கோலிவுட் நடிகர்கள் | தமிழ் சினிமா பல விசித்திரங்களைக் கண்டிருக்கிறது. கண்டுகொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எழும் ஒற்றைக் கேள்வி. “நல்லா நடிக்கிறாரு. ஆனா, அவருக்குன்னு தமிழ் சினிமாவில் தனி இடம் இல்லையே. ஏன்?” என்ற அந்தக் கேள்வி தற்போதையச் சூழலில் பொருந்திப்போகும் முக்கியமானவர்களில் மூன்று பேர்: ஜீவா, ஆர்யா, அதர்வா. இவங்க மூணு பேரும் எங்க மிஸ் பண்றாங்க? ஏன் மக்களிடம் மாஸான ஒரு அங்கீகாரம் இவங்களுக்கு கிடைக்கலைன்றதை பத்திதான் இந்த வீடியோ ஸ்டோரில அனலைஸ் பண்ணப் போறோம்.
தமிழ் சினிமா நடிகர்கள்
ஜீவா
அப்பா ஆர்.பி.செளத்ரி வெற்றிகரமான ப்ரோட்யூசர். சூப்பர் குட் ஃபிலிம்ஸ்ன்ற பேனர்ல பல வெற்றிப் படங்களை எடுத்தவர். இந்தப் பின்னணியில இருந்து 2003-ல் என்ட்ரி ஆனாலும், ஜீவா இன்று வரை தமிழ் சினிமாவில் சர்வைவ் பண்றதுக்கு மிக முக்கியக் காரணம், அவரோட திறமை. இதை மறுக்கவே முடியாது.
அவர் நடித்த படங்களில், அவர் திறமையை பறைசாற்றிய வெரைட்டியான படங்களைப் பட்டியலிட்டால் அதில் ராம், டிஷ்யூம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், நீதானே என் பொன் வசந்தம், டேவிட், 83 முதலான படங்களைச் சொல்லலாம்.

இந்தப் படங்கள் எல்லாமே ஜீவாவின் பெர்ஃபார்மன்ஸ் திறமையை வெளிப்படுத்த மட்டும் நல்ல வாய்ப்பாக இல்லாமல், மக்களிடம் தன் இருப்பை உறுதி செய்யவும் துணையாக இருந்தன. ஆனால், இவர் நடித்த மற்ற பெரும்பாலான படங்கள், இந்தச் சின்னப் பட்டியலுக்கு நேர்மாறா இருந்ததுதான் இவருக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
கச்சேரி ஆரம்பம், ரெளத்திரம், வந்தான் வென்றான், யான், போக்கிரி ராஜா, திருநாள், சங்கிலி புங்கிலி கதவை திற, சீறுன்னு போகும் இந்த பயங்கரமான பட்டியல் ‘வரலாறு முக்கியம்’ வரை நீளுது. ஐசியுல இருக்கிற பேஷன்ட்டுக்கு லைஃப் சப்போர்ட் உதவுற மாதிரி, இடையில் அவ்வப்போது மிகச் சில படங்கள் மட்டுமே ஜீவா, இந்த தமிழ் சினிமாவில் ஜீவிக்க துணைபுரிகிறது என்று சொன்னால், அது மிகை இல்லை.
நல்ல திறமை இருக்கிறது, எந்தக் கதாபாத்திரம் என்றாலும் கச்சிதமாக பெர்ஃபார்ம் பண்ணக் கூடிய அனுபவம் இருக்கிறது. ஆனாலும், ‘ஜீவா நடிச்சிருக்கார். நம்பிப் போகலாம்’ என்கிற அளவுக்கு வெகுஜன சினிமா ரசிகர்கள் மனதில் ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்த முடியாமல் போகிறது. இதற்குப் பின்னால் மூன்று காரணங்களை அடுக்கலாம். அதைக் கடைசியில் பார்ப்போம்.
ஆர்யா
அடுத்து, ‘அறிந்தும் அறியாமலும்’ படம் மூலமாக 2005-ல் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஆர்யா. எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியான ஹிரோ கிடைத்துவிட்டதைக் கண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் வாரியெடுத்துக் கொண்டனர். ஆனால், இன்றைக்கு அவருக்கான இடம் இங்கே எது என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.
ஆர்யாவோட ஃபிலிமோகிராஃபி நீண்டாதாக இருந்தாலும், அதை உற்றுநோக்கும்போது உள்ளம் கேட்குமே, பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, அவன் இவன், ராஜா ராணி, மகாமுனி, சார்பட்டா பரம்பரை-ன்னு ஏதோ ஒரு வகையில் இவர் பேர் சொல்லும் படங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை.
சிக்கு புக்கு, ஆரம்பம், பெங்களூரு நாட்கள், கஜினிகாந்த், எனிமி, கேப்டன் என இவரது ஃபிலிமோகிராஃபி பட்டியலிலும் தேவையில்லாத ஆணிகள் ஏராளம். ஆனாலும் மதராசப்படினம், ராஜா ராணி, சார்ப்பட்டா பரம்பரை போன்ற படங்கள் அந்தந்த காலக்கட்டத்தில் இவரை தூக்கி நிறுத்தியிருப்பதை கவனிக்க முடிகிறது.
தில் ராஜு பாணியிலை சொல்லணும்னா…
ரொமான்ஸ் வேணுமா… ரொமான்ஸ் இருக்கு.
ஆக்ஷன் வெணுமா… ஆக்ஷன் இருக்கு.
பெர்ஃபார்மன்ஸ் வேணுமா… பெர்ஃபார்மன்ஸ் இருக்கு.
காமெடி வேணுமா… காமெடி இருக்கு.

இப்படி எல்லாமே இருக்கு. ஆனாலும், தமிழ் சினிமாவில் மாஸான ஓர் இடம் ஆர்யாவுக்கு இல்லையே ஏன்? அதுக்கும் அதே மூன்று காரணங்கள் உள்ளன. அதையும் கடைசியில் பார்ப்போம்.
அதர்வா
மறைந்த நடிகர் முரளியின் மகன் என்ற பின்புலத்துடன் 2010-ல் பானா காத்தாடி மூலம் அறிமுகமானாலும், இவரும் ஜீவா, ஆர்யா போலவே தனது திறமையால் நிலைத்துக் கொண்டிருப்பவர்தான். பரதேசி, இரும்புக் குதிரை, சண்டி வீரன், இமைக்கா நொடிகள் என தன் மீதான நம்பிக்கையை ஆழமாக விதைக்கும் வகையில் சில படங்கள் மட்டுமே இவருக்கு அமைந்திருக்கிறது.
வாய்ப்பு வருகிறதே என்பதற்காக கண்ணாபின்னாவென படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஆண்டுக்கு இரண்டு மூன்று படங்களுக்கு மிகாமல் நடித்துக் கொண்டிருந்தாலும்கூட, இன்னமும் தமிழ் சினிமாவில் தனக்கென தனிப் பாதையை அமைத்துக்கொள்ளவில்லை. ஆனால், இவருக்கென தனி இடத்தைத் தரும் அளவுக்கு நடிப்பாற்றலில் திறமை மிக்கவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சரி, இப்பொது அந்த மூன்று காரணங்களுக்கு வருவோம். இவர்கள் மூவருக்கும் இந்த மூன்று காரணங்களும் பொதுவாகப் பொருந்தக் கூடியதுதான்.
முதல் காரணம், கன்டென்ட் – கதைத் தெரிவும், கன்சின்டென்சி வெற்றியும். என்னாதான் மாஸ் ஓபனிங் இருந்தாலும், தமிழ் சினிமாவில் தயாரிப்பு தரப்புக்கு லாபம் ஈட்டுவதற்கு ஜெனரல் ஆடியன்ஸின் வரவேற்பு தேவை. அஜித்தின் ‘வலிமை’, விஜய்யின் ‘வாரிசு’ போன்ற படங்கள் எல்லாம் இதைத்தான் அழுத்தமாகச் சொல்கின்றன. மூன்று நாட்களுக்குப் பிறகு அரங்கு நிறைந்தால்தான் ஒரு படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிற சூழலில், அப்படி தொடர்ந்து அரங்கு நிறைவதற்கு கன்டென்ட் – கதை – திரைக்கதை மிகவும் முக்கியமாகிறது. இதற்கு விக்ரம், பொன்னியின் செல்வன் 1, திருச்சிற்றம்பலம், லவ் டுடே போன்ற படங்கள் சமீபத்திய உதாரணங்களாக நம் கண்முன்னே நிற்கின்றன.
ஆக, கன்டென்ட்டை தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை என்பது தெளிவு. கூடவே, வெற்றி விகிதம் என்பது குறைந்தபட்சம் 2:1 ஆக இருக்க வேண்டும். ஒரு படம் ஊற்றிக்கொண்டால் கூட, இரண்டு படங்கள் வெற்றிப் படங்களாக அமைய வேண்டும். இதற்கும் கன்டென்ட்தான் துணைபுரியும்.

இரண்டாவது ‘பிராண்ட்’. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களின் பெயர்களே ஒரு பிராண்டாக நிறுவப்பட வேண்டும். அப்போதுதான் ‘மாஸ்’ ஸ்டாராக வலம் வர முடியும். இதற்கு உதாரணமாக, சிவகார்த்திகேயனை சொல்லலாம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரையில் மாஸ் ஹீரோவாக உயர்ந்து நிற்கும் அவரது திரைப் பயணம் வியக்கத்தக்கது. அதேநேரத்தில், அவர் பின்பற்றிய உத்திகளும் மிக முக்கியம்.
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு பிராண்டாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். அது எந்த மாதிரியான பிராண்டிங்?
ஒருபக்கம் சிவகார்த்திகேயனின் ஃபேன் பேஸ் வலுவானது. மற்றொரு பக்கம், ‘சிவகார்த்தியேன் படமா, பசங்களோட – குடும்பத்தோட தியேட்டருக்கு போய் ஜாலியா ரசிச்சுட்டு வரலாம்’ என்ற மனநிலையை வெகுஜனம் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறார்.
இதேபோல், ‘தனுஷ் நடிக்கும் படமா, ஏதோ ஒரு வகையில் நம்மை எங்கேஜ் செய்யும்’ என்ற நம்பிக்கையை அவரது படங்கள் தருகின்றன.
இந்த மாதிரி எந்த ஏரியாவிலும் எவ்வித நம்பிக்கையையும் அழுத்தமாக ஏற்படுத்தாததுதான் இந்த மூவரின் மிகப் பெரிய மைனஸ்.
இந்த இடத்தில் 80ஸ், 90ஸ் நிலையுடன் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போம். அப்போது ரஜினியும் கமலும்தான் உச்ச நட்சத்திரங்கள். அதற்கு அடுத்த மாஸ் நடிகர்கள் பட்டியலில் விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ் முதலானோர் டீஃபால்டாக இடம்பெற்றனர்.
விஜயகாந்த் ஆக்ஷன், பிரபு – கார்த்திக் ரொமான்ஸ், காமெடி, சத்யராஜ், – மிக்ஸட் வெரைட்டி என இவர்களெல்லாம் ஒரு பிராண்டாகவே எஸ்டாபிளிஷ் ஆனார்கள். அவர்களுக்காகவே அரங்குகள் நிரம்பின.
இதெல்லாம்தான் ஜீவா, ஆர்யா, அதர்வாவிடம் மிஸ்ஸிங்.
Also Reading – விக்ரமைவிட உக்ரமா இருக்கும்.. தளபதி 67 அலப்பறைகள்!
ராம், கற்றது தமிழ், ஈ முதலான படங்கள் தந்த பாதை, ஜீவாவுக்கு கனக்கச்சிதமாக இருந்தன. ஆனால், அவரோ ‘மக்களை சிரிக்க வைத்தால்தான் ஹிட்டடிக்க முடியும். அதுதான் நமக்கான இடத்தைத் தரும்’ என்று தவறான நம்பிக்கையுடன் காமெடி பாதையில் தொடர்ச்சியாக பயணிக்கத் தொடங்கியதன் விளைவை ஜீவா இப்போது உணரக் கூடும்.
ஆக, பிராண்ட் ஒன்றை கட்டமைப்பது இங்கே அவசியமாகிறது. அப்படி ஒரு பிராண்டை கட்டமைத்துக் கொண்டாலும், ஒரே ஏரியாவில் சுழன்று கொண்டிருக்காமல் கேப் கிடைக்கும்போதெல்லாம் வெகுஜன மக்களிடம் ட்ரெண்டுக்கு ஏற்றபடி எடுபடும் படங்களையும், இன்னொரு பக்கம் சீரியஸான சினிமாவில் தடத்தைப் பதிவு செய்யக் கூடிய படைப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தனுஷ் ஒரு பக்கம் ‘அசுரன்’ மாதிரியான படங்களையும், இன்னொரு பக்கம் ‘திருச்சிற்றம்பலம்’ மாதிரியான படங்களைச் செய்வதும் இந்த உத்திதான்.
மூன்றாவது முக்கியக் காரணம். ரசிகர் படை. இது டிஜிட்டல் யுகமாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் களத்தில் ரசிகர்கள் ஒருங்கிணைக்கப்படுவதுதான் நட்சத்திரங்களுக்கு மிகப் பெரிய பலம். இதற்கும் சிவகார்த்திகேயன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. பலரும் மெட்ரோ சிட்டியில் பல்ஸ் பார்த்துக் கொண்டிருக்க, இவர் தனக்கான ரசிகர் பலத்தை கிராமப்புறங்களிலும், சிறு – குறு நகரங்களிலும் கட்டமைத்தார். இதன் காரணமாக, பொதுமக்களின் பார்வைக்கு எப்போதும் படுகின்ற நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
அதேவேளையில், டிஜிட்டலில் ஆர்கனைஸ்டாகவும் அன் ஆர்கனைஸ்டாகவும் ஒரு மிகப் பெரிய சர்க்கிள் உருவாக்கப்படுவதும் இன்றைய காலக்கட்டத்தில் அவசியமாகிறது. ஒரு நட்சத்திரத்தின் பிறந்தநாள் அன்று ஹேப்பிபேர்த்டே என்று அவர் பெயருடன் ட்ரெண்ட் ஆகும் அளவிற்காவது டிஜிட்டலில் ஃபேன் பேஸ்டு கட்டமைக்கப்பட்டால்தான் ‘மாஸ்’ ஆக சினிமாவில் நிலைத்துக் கொண்டிருக்க முடியும் என்பதும் தெளிவு.
இந்த விதமான ஃபேன்ஸ் பேஸ் என்பது நடிகர்கள் ஜீவா, ஆர்யா, அதர்வா மூவருக்குமே இல்லை என்பது அன் லக்கி என்றும் சொல்லலாம்.
உங்கள் பார்வையில் இந்த மூவர் போலவே திறமை இருந்தும், நல்ல நடிகர்கள் ஆக இருந்தும் வெகுஜன சினிமாவில் தங்களுக்கான தனி இடத்தைப் பெற முடியாத – இயலாத நடிகர்கள், நடிகைகளின் பட்டியலை கமெண்ட் பண்ணி, அதற்கான காரணத்தையும் அலசுங்களேன்.
c2m48j
Your article helped me a lot, is there any more related content? Thanks!
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.