கமலின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். அதிலும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படங்கள் தனி தினுசு. அவரின் ஹாசன் பிரதர்ஸ் காலத்துப் படங்களில் இருந்தே அப்படித்தான். ’அபூர்வசகோதரர்கள்’… டெக்னிக்கலைப் புகுத்தி குள்ளகமலை வைத்து உயரம் தொட்டார் கமல். ’சத்யா’வில், பொய்யான நிகழ்கால அரசியலை உண்மையாகப் பேசினார். ’தேவர்மகன்’, இன்று வரை தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. ’மகளிர் மட்டும்’, மீ டூ வை அன்றைக்கே பேசியது. உலக சினிமாவின் தரத்துக்கு இணையாக, படம் சொல்லப்பட்ட விதத்திலும் நுட்பத்திலும் அதகள ஆட்டம் போட்டு அசத்திய படம்… குருதிப்புனல்.
தொடக்கம்!

இந்தி வடிவத்தின் இயக்குநர் கோவிந்த் நிஹ்லானி, கமல் மற்றும் பிசி ஸ்ரீராமை ‘த்ரோஹ்கால்’ திரையிடலுக்கு அழைத்தார். இந்தியில் ஓம் பூரி மற்றும் நசிருதீன் ஷா ஆகியோர் நடித்திருந்தனர். கமலும், பிசி ஸ்ரீராமும் படம் பார்த்து உணர்ச்சி மிகுதியால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். பிசி ஶ்ரீராமைப் பார்த்த கமல் இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று சொல்ல, பிசி ஶ்ரீராமும் ஆமோதிக்க ஆரம்பமாகியிருக்கிறது, குருதிப்புனல். இதைப் பல தயாரிப்பாளர்களிடம் கமல் சொல்ல கமர்சியல் விஷயங்கள் இல்லாததால் யாரும் தயாரிக்க முன்வரவில்லை. யோசித்தார், விக்ரமில் வரும் வசனத்தைப் போலவே, ‘…தா பார்த்துக்கலாம்’னு அவரே தயாரித்தார்.
தமிழில் திரைக்கதை மற்றும் வசனத்தை கமல்ஹாசன் எழுதினார். துரோகி, குருதிப்புனல் ஆகிய தலைப்புகள் பேசப்பட்டன. தெலுங்கில் ‘துரோகி’ என்று பெயர் வைக்கப்பட்டது. தமிழில் ‘குருதிப்புனல்’ என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால், சிலர் ‘குருதிப்புனல்’ என்கிற தலைப்பு வேண்டாம் என்றும், ரசிகர்களுக்கு இப்படியான கடுமையான தலைப்பு பிடிக்காமல் போகலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், பிசி ஸ்ரீராம் இந்தத் தலைப்பில் உறுதியாக இருந்தார்.
ஒளிப்பதிவின் ‘நாயகன்’ பிசி ஸ்ரீராம்!
ரயில்வே ஸ்டேஷன் காட்சி, அஜய் ரத்னம் பிடிபடும் காட்சி, தியேட்டரில் ஒருவனைச் சுட்டுக்கொல்லும் இடம், நாசரை விசாரிக்கும் இடம், தீவிரவாத அமைப்பு இருக்கிற இடம், துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், இருட்டு, ஒளி என காட்சிக்குக் காட்சி கவனமாக இருந்து கவனம் ஈர்த்திருப்பார் இயக்குநர் பி.சி.ஸ்ரீராம். குறிப்பாக படம் முழுக்கவே கூல் டோன், வார்ம் டோன், சில காட்சிகளில் ஒரே பிரேமில் கூல், வார்ம் இணைந்து என இரண்டு கலர் டோன்கள் மட்டும் இருக்கும். கூல் டோன் ரகசியத்தையும், வார்ம் டோன் நார்மல் வாழ்க்கையையும் குறிப்பிட்டு இருக்கும். படத்தின் கதையை ஒளி வடிவிலும் கடத்த முடியும் என ஒரு லேயரை சேர்த்து படத்தை இயக்கியிருந்தார், பி.சி.

டால்பி இசை!
இளையராஜாவினால் அனுப்பப்பட்ட மகேஷ் மகாதேவன்தான் ‘குருதிப்புனல்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர். தமிழ் சினிமாவில் முதன்முதலில் டால்பி ஒலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய படம், குறைந்தபட்ச பின்னணி இசை கொண்ட இதில் டால்பி தொழில்நுட்பம் புதிய பரிமாணத்தைக் கொடுத்திருந்தது. அந்த ஒலி அனுபவத்துக்காகவே பலர் திரையரங்குக்கு வந்து படத்தைப் பார்த்தனர். குறிப்பாக நாசர் முகம் திரையில் வரும்போதெல்லாம் மரணத்தின் அறிகுறியைப் போல, சங்கு ஊதுவது போல இருக்கும். இந்த சப்தமே நாசரின் வலுவைப் பார்வையாளனுக்குக் கடத்தியது. இந்த டால்பி இசைக்கு விதை கமல் போட்டது. இதற்காக தன்னுடைய சொந்த செலவில் தேவி தியேட்டரை டால்பி தொழில்நுட்பத்தில் சீரமைத்தார் கமல்.
தனித்துவம்!
1995-ம் ஆண்டு, அக்டோபர் 23ம் தேதி வெளியானது ’குருதிப்புனல்’. தீபாவளியில் வெளியான அதிரிபுதிரி சரவெடி ஆட்டம்பாம். 25 வருடங்களாகிவிட்டன. இன்னமும் குருதிப்புனலுக்கு இணையானதொரு படமும் மேக்கிங்கும் இல்லை என்பது கூட, குருதிப்புனலின் தனித்துவத்துக்கான அடையாளம். ஆங்கிலப் படத்துக்கு இணையான மேக்கிங்கில் அப்போதே வந்தது அந்தப் படம்.

குருதிப்புனல் வெளியான போது எல்லா கமல் படங்களுக்கும் போலவே இதற்கும் நிகழ்ந்தது அப்படியொரு விமர்சனம். அவரின் ’விக்ரம்’, ’குணா’, ’மைக்கேல் மதன காமராஜன்’, ‘அன்பே சிவம்’ முதலான எண்ணற்ற படங்களை முதல் நாள் பார்த்த ரசிகர்கள் போலவே இதையும் பார்த்துவிட்டு, ‘ரொம்ப ஹைலியா பண்ணிருக்காரு’, ‘ஒண்ணுமே புரியலப்பா’ என்றெல்லாம் சொன்னார்கள். பிறகு கமலின் எல்லாப் படங்களையும் போலவே சில வருடங்களில், குருதிப்புனலையும் கொண்டாடத் தொடங்கினார்கள். அந்தக் கொண்டாட்டமும் மரியாதையும் இன்று வரை தொடர்கிறது.
‘நோ’ கமர்ஷியல்!
பிசி ஶ்ரீராம் ஒருமுறை இந்த படத்தைப் பற்றிப் பேசும்போது, “குருதிப்புனல் மராட்டிய மொழியிலேயே கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் இல்லை. அதனால் நாங்களும் அதைச் சேர்க்க விரும்பவில்லை. அதனால் வணிக ரீதியான விஷயங்கள் மிகக் குறைவு. பாடல்கள் இல்லை, அதிக வன்முறை, ஏ சர்டிபிகேட் பெற்ற படம் என படத்துக்கு கமர்சியல் பேக்கேஜ் இல்லாமல் இருந்தது. மொத்தமாக 30 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது. ஷூட்டிங்கிற்கு முன்னரே பல வேலைகள் முறையாகத் திட்டமிடப்பட்டன. அதனால் இந்த வேகத்தில் எடுத்து முடித்தோம். கதையுடனான மேக்கிங்கைப் பொறுத்தவரை எனக்கு அதிகமான திருப்தியைத் தந்த படம்’ என்கிறார்.
அதேபோல ‘நாயகன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘தேவர் மகன்’, ‘சுப சங்கல்பம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசனும், பி.சி.ஸ்ரீராமும் இணைந்து பணிபுரிந்த கடைசித் திரைப்படம் ‘குருதிப்புனல்’.
கமல்-அர்ஜூன்-நாசர் நடிப்புக் கூட்டணி!
‘வீரம்னா என்னன்னு தெரியுமா. பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது’, ‘உன் கண்ணுல பயத்த பார்த்துட்டேன்’ என மாஸான டயலாக்குகள் ஒருபுறம், எல்லாருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டு’ என அசால்ட்டாக வில்லனை எச்சரிக்கும் தருணம், க்ளைமேக்ஸில் ‘என்னைக் கொல்லு மேன். இப்போ பத்ரியும் இல்ல. இனிமே நீதான் எல்லாமே. நீதான் தலைவன். இன்னும் யார் யாரெல்லாம்னு அப்பதான் உன்னால கண்டுபிடிக்கமுடியும். என்னைக் கொல்லு’ என விரக்தியுடன் சொல்லும் இடம் என பல இடங்களில் நடிப்பால் வெளுத்து வாங்கியிருப்பார், கமல். குருதிப்புனல்’ என்ற பெயருக்கேற்ப, சாயமில்லாத அக்மார்க் ரத்தத்தையும், காயத்தையும் உதடு கோணி, கண்கள் வீங்கி முகமே மாறிபோன கொடூரத்தையும் உச்சமாக காட்டியிருந்தார். இன்றும் குருதிப்புனல் படம் என்றால் இந்த காட்சிதான் படக்கென நினைவுக்கு வரும்.

கமலின் ரசிகர் அவர் படத்திலேயே இரண்டாம் கதாநாயகனாக நடித்தால் எப்படியிருக்கும். அதை கச்சிதமாக மீட்டர் பிடித்து நடித்திருந்தார், அர்ஜூன். பஞ்ச் வசனங்கள் இல்லை, பெரிய சண்டைக்காட்சிகள் இல்லை. ஆனாலும் தன் உடல்மொழியால் சீக்ரெட் ஆப்பரேஷன் ஸ்பெஷலிஸ்ட்டாக அசத்தியிருப்பார். அதுவும் தான் அனுப்பிய ஆள் முன்னே அவரைக் காட்டிக் கொடுக்காமல் தான் இறக்கப்போகும் காட்சியிலும் முகபாவனைகளாலும், பார்வையாலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
நாசரின் ஆட்டத்தில் அர்ஜுன் இரையாவார். கொஞ்சம்கொஞ்சமாக கமலின் பிடி நழுவிக்கொண்டே பயமும் கவ்விக்கொண்டிருக்க, அந்த கையாலாகாத நிலையை, அச்சுஅசலாகக் கொண்டு வந்து, நமக்குள்ளும் ஒரு பயத்தை, பீதியை, அடிநெஞ்சில் கலவரத்தை ஏற்படுத்தி விடுவார் நாசர். வில்லன் என்றால் படம் பார்க்கிற நம்மையும் மிரட்ட வேண்டும். அப்படியொரு வில்லனாக நாசரைத் தவிர வேறு யாரும் பண்ணியிருக்கவே முடியாது.

நெக்ஸ்ட் பார்ட் லீட்!
இன்னைக்கு பெரும்பாலான படங்கள் வெளியாக அடுத்த பார்ட் வரப்போகுது என அறிவிக்கும்போதெல்லாம் பக்பக் கென்று இருக்கும். காரணம் அது டீசென்ட்டான பினிஷிங்காக இருக்காது. இதில் கமல் எப்போதுமே வேறு வகை. குருதிப்புனலில் எல்லாம் முடிந்து, இறந்த காவலர்களுக்கு விருது வழங்கியிருப்பர். அப்போது கமலின் பையனும் ராக்கெட் லாஞ்சர் அஜய் ரத்தினத்தின் மகனும் மோதிக்கொள்வார்கள் என்பதில் குருதிப்புனல் முடிந்து, அங்கிருந்து அடுத்த ஆட்டம் தொடங்குவதாக சொல்லப்பட்டிருக்கும். அப்போதே ஸ்கிரீன் பிளேவில் நல்ல டீட்டெய்ல் கொடுத்து லீட் கொடுத்திருந்தார் கமல். கமல் இந்த கதையிலும் மனது வைத்தால் செகண்ட் பார்ட் எடுக்கலாம்.
வரப்போகும் விக்ரம் பார்ட்கள் போல.. குருதிப்புனலும் வரணும்ங்குறது என்னோட விருப்பம். உங்களுக்கு கமல் படங்கள்ல எது பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!
0 Comments