இன்று `ஜகமே தந்திரம்’ படம் சந்தித்துவரும் மோசமான விமர்சனங்களுக்கு முழுமுதற் காரணமே படத்தின் திரைக்கதையும் ஜானர் குழப்பமும்தான். இந்தப் படத்தை ஒரு லைட்டர்வே கேங்க்ஸ்டர் படமாக கொண்டு செல்வதா அல்லது ஒரு எமோஷனல் ஈழ அரசியல் படமாக கொண்டுசெல்வதா என திரைக்கதை எழுதும்போது இருந்த குழப்பம் அப்படியே திரையில் பளிச்சென தெரிவதுதான் படம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையே.
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ என திரைக்கதையில் மேஜிக் காட்டிய கார்த்திக் சுப்புராஜூக்கு இந்தமுறை ஏனோ அது கை வரவில்லை. மதுரையிலிருந்து ஒரு ரவுடியை லண்டன் டான் அழைக்கிறான் என கதை இருக்கக்கூடாதா..? இருக்கலாம். ஆனால், அதற்கு ஐடி அப்ரைசல் மீட்டிங் ரூட்டைத் தேர்ந்தெடுத்ததில்தான் சறுக்கத் தொடங்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். தனுஷின் அறிமுகத்திற்குப் பிறகு ரன்வேக்கு வந்த திரைக்கதை, அவர் லண்டனுக்கு வந்தபிறகு டேக் ஆஃப் ஆகியிருக்கவேண்டாமா, அங்கிருந்து தனுஷ் மனம் திருந்தும்வரை, அதாவது படத்தின் கடைசி அரை மணி நேரத்துக்கு முன்புவரை அனைவரும் சவசவவென பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே தள்ளாடும் திரைக்கதையில் அடுத்தடுத்து யூகிக்ககூடிய காட்சிகளும் திருப்பங்களும் டெம்ப்ளேட் மாறாமல் வரிசைகட்டியது ஆடியன்ஸுக்கு எளிதில் அயர்ச்சியைத் தந்துவிட்டது.
கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படங்களில் குவைண்டின் டொரொண்டினோவின் பாதிப்பு என்பது அளவோடுத்தான் இருக்கும். ஆனால், இந்த முறை அளவு கடந்துபோய்விட்டது, அதுவே படத்திற்கு வினையாகவும் ஆகிவிட்டது. வெகு நீளமான ஒரு சிங்கிள் ஷாட்டில் சுவாரஸ்யமான உரையாடல் என்பது குவைண்டின் டொரொண்டினா ஸ்டைல். அவரது படங்களில் இந்த ஷாட்களைப் பார்க்கும்போது அது சிங்கிள் டேக் ஷாட் என்றோ, எப்படி அதை எடுத்திருப்பார்கள் என்றோ உங்களை யோசிக்கச்செய்யாமல் அழகாக நகர்ந்துபோகும். ஆனால், கார்த்திக் சுப்புராஜோ குவைண்டின் டொரொண்டினோ ஸ்டைலில் வைத்த ஷாட்களின் தொடக்கத்திலேயே இது சிங்கிள் டேக் ஷாட் போல என யூகிக்கும் அளவுக்குத்தான் பேஸிக் ஷாட் பிளானிங்காக இருந்தது. இதுபோன்ற சிங்கிள் டேக் காட்சிகள் படத்தில் அளவுக்கு அதிகமாக வேறு இருந்ததால் அவற்றை டிரிம் செய்யவும்கூடமுடியாமல் திணறியிருக்கிறார் எடிட்டர். ஏற்கெனவே வீக்காக இருக்கும் திரைக்கதையில் இதுபோன்ற நீளமான காட்சிகள் படத்தை ஆமைவேகத்தில் நகரச்செய்துவிட்டது.
முழுக்க முழுக்க லண்டனின் கதைக்களம் என்றாகியிருக்கும் படத்தில் எப்படி எப்படியெல்லாமோ லண்டன் விஷூவல்களைக் காட்டி ஆடியன்ஸுக்கு விருந்து படைத்திருக்கமுடியும் என்ற ஆப்ஷன் இருந்தபோதிலும் ஏனோ டார்ஜிலிங்கில் வைத்து செட் போட்டதுபோலவே, வீடு, பார், மைதானம், ஆள் இல்லாத தெரு என மிக வசதியான, குறுகலான லொக்கோசன்களைத் தேர்ந்தெடுத்து படம் தரவேண்டிய பிரம்மாண்ட உணர்வை காலி செய்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ்.
‘ஜிகர்தண்டா’ படத்தில் அசால்ட் சேதுவாக வரும் பாபி சிம்ஹாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அவ்வளவு வொர்த்தான பில்டப்புகள் செய்து மாஸ் காட்டியிருப்பார் கார்த்திக் சுப்புராஜ். அதனாலேயே அந்த கேரக்டரில் சாஃப்ட் லுக்கான பாபி சிம்ஹா நடித்திருந்தபோதிலும் அதன் அனலை நம்மால் உணரமுடிந்தது. ஆனால், அதே கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தில், பிரதான வில்லனாக வரும் ஜேம்ஸ் காஸ்மோவை ஹை ஸ்பீடில் அறிமுகப்படுத்தி, அவரைப் பார்த்ததும் நான்கு கருப்பின இளைஞர்கள் ஓடுவதுபோல காட்டிவிட்டாலே அவர்மீது பயம் வந்துவிடும் என நினைத்தது ஆச்சர்யம்தான்.
பிரதான கதாப்பாத்திரங்கள் மட்டுமல்லாது, மற்ற குட்டி குட்டி கேரக்டர்களுக்கும் தன்னுடைய எழுத்தின் மூலம் வீரியம் கூட்டுவதிலும் அதற்கேற்ற கேஸ்டிங் செய்வதிலும் திறமைசாலி கார்த்திக் சுப்புராஜ். ‘பீட்சா’ படத்தில் வரும் சாமியாராக வரும் வீரசந்தானம், `ஜிகர்தண்டா’ படத்தில் பாபி சிம்ஹா அம்மாவாக வரும் பேரே தெரியாத பாட்டி, ‘இறைவி’ படத்தில் பூஜா தேவரியா என சின்ன சின்ன கேரக்டர்களுக்கும் வலுசேர்த்து அதற்கேற்ற நடிகர்களையும் நடிக்கவைத்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் பிரதான நான்கு கேரக்டர்களைத் தவிர்த்து கலையரசன் தொடங்கி, வடிவுக்கரசி வரை வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். கேஸ்டிங்கிலும் படு அபத்தம். 2009 இலங்கைப் போரின்போது காட்டப்படும் அதே சிறுவன்தான் இப்போதும் அப்படியே வளராமல் இருக்கிறான் என்பதெல்லாம் என்னவென்று சொல்வது..?
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ இந்த இரண்டு படங்களிலும் கார்த்திக் சுப்புராஜூக்கு கை கொடுத்த ட்விஸ்ட் எனும் மேட்டர், அதன்பிறகு அவரது படங்களில் அவை திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துவருகிறது. ஹீரோயின், ஹீரோவை கொலை செய்வதற்காகவே பழகுவதுபோல நடித்தார் என்பதெல்லாம் ‘உதய கீதம்’ காலத்து ட்விஸ்ட் அல்லவா..?
அடிப்படையில் ஒரு கான்மேன் படமான ‘பீட்சா’ படத்தில் எந்த ஆங்கிளிலிருந்து யோசித்தாலும் கணக்கு இடிக்காதவாறு லாஜிக் செய்து அசத்தியிருப்பார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், ‘ஜகமே தந்திரம்’ படத்தில் காட்டப்படும் எந்தவொரு விஷயத்துக்குமே அடிப்படை லாஜிக்கூட பார்க்கப்படவில்லை.