நிழல்கள் படம் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமான பாரதிராஜாவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் மோகன், சுஹாசினி, ராதா உள்ளிட்டோர் நடித்த கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் இயக்குநராக 1982-ல் அறிமுகமானார்.
கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை 80ஸ் கிட்ஸ் கொண்டாட என்ன காரணம்?
தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு இரண்டு மனைவிகள் கதைகள் பிரபலம். சிவாஜி, ஜெமினி கணேசன் தொடங்கி ரஜினி, கமல் வரை இப்படியான கேரக்டர்களில் நடித்த படங்கள் உண்டு. அதேபோல், நடிகர் மோகன் இரண்டு பேரை மணந்து வாழும் முரளி’ கேரக்டரில் நடித்த படம்தான்கோபுரங்கள் சாய்வதில்லை’.

இயக்குநர் பாரதிராஜாவின் பாசறையில் திரைமொழி கற்றுக்கொண்ட மணிவண்ணன், நிழல்கள்’,அலைகள் ஓய்வதில்லை’ படங்களின் கதை, வசனத்தை எழுதியிருந்தார். காதல் ஓவியம் படத்துக்கு வசனம் எழுதியதோடு, ஆகாய கங்கை படத்துக்கான வசனத்துடன், அதன் திரைக்கதையை இயக்குநர் மனோபாலாவோடு சேர்ந்து எழுதினார். அப்போது, தயாரிப்பாளர் கலைமணி எழுதிய கதையைத் திரைப்படமாக எடுக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வரக் காரணமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. இதை மணிவண்ணனே பல இடங்களில் நினைவுகூர்ந்திருக்கிறார்.
கலைமணி எழுதிய கதைக்குத் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் மணிவண்ணன். மூடுபனி படம் மூலம் அறிமுகமான மோகன் என்ற இளம் ஹீரோ, சுஹாசினி, ராதா ஆகியோருடன் வினு சக்கரவர்த்தி, எஸ்.வி.சேகர் என மிகச்சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டே திரைக்கதையில் வித்தை காட்டியிருப்பார் மணிவண்ணன்.

நகரத்தில் வாழும் ஹீரோ, எதிர்பாராதவிதமாக கிராமத்துப் பெண்ணாண அருக்காணியைத் திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மனதுக்குப் பிடிக்காத அருக்காணியைத் திருமணம் செய்துகொண்டு நகரத்துக்கு வரும் ஹீரோ முரளி, அலுவலக நண்பர்களின் கிண்டல், கேலியால் கூனிக் குறுகிப்போகிறார். விரக்தியில் இருக்கும் ஹீரோ, அலுவலக நிகழ்வு ஒன்றில் ராதாவைச் சந்திக்கிறார். அவரைப் பார்த்ததும் பிடித்துப் போகவே, ராதாவுக்காக பெங்களூர் நகருக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு போகிறார். ராதாவிடம் தனக்குத் திருமணமானதையே மறைத்து, வீடு எடுத்து வாழத் தொடங்குகிறார். அதேநேரம், மனைவி அருக்காணியை பெங்களூர் கூட்டிச் செல்லுவதை ஏதேதோ காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கிறார்.
ஒரு கட்டத்தில் தந்தையின் கண்டிப்பால் மனைவி அருக்காணியை பெங்களூர் கூட்டிச் செல்லும் முரளி, ரயில்வே ஸ்டேஷனில் அவரை தவிக்க விட்டுச் செல்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக ராதாவின் சகோதரர் எஸ்.வி.சேகர், அவரைத் தனது தங்கையின் வீட்டுக்கே அழைத்துச் செல்கிறார். அங்கே கணவர் இன்னொரு பெண்ணோடு சேர்ந்து வாழ்ந்து வருவதைப் பார்த்து அதிர்ந்து போகிறார். அவர் வீட்டிலேயே வேலைக்காரியாக இருக்கும் சூழல். இந்த விவகாரம் ராதாவுக்குத் தெரிந்ததா… மனைவி அருக்காணியோடு ஹீரோ முரளி சேர்ந்தாரா என சீரியஸான சூழலைத் தனக்கே உரிய நகைச்சுவையோடு திரைக்கதையாக்கியதில் வெற்றிபெற்றிருந்தார் இயக்குநர் மணிவண்ணன்.

அருக்காணி கேரக்டரில் பிரத்யேகமான ஹேர்ஸ்டைலோடு அசத்தியிருப்பார் சுஹாசினி. அவரது ஹேர்ஸ்டைல் அன்றைய சூழலில் ரொம்பவே பிரபலம். படத்துக்கு மற்றொரு பலம் பின்னணி இசையும் பாடலும். இளையராஜா இசையில், பூவாடைக்காற்று’ மெலடியும், கணவரை விட்டுக்கொடுக்க மனமில்லாமல், அவரது விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க முடியாத சூழலில் அருக்காணி பாடும்,என் புருஷன்தான்… எனக்கு மட்டும்தான் பாடல்’ எவர்கிரீன் ஹிட். மணிவண்ணனின் முதல் படமான `கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தைக் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். 1982-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி வெளியான படம் வெள்ளிவிழாக் கொண்டாடியது. சுஹாசினியின் நடிப்பு பரவலாகக் கவனம் பெற்றது. இந்த மாபெரும் வெற்றி தமிழ் சினிமாவுக்கு மணிவண்ணன் என்ற இளம் இயக்குநரை அடையாளம் காட்டியது. 80ஸ் கிட்ஸ் கொண்டாடிய இந்தப் படம் வெளியாகி 39 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அதன் திரைமொழியால் காலத்தால் அழியாமல் நிற்கிறது.
கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் எந்த கேரக்டர் உங்க ஃபேவரைட்… காரணம் என்ன? – கமெண்ட்ல சொல்லுங்க..!

சுவாரஸ்யங்கள்
- கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் விளம்பரங்களில் இயக்குநர் மணிவண்ணன் வித்தியாசமான ஒரு ஐடியாவைப் புகுத்தியிருந்தார். படத்தின் நாளிதழ் விளம்பரங்களில் ஒருபுறம் கே.பாக்யராஜ், மறுபுறம் மணிவண்ணன் இருவரும் கையில் கத்தியோடு சண்டைபோடுவது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. `பாரதிராஜா சீடர்களில் சிறந்தவர் யார்? பாக்கியராஜூக்கும் மணிவண்ணனுக்கும் கடும் போட்டி’ என்ற கேப்ஷன் ரசிகர்களைத் தியேட்டருக்குள் இழுத்து வந்தது.
- கோபுரங்கள் சாய்வதில்லை படம் இந்தியில் ரிஷிகபூர், ஃபாரா நாஸ் மற்றும் ராதிகா நடிப்பில் `Naseeb Apna Apna’ என்ற பெயரில்1986-ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது. தமிழில் சுஹாசினி நடித்திருந்த பாத்திரத்தில் ராதிகா கலக்கியிருந்தார். இந்தப் படம் ரிஷிகபூர் கரியரில் முக்கியமான இடத்தைப் பிடித்தது.
0 Comments