பொதுவாக இரு துருவ நட்சத்திரங்களின் படங்களுக்கும் அவர்களது ரசிகர்களுக்குமிடையே கடுமையான போட்டி இருந்தாலும் இதில் எங்காவது ஒரு இடத்தில் ஒரு துருவம் இன்னொரு துருவத்தைப் பற்றி ஏதாவது ஒரு வார்த்தை பேசினாலே அது இரு தரப்புக்குமே சிலிர்ப்பைத் தந்துவிடும். அஜித்தின் `மங்காத்தா’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் திடீரென விஜய்யின் ‘காவலன்’ பட ‘விண்ணைக் காப்பான் ஒருவன்’ பாடலும் அதைத்தொடர்ந்து விஜய்யின் முகமும் தோன்ற, அஜித் ரசிகர்களே ஆர்ப்பரித்துக் கொண்டாடினார்கள். சமீபத்தில் ‘மாஸ்டர்’ ஆடியோ லாஞ்சில்கூட ‘நண்பர் அஜித்’ என பேசியதும் அந்தப் படத்திலேயே அஜித்தின் ‘காதல் கோட்டை’ படத்தைப் பற்றி விஜய் பேசி நடித்ததும் வைரல் ஆனது. இந்த தலைமுறை நடிகர்கள் இப்படியிருக்க, சென்ற தலைமுறை துருவ நட்சத்திரங்களான ரஜினி – கமல் விஷயத்தில் நடந்தது என்ன?
ரஜினி பொதுவாக தனது ஆரம்ப காலத்திலிருந்தே கமலை விட்டுக்கொடுக்காமல்தான் பேசிவருகிறார். இது அவரது படங்களிலும் தொடரத்தான் செய்தது. ரஜினியின் ஆரம்பகால படமொன்றில் (இந்தப் படத்தின் பெயர் தெரிந்தால் கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்தவும்) ரஜினி, முன்பின் தெரியாத வி.கே.ராமசாமிக்கு போன் செய்து, ஒரு விஷயத்தை சொல்ல, பேசுறது யாரு?’ என வி.கே.ராமசாமி கேட்க, ‘கமலஹாசன்’ என சொல்லி படக்கென போனை வைத்துவிடுவார். அருகிலிருந்த எஸ்.வி.சேகர்,என்னடா திடீர்னு கமலஹாசன் பேரை சொல்லிட்ட’ எனக் கேட்க, `விடுறா.. கமல் என் ப்ரெண்டுதான்.. நான் சொல்லிக்கிறேன்’ என சொல்வார்.
இப்படியாக ரஜினி, ‘முத்து’ படத்தின் ஒரு இடத்தில், ‘அவனை முதல்ல அடி.. பெரிய கமல்ஹாசன்னு நெனப்பு’ என்றும் ‘சிவாஜி’ படத்தில் ‘முகத்தைக் கழுவிட்டு வந்தா சும்மா கமலஹாசன் மாதிரி இருப்பேன்’ என்றும் ‘குசேலன்’ படத்தில் ‘கமலஹாசன் எவ்வளவு பெரிய நடிகர், எவ்வளவு சாதனை பண்ணியிருக்காரு’ என்றும் வசனம் பேசி நடித்திருப்பார். ‘எந்திரன்’ படத்தில் ரஜினியிடம், ‘கமலஹாசன் போன் நம்பர் தெரியுமா’ என்று ஒரு கேரக்டர் கேட்கும். சமீபத்தில் வெளியான அவரது ‘காலா’ படத்தில்கூட ஈஸ்வரிராவ், ‘தேரே மேரே பீச்சு மெயின்’ பாடலையே ரஜினி கேட்டு ஃபீல் பண்ணிக்கொண்டிருந்ததாக குறிப்பிடுவார்.
ரஜினி ரெஃபரென்ஸ்!
இவ்வாறு ரஜினி ஆரம்பகாலம் தொட்டு தற்போதுவரை அவ்வபோது தனது படங்களில் கமலின் ரெஃபரன்ஸ்களை வைத்து வைந்தாலும், கமல் தனது ஒரு படத்தில்கூட ரஜினி ரெஃபரன்ஸை வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் மற்ற சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இருந்துவருகிறது. ஆனால் அதில் உண்மையில்லை. கமலின் ஒரு படத்தில் ரஜினியின் ரெஃபரென்ஸ் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் படம் ‘சட்டம்’. 1983-ல் வெளியான இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியான கமல், குற்றவாளியைத் தேடி ஹோட்டல் ஒன்றில் விசாரணை செய்வார். அப்போது தான் தேடிவந்த குற்றவாளி ஃபோட்டோவைக் காட்டுவதற்கு முன்பு, ரஜினி ஃபோட்டோவைக் காட்டி, ‘இவரை யாருன்னு தெரியுமா?’ எனக் கேட்க, ஹோட்டல் மேனேஜர், ‘சூப்பர் ஸ்டார், ஸ்டைல் மன்னன் ரஜினி’ என சொல்வார். இந்த விஷயம் கமலின் விருப்பமின்றி அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்காது என்பது பச்சைக் குழந்தைக்குக்கூட புரியும்.
ஆக, பஞ்சாயத்து முடிஞ்ச்ச்ச்.. கமல் படத்துல ரஜினி ரெஃபரென்ஸ் இருக்கு.