அலைபாயுதே ஏன் பிளாக்பஸ்டர்… 5 காரணங்கள்!

ரோஜா, பம்பாய், இருவர், உயிரேன்னு தொடர்ந்து சர்ச்சையான படங்களை இயக்கிக்கிட்டிருந்த மணிரத்னம், காம் & கம்போஸ்டா ஒரு லவ் படம் பண்ணனும்னு நினைச்சு பண்ண படம்தான் ‘அலைபாயுதே’. மேடி ஹீரோவா அறிமுகமான முதல் படமும் இதுதான். 2000- வருச தமிழ் புத்தாண்டுக்கு கேப்டனோட வல்லரசு, கார்த்திக் நடிச்ச ‘சந்தித்த வேளை போன்ற படங்களுக்கு போட்டியா ‘அலைபாயுதே’ படமும் வெளியாச்சு. இந்த ரேஸ்ல ஒரு பக்கம் ‘வல்ல்லரசு’ மூணு செண்டர்லயும் மாஸா அடிச்சு நொறுக்கிக்கிட்டிருக்க, இன்னொருபக்கம் ‘அலைபாயுதே’ கிளாஸா, சத்தமே இல்லாம தன்னோட வெற்றியை அடைஞ்சுது. பெர்லின் உலக திரைப்பட விழா உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்கள்ல திரையிடப்பட்டு பெருமை பெற்ற கல்ட் கிளாசிக் படமான ‘அலைபாயுதே’ படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த 5 காரணிகளைப் பற்றிதான் இப்போ நாம பார்க்கப்போறோம்.

மணிரத்னம்
மணிரத்னம்

மணிரத்னம்

நடிகர் நாசர் தன்னோட மனைவி கமீலாவை காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டப்போ, கொஞ்சநாளைக்கு அந்த விஷயத்தை ரெண்டுபேரும் தங்களோட வீட்டுல சொல்லாம மறைச்சு எப்போதும்போலவே தங்களோட வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டிருந்தாங்க. இந்த விஷயம் பின்னாடி இண்டஸ்ட்ரியில அரசல் புரசலா பேசப்பட்டுச்சு. இந்த விஷயத்தைக் கேள்விபட்ட மணிரத்னம், பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியரான ஆர்.செல்வராஜூடன் இணைஞ்சு உருவாக்குன கதைதான் ‘அலைபாயுதே’. நாசர் வாழ்க்கை சம்பவத்துல செம்ம டிரெண்டி கதை ஒண்ணு இருக்குன்னு ஸ்பார்க் ஆனது தொடங்கி, அந்த காலத்து இளைஞர்கள் வாழ்வியலை, பிக்-அப் வேர்ட்ஸ் வரைக்கும் அப்டேட்டா பதிவு செஞ்சு தெறிக்கவிட்டிருப்பாரு மணிரத்னம். சுருக்கமா சொல்லனும்னா பெண்களுக்கு தாலிதான் எல்லாமேன்னு இருந்த 80’ஸ்ல அறிமுகமான மணிரத்னம், தன்னோட மௌனராகம் படத்துல ஹீரோயின் ரேவதி தாலிய கைல பிடிச்சுக்கிட்டு கெஞ்சுற மாதிரி சீன் வெச்சிருப்பாரு. அதே மணிரத்னம்தான் 2000-ல வெளியான அலைபாயுதே படத்துல, ஹீரோயின் ஷாலினி தன்னோட தாலிய கழட்டி சுவத்துல மாட்டி வெச்சுட்டு அதை தேடுற மாதிரி சீன் வெச்சிருந்தாரு.

Alaipayuthey
Alaipayuthey

மணிரத்னத்தோட இந்த அப்டேசனும் சமூகத்தை புரிந்துகொண்டு அவர் எழுதிய எழுத்தும் இந்தப் படத்தோட வெற்றிக்கு மிக முக்கிய காரணம். ஒரு பையனும் பொண்ணும் லவ் பண்ணாங்க, பின்னாடி கல்யாணத்துக்கப்புறம் ரெண்டு பேரும் சண்டை போட்டு திரும்ப சேர்ந்தாங்கங்கிற ஒரு சாதாரண கதைக்கு நான் லீனியர் முறையில் மணிரத்னம் அமைத்த திரைக்கதை அப்போ ரொம்பவே புதுசா இருந்துச்சு. ஒருபக்கம் ப்ரெசண்ட் டேவுல மாதவன் ஷாலினியக் காணோம்னு தேடிக்கிட்டிருக்க, இன்னொருபக்கம் ஃப்ளாஷ்பேக்ல, அவங்க வாழ்க்கையை சொல்ற மாதிரி அமைக்கப்பட்ட திரைக்கதை படத்தோட சுவாரஸ்யத்துக்கு மிகப்பெரிய உத்தரவாதமா இருந்துச்சு. கூடவே மணிரத்னத்தோட மினி டயலாக்ஸ் வழக்கம்போல இந்தப் படத்துலயும் செம்ம ஸ்வீட் & ஷார்ப்பாவும் படு கேஷூவலாவும் இருந்துச்சு. எப்போ இருந்துசார் உங்களுக்கு இந்த ஆணவம் வர ஆரம்பிச்சுது.. நாலு காசு பார்த்ததுக்கப்புறமா நாலு படிப்பு படிச்சதுக்கப்புறமாங்கிற எவர்கிரின் வசனம்லாம் சான்ஸே இல்ல.

ஏ.ஆர்.ரஹ்மான்

சும்மாவே தெறிக்க விடுற நம்ம ஏ.ஆர்.ரஹ்மான், மணி ரத்னம்னா கொஞ்சம் ஸ்பெசலாவே கொடுப்பாரு. அப்படி அலைபாயுதே படத்துலயும் பிட் ஸாங் உட்பட 10 ஸாங்ஸை நறுக்குன்னு கொடுத்திருப்பாரு. அதுக்கேத்தமாதிரி அந்த பத்துப்பாட்டுலயும் கவிப்பேரரசு வைரமுத்துவோட வரிகளும் முக்கிய பங்கு வகிச்சுது. அதுல ‘யாரோ யாரோடி பாட்டு’ பின்னாடி 2008-ல வெளிவந்த தி ஆக்ஸிடெண்டல் ஹஸ்பெண்ட்ங்கிற ஹாலிவுட் படத்துல மீண்டும் பயன்படுத்தப்பட்டு ஹாலிவுட் ரசிகர்களையும் தாளம் போட வெச்சுது. அலைபாயுதே படம் வந்ததுக்கப்புறம் உருவான எல்லா கல்யாண வீடியோ கேசட்கள்லயும் மாங்கல்யம் தந்துனானே பாட்டு தவறாம இடம்பிடிக்க ஆரம்பிச்சுது. இன்னைக்கும் எஃப்.எம்ல ஸ்வர்ணலதாவின் குரல்ல எவனோ ஒருவன் பாடல் ஒலிக்காத ராத்திரிகள் இல்ல.கௌதம் மேனன் அடிக்கடி தன்னுடைய பேட்டிகள்ல, எவனோ ஒருவன் பாட்டைப் பத்தி பலமுறை சிலாகிச்சு சொல்லியிருக்காரு.

அதே மாதிரி ஒரு படத்தோட ஆல்பத்துல இருந்து இத்தனை டைட்டில்கள் இதுக்கு முன்னாடி வந்திருக்குமான்னு ஆச்சர்யப்படுற அளவுக்கு சிநேகிதியே, காதல் சடுகுடு, எவனோ ஒருவன், பச்சை நிறமே, ரகசிய சிநேகிதனே, என்றென்றும் புன்னகைனு பல படங்களோட டைட்டில்கள் இந்த பட பாடல்கள்ல இருந்து உருவாகியிருக்கு. இப்படி இந்த அளவுக்கு ரீச் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் படத்தோட வெற்றிக்கு இன்னொரு முக்கியமான காரணம்னு சொல்லலாம்.

பி.சி.ஸ்ரீராம்

Alaipayuthey
Alaipayuthey

மணிரத்னம் – பி.சி.ஸ்ரீராம் காம்போங்கிறது தமிழ் சினிமாவுல ரொம்பவே ஸ்பெஷலான காம்போ. ’மௌனராகம்’, ‘நாயகன்’ ‘அக்னி நட்சத்திரம்’ மாதிரியான பெரிய பெரிய சம்பவங்களை செஞ்ச இந்த காம்போ, ஒரு சின்ன கேப்புக்கு அப்புறம், சரியா சொல்லனும்னா திருடா திருடா படத்துக்கபுறம் ஏழு வருசம் கழிச்சு திரும்ப சேர்ந்த படம் ‘அலைபாயுதே’. மணிரத்னத்துக்கும் பிசிக்கும் இடையே இருக்குற கெமிஸ்ட்ரியே ரொம்ப அலாதியானது. ஷூட்டிங் ஸ்பாட்ல ரெண்டு பேருக்கும் நடுவுல அடிக்கடி செம்ம ஹீட்டான கான்வர்சேஷன் நடக்கும். ஒரு கட்டத்துல ஹீட் ஓவராகி பேக்கப்னு கத்திட்டு ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் போய்டுவாங்களாம். அவங்க அப்படி போறதை பாக்கும்போது படமே டிராப் ஆகிடும்; இல்ல வேற கேமராமேன் வருவாங்கன்னு ஆளாளுக்கு ஒண்ணு நினைச்சுக்கிட்டிருக்கும்போது மறுநாள் பாத்தா ரெண்டு பேரும் எதுவுமே நடக்காத மாதிரி சிரிச்சு பேசிக்கிட்டே ஸ்பாட்டுக்குள்ள எண்ட்ரி கொடுப்பாங்களாம். இப்படி அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் இருக்குற அந்த ஸ்பெஷல் கெமிஸ்ட்ரியும் இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் தந்த கலர்ஃபுல் ஒளிப்பதிவும் வெற்றிக்கு முக்கிய காரணமா இருந்துச்சுன்னு சொல்லலாம்.

மாதவன்

Alaipayuthey
Alaipayuthey

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒரு டால்கம் பவுடர் விளம்பரத்தை ஹிந்தியில இயக்குறாரு, அதுல மாடலா நடிக்க வந்த மாதவனை பார்த்து வியந்த சந்தோஷ் சிவன் அவரை மணிரத்னத்தின் இருவர் படத்துக்கு ரெஃபர் பண்றாரு. இந்தப் படத்துல உனக்கான ரோல் இல்ல, ஆனா நிச்சயம் உன்ன நான் பயன்படுத்துறேன்னு சொன்ன மணிரத்னம் அதுக்கப்புறம் 3 வருசம் கழிச்சு அவரை ஒரு படத்துல பயன்படுத்துனாரு. அதுதான் ‘அலைபாயுதே’. தலையில ஹெட்போன் மாட்டி, சிரிச்சுக்கிட்டே என்றென்றும் புன்னகைன்னு பைக்ல அறிமுகமாகும்போதே இளம்பெண்கள்னு இல்ல படம் பார்க்குற எல்லோரையும் தன்னை நோக்கி ஈர்க்க ஆரம்பிச்சிடுவாரு மாதவன். படத்தோட முதல் சீன்ல அவர் தந்த அழகான ஸ்கீரின் ப்ரெசன்ஸை படத்தோட கடைசி ஃப்ரேம்வரைக்கும் கொஞ்சம்கூட குறையாம பாத்துக்கிட்டு மாதவன் ஸ்கோர் பண்ணியிருப்பார். காதல் காட்சிகள் தொடங்கி, கோபப்படுற காட்சிகள், மனைவியை தேடி தவிக்குற காட்சிகள், கிளைமேக்ஸ்ல ஆக்ஸிடெண்டுன்னு தெரிஞ்சதும் பரிதவிக்கிற காட்சிகள்னு மனுசன் முதல் படம்னே சொல்ல முடியாத அளவுக்கு தன்னோட பர்ஃபாமென்ஸை செம்மையா கொடுத்திருப்பாரு. என்னதான் அங்க மணிரத்னம்ங்கிற ஒரு மாஸ்டர் இருந்தாலும் அவர் தர்றதை அவர்கிட்ட இருந்து சிந்தாம சிதறாம ரிசீவ் பண்ணி டெலிவரி பண்ண ஒரு டேலண்ட் வேணும் இல்லையா, அது மாதவனுக்கு முதல் படத்துலயே நிறைய இருந்துச்சு. கூடவே படத்தின் மீதான தனிப்பட்ட அவரது ஆர்வமும் அதிகமாவே இருந்துச்சு.

Also Read – ரமணா படத்தை பிளாக்பஸ்டராக்கிய 4 காரணங்கள்!

இப்படி ஷூட்டிங் ஸ்பாட்ல மாதவன் அடிக்கடி மணி ரத்னம், பிசி,ஸ்ரீராம்னு ஒருத்தரையும் விடாம, அது எப்படி சார் இது எப்படி சார்னு ஆர்வமா கேட்டுக்கிட்டே இருப்பாராம். இது சில தடவை யூனிட்ல இருக்குறவங்களுக்கு பிரச்சனையாவும் இருந்திருக்கு சில தடவை நல்லதும் செஞ்சிருக்கு. உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்லலாம். எவனோ ஒருவன் பாட்டு முடியும்போது மாதவனும் ஷாலினியும் மீட் பண்ற அந்த சீனை அன்னைக்கு ஷூட் பண்றாங்க. மணிரத்னம் வர்றாரு, மாதவன்கிட்ட வந்து, ரொம்ப நாள் கழிச்சு, அலைஞ்சு திரிஞ்சு அவங்களை பார்க்குறீங்க, பார்த்ததும் உங்க ஃபீலிங் மொத்தத்தையும் நீங்க ஃபுல் எமோஷனாலா கொடுக்குறீங்க, நல்லா அழுது எமோஷனலா பண்ணுங்கன்னு சொல்றாரு. மணிரத்னம் அப்படி சொல்லி முடிச்சதும் மாதவன், சார் எனக்கு ஒரு சின்ன டவுட் அப்படின்னு கேட்டிருக்காரு. என்ன அப்படினு மணி ரத்னம் நிமிர்ந்து பாத்து கேட்க, சார், நீங்க சொல்ற அளவுக்கு இவ்ளோ ஹெவியா நான் நடிச்சேன்னா, படம் பாக்குறவங்களுக்கு இதுவே ஒரு கிளைமேக்ஸ் ஃபீல் கொடுத்திடும். இப்பவே நான் இப்டி நான் அழுதுலாம் நடிச்சிட்டேன்னா, திரும்ப நான் கிளைமேக்ஸ்ல இதே பர்ஃபாமென்ஸ் பண்ணா, அது ஒர்க் ஆகுமா சார்னு சொல்ல, மணி ரத்னம் எதுவுமே சொல்லாம மாதவனையே உத்து பாத்துருக்காரு யூனிட் மொத்தமும், ‘போச்சு, இந்தாளுக்கு இதெல்லாம் தேவையா, யார்கிட்ட போய் என்னலாம் சொல்லிக்கிட்டிருக்காரு பாரு’ன்னு பதட்டமாக, மணிரத்னம் பேக்கப்னு சொல்லிட்டு தன்னோட கார்ல ஏறிப்போய்ட்டாராம். அதுக்கப்புறம் மாதவன் உள்ளிட்ட எல்லோருமே அடுத்து என்ன ஆகுமோ ஏது ஆகுமோனு பயந்துக்கிட்டிருக்க, அன்னைக்கு ராத்திரி மணிரத்னத்துக்கிட்டயிருந்து மாதவனுக்கு போன் வந்திருக்கு. ‘நான் நல்லா யோசிச்சேன். எஸ் நீங்க சொன்னது கரெக்ட், நாளைக்கு கொஞ்சம் எமோஷனல் கம்மியாவே எடுத்துடலாம்’னு சொல்லியிருக்காரு. இப்படியான மாதவனுடைய பங்களிப்புகள் எல்லாமே இந்தப் படத்தோட வெற்றிக்கு முக்கிய காரணமா இருந்திருக்கு.

கேஸ்டிங்

மணிரத்னம் இந்தப் படத்தை, ஹீரோ, ஹீரோயின் உட்பட எல்லோரையும் முழுக்க முழுக்க புதுமுகங்களா வைச்சு எடுக்கனும்னுதான் ஆரம்பத்துல நினைச்சாரு. ஹீரோயின் ஷக்தி கேரக்டருக்கு வசுந்தரா தாஸை ஆடிசன் பண்ணி அவரை இந்தப் படத்துல அறிமுகப்படுத்தலாம்னுலாம் மணிரத்னம் ப்ளான் பண்ணியிருந்தாரு. அதுக்கப்புறம்தான் ஷாலினிய ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ணாரு. ஆனா ஷாலினியைத் தவிர்த்து மிச்ச எல்லா முக்கிய ரோலையும் மணிரத்னம், தான் ஆசைப்பட்ட மாதிரி புதுமுகங்களையே வைச்சு படமாக்குனாரு.

Alaipayuthey
Alaipayuthey

டிவி ஆங்கரா இருந்த ஸ்வர்ணமால்யா, நாடக நடிகரா இருந்த கார்த்திக் குமார், சீரியல்கள்ல வந்த ஸ்ரீரஞ்சனி, ரவி பிரகாஷ், கவிதாலயா நிறுவனத்துல வேலைபாத்துக்கிட்டிருந்த பிரமிட் நடராஜன், தன்னோட உதவி இயக்குநரா இருந்த அழகம்பெருமாள்னு இப்படி புதுமுகங்களை வெச்சே ஒரு வித்தியாசமான கேஸ்டிங்கை மணிரத்னம் அமைச்சிருப்பாரு. போதாக்குறைக்கு கிளைமேக்ஸ்ல வந்த அர்விந்த் சாமி குஷ்பு கேமியோவும் படத்துக்கு மிகப்பெரிய எனர்ஜி கொடுத்துச்சு. இப்படி மணிரத்னம் பாத்து பாத்து செஞ்ச இந்தப் படத்தோட கேஸ்டிங்கும் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமா இருந்துச்சு.

`அலைபாயுதே ரிலீஸாகி, 22 வருஷம் ஆச்சு. ஆனா இன்னைக்கும் அதோட ஸ்வீட்னஸ் கொஞ்சம் கூட குறையலை, இன்னைக்கும் உங்ககிட்ட யாராவது தமிழ்ல வந்த பெஸ்ட் பத்து லவ் படங்களை சஜ்ஜஸ்ட் பண்ணுங்கன்னு கேட்டா, அதுல ஒண்ணா கண்டிப்பா நீங்க ‘அலைபாயுதே’ படத்தை சஜ்ஜஸ்ட் பண்ணுவீங்க. இன்னைக்கு இல்ல, இன்னும் 20 வருசம் கழிச்சு கேட்டாலும் நீங்க இந்தப் படத்தை சஜ்ஜஸ்ட் பண்ணுவீங்க. அதுதான் ‘அலைபாயுதே’ படத்தோட வெற்றி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top