இயக்குநர் கே.விஸ்வநாத்

உங்கள் தீவிர ரசிகன் கமல்ஹாசன்.. கே.விஸ்வநாத் எனும் கலைஞனின் பயணம்!

தெலுங்கு சினிமாவில் இவரை ‘கலா தபஸ்வி’ என்றே சொல்வார்கள். இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது பெற்றவர். இங்கே பாலச்சந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா எல்லாம் போற்றப்பட்டு வருகிறார்களோ அதுபோலவே தெலுங்கில் இவர்தான். ஆம், இப்போது நம்மிடையே இல்லாமல் போன மகத்தான திரைப் படைப்பாளியும், கலைஞருமான கே.விஸ்வநாத் பற்றிதான் பேசுகிறோம். இவரோட தனித்துவங்கள் பற்றி மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் இவர் பதித்த தடங்கள்… குறிப்பாக, கமல்ஹாசனிடம் க்ளாஸ் நடிப்பைக் கொண்டுவந்தது பற்றி இந்த வீடியோ ஸ்டோரியில் பார்ப்போம்.

இயக்குநர் கே.விஸ்வநாத்
இயக்குநர் கே.விஸ்வநாத்

கே.விஸ்வநாத் 1930-ல் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர். 1957-ல் சென்னையில்தான் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1965-ல் இவர் இயக்கி வெளிவந்த முதல் திரைப்படமான ‘ஆத்ம கவுரவம்’ என்னும் தெலுங்கு படத்துக்கு நந்தி விருது வழங்கப்பட்டது.

அதன் பிறகு, சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து-ன்னு தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி, அன்பே சிவம், ராஜபாட்டை, சிங்கம்-2, உத்தம வில்லன்னு பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

ஐந்து தேசிய விருதுகள், ஆந்திர அரசின் பல விருதுகள், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது என மிகப் பெரிய கவுரங்களைப் பெற்றவர்.

– இப்படி சிம்பிளாகச் சொல்லிவிட்டு, கே.விஸ்வநாத் அவர்களின் திரை ஆளுமையை கடந்துவிட முடியாது. சொந்த வாழ்க்கையில் பல போராட்டங்களுக்குப் பிறகு தனது 35-வது வயதில்தான் இயக்குநர் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே மாநில விருது. அதன் பின், தெலுங்கு சினிமா படைப்புலகின் ‘குரு’வாக கருதப்படும் அளவுக்கு காலத்தால் அழியாத காவியங்களைக் கொடுத்திருக்கிறார். அவர் தந்த க்ளாசிக் படங்கள், இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் கொண்டாடி பல மாதங்கள் ஓடிய படங்களாகவும் இருந்ததுதான் சிறப்பு.

தான் வாழ்ந்த காலக்கட்டத்தில் தென்னிந்தியாவின் வாழ்வியலைத் தன் படைப்புகளில் பதிவு செய்தவர். அந்தக் காலக்கட்டத்தில் தெலுங்கில் இருந்து அதிக மொழிகளில் ரீமேக், டப் செய்யப்பட்ட படைப்புகளும் இவருடையதுதான். பல படங்களில் நாடோடி சமூகத்தைப் பற்றி பேசியிருக்கிறார்.

மனைவியை இழந்த ஒரு சாஸ்திரிய சங்கீதக் கலைஞனுக்கும், பாலியல் தொழிலாளி வயிற்றில் பிறந்து நாட்டியத்தில் சிறந்து விளங்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான குரு – சிஷ்யை உறவை அற்புதமாகச் சொன்னக் காவியம் ‘சங்கராபரணம்’… சாதி, மதம், மொழி, இனம், வர்க்கம் எல்லாவற்றையும் கடந்தது கலை என்று சொல்லப்பட விதம் இன்றளவும் க்ளாஸிக் ரகம்.

இவரது படங்களில் வசனங்களும், கதையில் கையாளும் மனிதர்களின் உளவியலும் மிக முக்கியமானவை. ஸ்வாதி முத்யம் போன்ற பல படைப்புகள் பெண்களின் இதயத்தோடு நம்மிடையே உரையாடியவை என்று சொன்னால் அது மிகை அல்ல. கணவரை இழந்த பெண்ணின் மறுமணத்தைப் பேசிய சிப்பிக்குள் முத்து வெளிவந்த ஆண்டு 1985.

இயக்குநர் கே.விஸ்வநாத்
இயக்குநர் கே.விஸ்வநாத்

சத்யஜித் ரே, மிருணாள் சென் முதல் அடூர் கோபாலகிருஷ்ணன் வரை உலக அரங்கில் இந்திய சினிமாவின் அடையாளங்களாகத் திகழும் படைப்பாளிகள் வரிசையில் நிச்சயம் இவருக்கும் ஓர் இடம் உண்டு. இவரது தனித்துவங்களில் ஒன்று. ஒவ்வொரு படத்திலும் இவரது அசரடிக்கும் க்ளைமாக்ஸ்தான். அதேபோல் ரிப்பீட் ஆடியன்ஸை குறிவைக்கும் மாயவித்தைக்காரரும் கூட.

கமல்ஹாசனுக்குள் இருந்த மகா நடிகனை வெளிக்கொண்டு வந்தவர்களில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திராவுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கமல்ஹாசனுக்குள் பதுங்கியிருந்த ஒரு கிளாஸிக் ஆக்டரை மீட்டு வெளியே கொண்டு வந்ததில் இயக்குநர் கே.விஸ்நாத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

Also Read – சென்னை மவுன்ட் ரோடில் 2K கிட்ஸ் அறிந்திடாத தியேட்டர்கள்!

ஆம், சாகர சங்கமம்… தமிழில் சலங்கை ஒலி மூலமாக அந்த க்ளாஸிக் நடிப்புக் கலைஞன் வெளியே வந்தான். அந்தப் படத்திலேயே அவர் மகத்தான நாட்டியக் கலைஞனாகவே நடித்திருந்தார். அந்தப் படத்தின் இறுதியில் வரும் கைத்தட்டல் காட்சி, கலை தாகத்தில் தவித்து தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவனின் ஏக்கத்தின் உச்சகட்டப் பதிவு.

ஸ்வாதி முத்யம்… தமிழில் சிப்பிக்குள் முத்து மூலம் அப்பாவி இளைஞனாக நடிப்பின் உச்சம் தொட்டிருப்பார் கமல்ஹாசன். ராதிகாவின் நடிப்புக்கும் தீனி போட்ட இந்தப் படம், இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

அதன்பின், இருவரும் நீண்ட காலத்துக்குப் பிறகு இணைந்து, ஆனால் தோல்வியைச் சந்தித்தப் படம் ‘பாசவலை’. காரணம், அந்தப் படத்தில் டிப்பிக்கல் கமலும் இல்லை, டிப்பிக்கல் விஸ்நாத்தும் இல்லை என்று ரசிகர்கள் நினைத்தார்கள்.

அதன்பின்னர், எப்படியாவது விஸ்வநாத் அவர்களை தன்னுடன் நெருக்கமாகவே வைத்திருக்க வேண்டும் என்று கருதி, தனது பல படங்களில் அவரை நடிக்க வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.

தமிழில் இளம் தலைமுறைக்கு இவர் ஒரு குணச்சித்திர நடிகராகவே பெரும்பாலும் அறிமுகமானவர். கமல் – அர்ஜூனின் குருதிப்புனல் படத்தில், ‘துரோகி’ அதிகாரியாக ஏற்று நடித்த கதாபாத்திரம் பயங்கரமான ஒன்று. முகவரி, பகவதி, புதிய கீதை, யாரடி நீ மோகனி, ராஜாபாட்டை, சிங்கம் 2, லிங்கா, உத்தம வில்லன் என பல படங்களில் தோன்றியிருக்கிறார்.

இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவை ஒட்டி பலரும் தங்கள் புகழஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். அவர்களில் இருவருடையதை இங்கே மென்ஷன் பண்ணியே ஆகணும்.

கமல்ஹாசன் புகழஞ்சலிக் குறிப்பில், “வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை கலாதபஸ்வி விஸ்வநாத் நன்கு அறிந்திருந்தார். அவரது படைப்புகள் காலம் கடந்து கொண்டாடப்படும். வாழ்க அவரது கலை… – உங்களின் தீவிர ரசிகன் கமல்ஹாசன்”.

ராதிகாவின் புகழஞ்சலிக் குறிப்பில், “கலைத்துறையிலும், தனித்த சிந்தனையிலும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டார். அவருடைய படைப்புகளில் ஒரு நோக்கம் இருக்கும். புயலுக்கு மத்தியில் ஓர் அமைதி அவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்போதெல்லாம் ஒரு படம் முடிந்தவுடன் திரையில் END என்று போடுவார்கள். அப்படி சலங்கை ஒலி படத்தில் கே.விஸ்வநாத் எப்படி போட்டார் தெரியுமா?

END என்று ஸ்கிரீனில் முதலில் வரும். சில நொடிகளுக்குப் பிறகு, END எழுத்துகளுக்கு மேலே NO என்று வரும். அதன் பிறகு, NO END எழுத்துக்களுக்குக் கீழே FOR ANY ART என்று வரும். யெஸ்… NO END FOR ANY ART… கே.விஸ்வநாத் எப்போதும் தன் படைப்புகளில் வாழ்வார்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top