’மேக்கப் மேன் டு பிரமாண்ட தயாரிப்பாளர்’ – ஏ.எம்.ரத்னம்… சில சுவாரஸ்யங்கள்!

தமிழ் சினிமாவில்  ‘இந்தியன்’, ‘காதலர் தினம்’ போன்ற பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பற்றிய சில சுவாரஸ்யமானத் தகவல்கள்.

* ஏ.எம்.ரத்னம் ,அடிப்படையில் ஒரு மேக்கப் கலைஞர். விஜயசாந்தியின் படங்களில் தொடர்ந்து பணியாற்றி, பின் அவரது நம்பிக்கைக்குரியவராகி எக்ஸ்கியூட்டிவ் ப்ரொடியூசராகவும் வளர்ந்து, பின் தயாரிப்பாளராக உயர்ந்தவர்  இவர்.

* நிறைய சென்டிமென்ட்  இவருக்கு உண்டு. தான் தயாரிக்கும் படங்களின் டைட்டில் தொடங்கி அவற்றின் டிசைன் வரைக்கும் தனது சென்டிமென்ட்களின் அடிப்படையில்தான் அவற்றை முடிவு செய்வார். மேலும், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு கலர் சட்டையை சென்டிமென்ட்படி அணிவதை வழக்கமாகவும் வைத்திருக்கிறார் ஏ.எம்.ரத்னம். 

Tweets with replies by A. M. Rathnam (@AMRathnamOffl) / Twitter
ஏ.எம்.ரத்னம்

* கிரண்பேடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு 1990-ஆம் ஆண்டு விஜயசாந்தி நடிப்பில் உருவான ‘கர்தவ்யம்’  எனும் படம்தான் இவரது தயாரிப்பில் உருவான முதல் படம். இந்தப் படம் மிகப்பெரிய வசூலையும் பல விருதுகளையும் குவித்ததுடன் தமிழிலும் ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ எனும்  பெயரில் டப் ஆகி பெரும் வெற்றியும் பெற்றது.

*தெலுங்கில் தொடர் வெற்றிகளைக் குவித்துவந்த ஏ.எம்.ரத்னம் முதன்முதலாக ‘இந்தியன்’ எனும் பிரம்மாண்ட படம் மூலமாகதான் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.

* இவரது தயாரிப்பில் உருவான ‘ரன்’ படத்தின் டிரைலரில் இடம்பெற்ற இங்கிலீஷ் வாய்ஸ் ஓவர் அப்போது ஒரு புதுமையான விஷயமாகப் பார்க்கப்பட்டது. அந்தப் படம் பெரும் வெற்றியடையவே, அதன்பிறகு அவர் தயாரித்த ‘ தூள்’, ‘கில்லி’ போன்ற படங்களின் டிரெய்லர்களிலும் இங்கிலீஷ் வாய்ஸ் ஓவர் பயன்படுத்துவதை சென்டிமென்டாக வைத்திருந்தார்.

* இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா, ‘உனக்கு 20 எனக்கு 18’, ‘கேடி’ போன்ற படங்களை இயக்கியவர். இளைய மகன் ரவி கிருஷ்ணா, ‘7ஜி ரெயின்போ காலணி’, ‘சுக்ரன்’ போன்ற படங்களின் ஹீரோ. இவர் தயாரித்த ‘நட்புக்காக’ படத்தின் கதை இவரது மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா எழுதியதுதான்.

* நன்கு கதையறிவு கொண்ட இவர் , தெலுங்கில் ‘பெட்டரிக்கம்’, ‘சங்கல்பம்’ என்னும் இரண்டு படங்களை டைரக்ட் செய்ததுடன் ‘நாகா’, ‘ஆக்ஜிஜன்’ ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் எழுதியிருக்கிறார்.

* ‘வாலி’ படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து முடித்தவுடனே எஸ்.ஜே.சூர்யாவை தனது அடுத்தப் படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்துவிட்டார்  ஏ.எம்.ரத்னம். அப்படி உருவானதுதான் விஜய் நடித்த ‘குஷி’.

குஷி
குஷி

* இயக்குநர் ஷங்கரின் சொந்தத் தயாரிப்பில் உருவான ‘முதல்வன்’ படத்தை ஹிந்தியில் ‘நாயக்’ எனும் பெயரில் ஷங்கர் இயக்கத்திலேயே தயாரித்தார் ஏ.எம்.ரத்னம். தியேட்டர்களில் வசூல் ரீதியாக இந்தப் படம் தோல்வியடைந்திருந்தாலும்  வட இந்திய சாட்டிலைட் சானல்களில் அதிக அளவில் ஒளிபரப்பப்படும் படங்களின் பட்டியலில் இன்றும் முன்னிலை வகித்துவரும் படமாக ‘நாயக்’ இருந்துவருகிறது.

* நம் அனைவருக்கும் தெரியும் ரஜினியின் ‘எந்திரன்’ படமானது ஏற்கெனவே கமல், ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் ‘ரோபோ’ எனத் தொடங்கப்பட்டு நின்றுபோன படம் என்று. அப்போது ‘ரோபோ’ படத்தின் தயாரிப்பாளராக இருந்தவர் ஏ.எம்.ரத்னம்தான்

* இதுவரை விஜய்யை வைத்து ஏ.எம்.ரத்னம் தயாரித்த ‘குஷி’, ‘கில்லி’, ‘சிவகாசி’ ஆகிய மூன்று படங்களுமே இவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்ததுடன் மட்டுமல்லாது மிகப்பெரிய லாபத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.

* இவரது தயாரிப்பில் உருவான ‘கேடி’, ‘தர்மபுரி’, ‘பீமா’ போன்ற படங்களின் தொடர் தோல்விகளால் நொடித்துப்போன இவர், நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித்தின் ‘ஆரம்பம்’ படம் மூலம்தான் கம்பேக் கொடுத்தார்.

* தெலுங்கில் நன்கு  மொழியறிவு கொண்ட இவர், தமிழிலிருந்து டப் செய்யப்பட்டு அங்கு வெளியாகும் சில படங்களின் பாடல்களையும் எழுதியுள்ளார். அவ்வாறு, ‘ஜீன்ஸ்’, ‘பாய்ஸ்’, ‘முதல்வன்’ ஆகிய படங்களின் தெலுங்கு டப் வெர்சனில் பாடல்கள் எழுதியது இவர்தான்.

* சாய்பாபா பக்தரான இவர் சென்னை வளசரவாக்கத்தில் சொந்தமாக ஒரு சாய்பாபா கோவிலைக் கட்டி நிர்வகித்து வருகிறார்.

* தான் தயாரித்த ‘இந்தியன்’ படத்திலேயே ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாக அறிமுகப்படுத்த முயற்சியெடுத்தார் ஏ.எம்.ரத்னம். ஆனால் அப்போது ஒரு விளம்பரப் பட நிறுவனத்துடன் ஐஸ்வர்யா ராய் போட்டிருந்த ஒப்பந்தம் முடிவடையாமல் இருந்ததால் அவரால் அந்தப் படத்தில் நடிக்கமுடியாமல் போனது.

ஹரிஹர வீரமல்லு
ஹரிஹர வீரமல்லு

* தனது இரண்டாவது இன்னிங்ஸுக்குப் பிறகும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த ஏ.எம்.ரத்னம், தற்போது பவன் கல்யாண் நடிப்பில் இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் ‘ஹரிஹர வீரமல்லு’ எனும் பிரம்மாண்டமான பேன்- இந்தியா படத்தைத் தயாரித்து வருகிறார்.

Also Read – `ஹீரோவுக்கு மாஸ்கூட்ட கேமரால என்ன ஷாட் வைப்பாங்க; Bird View’ – கேமரா ஆங்கிள்ஸ் தெரிஞ்சுக்கலாமா?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top