ஒரு காலத்தில் தனது திராவிட நிறத்தாலும் எளிமையானத் தோற்றத்தாலும் ஓரங்கட்டப்பட்டு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தென்னிந்தியாவின் முக்கிய நட்சத்திரமாக பளபளத்துக்கொண்டிருக்கிறார். இன்று பல உதவி இயக்குநர்கள் ஐஸ்வர்யா ராஜேஷை மனதில் வைத்து கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எப்படி வந்தது அவருக்கு இந்த மாற்றம்..? பார்த்துவிடலாம்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம் சினிமா பின்னணியைக் கொண்டது என்றாலும் அவர்கள் அனைவரும் சாதாரண நிலையில் இருந்தவர்கள்தான். அதாவது அப்பா ராஜேஷூம், தாத்தாவும் மிக சின்னஞ்சிறு ரோல்களில் நடித்துவந்தவர்கள். அம்மா நாகமணி ஒரு டான்சர். ஐஸ்வர்யா ராஜேஷின் அத்தையான ஸ்ரீலெட்சுமி மட்டும் தெலுங்கில் ஓரளவு பரிச்சயமான காமெடி ரோல்களில் நடித்தவர். இப்படி அவர் வளர்ந்த சூழலே சினிமா பின்னணியைக் கொண்டிருந்ததால் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இயல்பாகவே சினிமாமீது ஆர்வம் அதிகம் இருந்தது. 1996-ஆம் ஆண்டு, தனது ஆறு வயதில் இவர் ‘ராம்பண்டு’ எனும் தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஆனால் குழந்தை நட்சத்திரமாக அவரால் பெரிய அளவில் சோபிக்கமுடியவில்லை.
அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி முடித்து, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்துவந்தபோது தனது நடனத் திறமையை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். அந்த காலகட்டத்தில் நடந்த காலேஜ் கல்ச்சுரல்ஸ் போட்டிகளில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடனம்தான் பெரிய பேசுபொருளாக இருக்கும். இந்த உற்சாகத்தில் மீடியாவில் பெரிதாக ஏதாவது சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் முயற்சித்தவருக்கு கிடைத்தது எல்லாம் லோக்கல் சேனல்களில் காம்பியரிங் செய்யும் வாய்ப்பும் பட்ஜெட் குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் மட்டும்தான். ஆனாலும் கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக செய்துவந்தவருக்கு, 2007-ஆம் ஆண்டு சன் டிவியில் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷூக்கு, உடனே கலைஞர் டிவியில் இடம்பெற்ற ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நடனத் திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்தும் வாய்ப்பும் அமைந்தது.
இப்படி போய்க்கொண்டிருந்த நிலையில் ஹீரோயினாக அறிமுகமாகவதற்கு பெரும் முயற்சிகளைச் செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆக்டிவ் முன்னணி சினிமாக்காரர்களால் இவரது நிறமும் தோற்றமும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனாலும் விடாமுயற்சியாக கடுமையாகப் போராடினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் விளைவாக, 2010-ஆம் ஆண்டு வெளியான ‘நீதானா அவன்’ எனும் படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு. மிக மிக அமெச்சூராக உருவான இந்த குறைந்த பட்ஜெட் படத்தில் மற்றவர்கள் எல்லாம் படு சுமாராக நடித்திருக்க, ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு மட்டும் அனைவரையும் கவரும் விதமாக அமைந்தது. இதனால் இதுபோன்ற சின்ன பட்ஜெட் படம் எடுப்பவர்களின் விருப்பமானத் தேர்வாக மாறிப்போனார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவ்வாறு ‘அவர்களும் இவர்களும்’, ‘உயர்திரு 420’ போன்ற மிக சுமாரான படங்களில் நடித்து வந்தவருக்கு 2012-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையைத் தந்தது.
கரியரின் திருப்புமுனை
இயக்குநர் பா.ரஞ்சித்தின் முதல் படமாக 2012-ஆம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படத்தில் அமுதா எனும் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அதில் மிகச் சிறப்பாக அவர் நடித்து படமும் வெற்றியடையவே தொடர்ந்து, ‘ரம்மி’, ‘பன்னையாரும் பத்மினியும்’, ‘திருடன் போலீஸ்’ போன்ற டீஸண்ட் படங்களில் தெரிந்த முகமாக வலம் வரத்தொடங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அந்நிலையில் 2014 –ஆம் ஆண்டு வெளியான ‘காக்கா முட்டை’ படத்தில் எந்த ஹீரோயினுமே நடிக்கத் தயங்கும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக, அதுவும் எந்த வித மேக்கப்பும் இல்லாமல் தனது இயல்பான நடிப்பை வழங்கி ஒட்டுமொத்த திரையுலகையே ஆச்சர்யப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பிறகு நட்சத்திர அந்தஸ்துக்கு வந்த அவர் தொடர்ந்து, ‘ஆறாது சினம்’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘தர்மதுரை’ போன்ற படங்களில் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கிவந்தார்.
Also Read:
இப்படிப் போய்க்கொண்டிருந்த அவரது கரியர் கிராஃபில் 2018 –ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு வெளியான ‘வட சென்னை’ படம் அவருக்கு ஒருவிதமான உயர்வைத் தந்தது என்றால் அந்த ஆண்டின் இறுதியில் வெளியான ‘கனா’ படம் வேறு மாதிரியான ஒரு அந்தஸ்தை அவருக்கு வழங்கியது. இந்த காலகட்டத்தில் அவரது புகழ் மற்ற மொழிகளிலும் பேசப்படத் தொடங்கியது. விளைவு 2017-ஆம் ஆண்டு‘ஜோமண்டே சுவிஷேஷங்கள்’எனும் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மலையாளத்திலும் அதே ஆண்டு ‘டேடி’ எனும் படம் மூலம் ஹிந்தியிலும் கால் பதித்தார். இதற்கிடையே ‘கனா’ படத்தின் தெலுங்கு வெர்சனும் அங்கு அவரது மார்க்கெட்டை உறுதி செய்தது.
‘கனா’ படத்திற்குப் பிறகு, இனி தான் ஒரு ரெகுலர் ஹீரோயின் இல்லை என தீர்மானித்துக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், தொடந்து தனது பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே தொடங்கினார். அப்படி வெளியான படங்கள்தான் ‘நம்ம வீட்டு பிள்ளை’ ‘க/பெ ரணசிங்கம்’, ‘திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ போன்ற படங்கள். இதனால் தற்போது அவருக்கென்று ஒரு பிஸினெஸ் உருவாகியிருக்கிறது. அவரை மனதில் வைத்து கதைகள் எழுதப்பட்டுவருகிறது. அவ்வாறு தற்போது ‘டிரைவர் ஜமுனா’, மலையாளப் படமான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக், ‘ஒருநாள் கூத்து’ இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து தன்னை மையப்படுத்தியிருக்கும் கதையுள்ள படங்களில் மட்டுமே நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
திறமையும் நம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கையின் எந்த நிலையிலிருந்தும் முன்னேறி மேலே வந்துவிடலாம் என்பதே ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த வளர்ச்சி நமக்குச் சொல்லும் பாடம்.
Also Read – தமன்னா ஃபேனா நீங்க… அவங்களைப் பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும்… டெஸ்ட் பண்ணிடலாமா?