பிரதாப் போத்தன் ஒரு டைரக்டரா ஒரு யாத்ராமொழி, சீவலப்பேரி பாண்டி, வெற்றி விழா, மீண்டும் ஒரு காதல் கதைனு பல படங்கள்ல கலக்கியிருப்பாரு… அதேநேரம், நடிகராவும் பிரதாப் போத்தன் மாஸ் பண்ணிருக்காருங்குறதுதான் நிசம். பிரதாப் போத்தனோட யுனீக்கான நடிப்புக்கு நாம எத்தனையோ படங்களை உதாரணமா சொல்ல முடியும். மோசமானவங்கள்லயே முக்கியமானவய்ங்கங்குற மாதிரி அவர் தரமா சம்பவம் பண்ண 3 கேரக்டர்கள் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
அ.தி.மு.க-வுடைய கொள்கைப் பரப்புச் செயலாளரா ஜெயலலிதா இருந்த காலத்துல, மீண்டும் ஒரு காதல் கதை படம் சமயத்தில் வரி விலக்குக்கான அரசின் குழுவில் இடம்பெற்றிருந்த ஜெயலலிதா படத்தைப் பார்க்க வராததற்கான காரணம் குறித்து பிரதாப் போத்தன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்திருந்தார். வீடியோவை முழுசா பாருங்க அவர் என்ன சொல்லிருந்தாருங்கிறதை நானே சொல்றேன்.
* வினோத் – சாமரம்

ஒரு நடிகராக பிரதாப் போத்தன் கரியரில் முக்கியமான வாசலைத் திறந்துவைத்தது மலையாளப் படமான சாமரம். இது ஒரு வகையில் பிரேமம் படத்துக்கெல்லாம் முன்னோடி என்றே கூட சொல்லலாம். காலேஜ் புரஃபஸரைக் காதலிக்குற ஸ்டூடண்ட்தான் நம்ம ஹீரோ வினோத். 1980-களில் கேரள கல்லூரிகள் எப்படி இருக்கும், அதன் அரசியல் எப்படியிருக்கும் என்பதை இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். கல்லூரியில் அடாவடி செய்துகொண்டிருக்கும் வினோத், இந்து டீச்சரைப் பார்த்ததும் மனதைப் பறிகொடுப்பார். ஒரு கட்டத்தில் இந்து டீச்சரிடம் இவர் புரபோஸ் செய்யப் போகையில், அவர் வேறொருவரைத் திருமணம் செய்யப் போவதாகச் சொல்லியதும் மருண்டு அழுதபடியே, என்ன இருந்தாலும் I Love you என்று சொல்லியபடியே செல்லும் சீனில் மனுஷன் மிரட்டியிருப்பார். அதேமாதிரி, ஃபாதரும் தன்னுடைய கிளாஸ் மேட்டுமான நெடுமுடி வேணுவோடு சென்று டீச்சரிடம் தனது காதலைச் சொல்ல செல்லும் காட்சியிலும் உணர்ச்சிகளால் அண்டர் ப்ளே செய்திருப்பார். கல்லூரியில் அத்தனை மாணவர்கள் முன்னிலையில் ஆடைகளைக் களையச் செய்யும் எதிரணியால் அவதிப்படும் காட்சி என பல சீன்களில் நடிப்பில் வேறொரு லெவல் பாய்ஞ்சிருப்பார். இந்தப் படத்துக்காக சிறந்த மலையாள நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருது பிரதாப் போத்தனுக்குக் கிடைத்தது.
* சந்துரு – மூடுபனி

தமிழ் சினிமாவில் சைக்கோ – த்ரில்லர்கள் ஜானரைத் தொடங்கி வைத்த முன்னோடியான படங்களுள் ஒன்று பாலுமகேந்திரா இயக்கிய மூடுபனி. இளையராஜாவின் நூறாவது படமான மூடுபனியில் இடம்பெற்ற ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் சாகாவரம் பெற்ற பாட்டு என்றே சொல்லலாம். மூடுபனி படத்தின் அடிநாதமே இளம் வயதிலேயே உளவியல்ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் பின்னாட்களில் கொலைகாரனாக உருவெடுக்கும் ஒரு இளைஞனாக சந்துரு என்கிற கேரக்டரில் பிரதாப் போத்தன் நடித்திருப்பார். தந்தையின் தவறான சகவாசத்தால் தினம்தினம் துன்புறும் தாயைப் பார்த்து, அதனால் ஏற்படும் பாதிப்பிலேயே வளரும் இளைஞன். ஒரு கட்டத்தில் Prostitutes-ஐக் கடத்திக் கொலை செய்யும் சீரியல் கொலைகாரனாக உருவெடுக்கிறார். தொடர் கொலைகளால் நகரமே பதற்றமாகும் நிலையில், அப்பாவியாக நாட்களைக் கழிப்பார். ஹீரோயின் ஷோபாவைப் பார்த்து, தாயின் பிரதிபலிப்பு இருப்பதாக நினைக்கும் பிரதாப் போத்தன், அவரைக் கடத்தி தனி வீட்டில் அடைத்து வைக்கிறார். குறிப்பிட்ட காலம் தன்னுடன் தங்கியிருந்தால் தன் மீது காதல் வரும் என்று ஆழமாக நம்புவார். தாயின் அன்புக்காக ஏங்குவது, ஷோபாவைப் பார்த்து மருகுவது, சீரியல் கொலை என நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார். கிளைமேக்ஸில் `மாமா….மாமா… அம்மா மாமா…’ என தரையில் ஊர்ந்து வந்து உடைந்து அழும் சீனில் பார்வையாளர்களுக்கு அவர் மீது பரிதாபம் வந்துவிடும்.
* மிஸ்டர் பிரதாப் – வறுமையின் நிறம் சிவப்பு

கமல் – ஸ்ரீதேவி நடிப்பில் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி பேசிய புரட்சிகரமான படம் வறுமையின் நிறம் சிவப்பு. இதில், கமல் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டிருக்கும். ஆனால், நாடக நடிகர், கதாசிரியர், டைரக்டர் ரோலில் வரும் பிரதாப் போத்தன் கேரக்டர், ஹீரோ, ஹீரோயினுக்கு அடுத்ததாக முக்கியமான கேரக்டர். படத்தின் எண்ட் கார்டில் கமல் – ஸ்ரீதேவி பெயர்களுக்கு அடுத்த இடத்தில் பிரதாப் போத்தனின் பெயரைப் போட்டிருப்பார்கள். தனது நாடகத்தின் ஹீரோயினாக நடிக்கும் ஸ்ரீதேவியின் மீது ஒரு தலைக்காதல் கொள்ளும் பிரதாப், அதை பல இடங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லியிருப்பார். ஒரு கட்டத்தில் கமல் இவர்களுக்கு இடையே வந்தவுடன் மனப்புழுக்கத்தில் தவிப்பது, ஹைபிட்சில் கமலைத் திட்டுவது, என பல இடங்களில் இவரது உணர்ச்சிகள் கோபத்தில் கொப்பளிக்கும். பெரும்பாலும் இவர் வரும் காட்சிகளில் கோபம்தான் படுவார், என்றாலும் ஒவ்வொரு சீனிலும் வெரைட்டி காட்டியிருப்பார். திருமணத்துக்கு ஸ்ரீதேவி ஒப்புக்கொண்டவுடன் மகிழ்ச்சியில் திளைக்கும் பிரதாப் போத்தன், அதை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
இதைத் தவிர ’மீண்டும் காதல்’ கப்பி என்கிற கணபதி, பன்னீர்புஷ்பங்கள் ஆசிரியர், சிந்துபைரவியில் சுஹாசினி பின்னால் சுற்றும் ஒருதலைக் காதலர், ராம் பட மனநல மருத்துவர், படிக்காதவன் தனுஷின் அப்பா, பிரியசகி படத்தில் வரும் மாமனார் என எந்த கேரக்டரிலும் இயல்பாகப் பொருந்திப் போகக் கூடிய வல்லமை படைத்தவர் பிரதாப் போத்தன்.
மீண்டும் ஒரு காதல் கதை சமயத்தில் அ.தி.மு.கவுடைய கொ.ப.செவாக இருந்த ஜெயலலிதா, படங்களுக்கான வரி விலக்கு அளிக்கும் குழுவிலும் இருந்திருக்கிறார். அப்போது, அந்தக் குழுவினருக்குப் படத்தைப் போட்டுக் காட்டிய நிகழ்வுக்கு ஜெயலலிதா வரவில்லையாம். அங்கிருந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகா இணை தயாரிப்பாளராக இருந்ததால், ஜெயலலிதா தவிர்த்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு நடிகர் சங்கத்தில் படத்தை ஜெயலலிதாவுக்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். படத்தைப் பார்த்து பிரதாப் போத்தனை வெகுவாகப் பாராட்டிய ஜெயலலிதா, போயஸ் கார்டன் இல்லத்தில் வந்து தன்னை நேரில் சந்திக்கும்படி கூறியிருக்கிறார். அப்படி நேரில் சந்தித்து இரண்டு மணி நேரம் உரையாடியதாகவும், ஜெயலலிதா துன்பமான சூழலில் பூக்கும் ரோஜா போன்றவர் என்று புகழ்ந்திருந்தார் பிரதாப் போத்தன்.
அவரது மறைவு தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவருடைய எந்த கேரக்டர் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
Also Read – கேரளாவின் விஜய் சேதுபதி… மலையாள சினிமாவில் ஜெயித்த ஜோஜு ஜார்ஜ் கதை!
0 Comments