு கேரக்டருக்கு ஒரு தனிப்பாடல் வேண்டுமென கமல்ஹாசன், இளையராஜாவிடம் கேட்கவே, தன்னுடைய பாணியில் அற்புதமான மெலடி ஒன்றைப் போட்டுக் காண்பித்திருக்கிறார். ஆனால், அதில் திருப்தியடையாத கமல், மெலடியில் துள்ளலும் கலந்து வேண்டுமென கேட்டு உதாரணத்துக்கு எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற பாடலான `நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்…’ பாடலைச் சொல்லியிருக்கிறார்.

உடனே அதே டோனில் ரப்ப்பப்பா… ரப்பப்பரே என இளையராஜா போட்ட ட்யூன் கமலைக் கவர்ந்தது. இந்த ட்யூன்போட எப்படி ஐடியா வந்தது என கமல் கேட்கவே, நீங்கள் கேட்டதை நான் திருப்பிக் கொடுத்திருக்கிறேன்’ என்றவாறே,நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் பாடலை புது மாப்பிளைக்கு ரப்பப்பா… ரப்பப்பரே என திருப்பிக் கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். இதை ஒரு நிகழ்ச்சியில் எஸ்.பி.பியிடம் இளையராஜாவே பகிர்ந்துகொண்டார். இசையமைப்பது ஒரு மேஜிக் மேன் வேலை என்றும் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.

அன்னக்கிளி படப் பாடல்கள்

இளையராஜாவை அன்னக்கிளி படம் மூலம் திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம். சிவக்குமார், சுஜாதா, ஃபடாபட் ஜெயலட்சுமி, தேங்காய் சீனிவாசன் நடிப்பில் 1976-ல் வெளிவந்த அந்தப் படம் தமிழ் திரையிசையில் புதிய ஒளிவெள்ளம் பாய்ச்சியது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த மச்சானப் பார்த்தீங்களா’, `அன்னக்கிளி உன்னைத் தேடுதே…’ உள்ளிட்ட பாடல்கள் பெரிய ஹிட்டடித்தன.

பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை நுங்கம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டலில் முதன்முதலில் சந்தித்திருக்கிறார். அவரின் உதவியாளர் செல்வராஜ் என்பவர் மூலம் பஞ்சு அருணாச்சலத்தைச் சந்தித்த இளையராஜா, அங்கிருந்த மேசையில் கையில் தாளமிட்டபடியே மேற்குறிப்பிட்ட இரண்டு பாடல்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பாடல்களின் தாளங்களைப் போட்டுக்காட்டியிருக்கிறார். அதில், லயித்துப்போன பஞ்சு அருணாச்சலம், இளையராஜாவுக்கு அன்னக்கிளி பட வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

காதலின் தீபம் ஒன்று- தம்பிக்கு எந்த ஊரு

ராஜசேகர் இயக்கத்தில் ரஜினி – மாதவி, சுலக்‌ஷனா,செந்தாமரை, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் 1984-ல் வெளியான படம் தம்பிக்கு எந்த ஊரு. கலெக்‌ஷன் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்துமே ஹிட் ரகம். அதிலும் குறிப்பாக காதலின் தீபம் ஒன்று பாடல் ரஜினியை ரொமான்ஸ் ஹீரோவாக நிலைநிறுத்தியது. அந்தப் பாடலுக்கான ட்யூனை மருத்துவமனையில் இருந்தவாறே போட்டுக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. உடல்நலக் குறைவால் சிகிச்சைபெற்று வந்த நிலையில், காதலின் தீபம் ஒன்று ட்யூனை விசில் மூலமாகவே போட்டுக் கொடுத்தார். அந்தப் பாடல் காலத்தில் அழியாத ஒன்று.

முதல் மரியாதை பாடல்கள்

சிவாஜி – ராதா நடிப்பில் பாரதிராஜா இயக்கிய படம் முதல் மரியாதை. பொருந்தா காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்தப் படம் வெற்றி பெறாது என்று கருதப்பட்டதாம். ஆனாலும், நண்பனுக்காக அந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. வெற்றிபெறாத படத்துக்கு எதுக்கு சம்பளம் என முதல் மரியாதை படத்துக்காக அவர் ஊதியமும் பெறவில்லையாம். நட்புக்காக இசையமைத்ததாக இருக்கட்டும் என்று பெருந்தன்மையோடு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். ஆனால், முதல் மரியாதை பாடல்களின் ரீச் நமக்கெல்லாம் தெரியும். அந்தப் படத்தில் ராஜாவின் மேஜிக் அனைவரையும் கட்டிப்போட்டது. பூங்காற்று திரும்புமா, அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன், நான்தானே அந்தக் குயில் உள்பட 7 பாடல்களுமே பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது.

Also Read – நீங்க எந்தளவுக்கு மணிரத்னம் ரசிகர்… ஒரு குட்டி டெஸ்ட்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top