பிரஷாந்த்

விஜய், அஜித்துக்கு முன்னரே ஹிட்களைக் குவித்த பிரசாந்த் சறுக்கியது எங்கே… ஏன்?

ஒரு நடிகனுக்கு உருமாற்றம் என்பது மிக முக்கியம். உருமாற்றம் என்றால் தோற்றத்தில் இல்லை, அந்த நடிகனின் இமேஜில். காலமாற்றங்களுக்கேற்ப தன்னுடைய பலம், பலவீனமறிந்து உருமாற்றம் செய்துகொண்ட நடிகர்கள் எல்லோருமே ஸ்டாராக ஜொலித்திடுவார்கள். இதற்கு ரஜினி முதல் விஜய் சேதுபதி வரை பல உதாரணங்களைச் சொல்லலாம். விஜய், அஜித் அறிமுகமாகும்போதெல்லாம் ஆல்ரெடி ஆல்ரவுண்டராக இருந்த பிரசாந்துக்கு மட்டும் ஏன் இந்த உருமாற்றம் நடக்கவில்லை..? பார்க்கலாம்.

ஒரு நடிகன் தன் கரியரில் மூன்று நிலைகளைக் கடக்கவேண்டும். தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளுதல், தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தல், ஸ்டாராக மாறுதல் என்ற இந்த மூன்று நிலைகளை நீங்கள் எந்த உச்ச நட்சத்திரத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். பிரசாந்துக்கும் இதன் முதல் இரண்டு நிலைகள் சுமூகமாகத்தான் தொடங்கியது. 80-களின் இறுதியில் அங்கிள் வயது நடிகர்கள் காலேஜ் பாய் கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருந்தபோது  1990-ஆம் ஆண்டு வெளிவந்த ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் நிஜ டீன் ஏஜில் ஹீரோவாக அறிமுகமானார் பிரசாந்த்

பிரசாந்த்
பிரசாந்த்

சகல திறமைகளுடனும் பீறிடும் இளமையுடனும் இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு ஹீரோ கிடைத்தால் தமிழ் சினிமா சும்மா விடுமா என்ன..? இரண்டாவது படமே பாலு மகேந்திராவின் ‘வண்ண வண்ண கனவுகள்’, மூன்றாவது படமே அப்போதைய பிரம்மாண்ட இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் ‘செம்பருத்தி’ என அதற்கு முன்புவரை எந்த இளம் ஹீரோவுக்கும் கிடைத்திடாத வகையில் எடுத்த எடுப்பிலேயே பெரிய இயக்குநர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பிரசாந்துக்கு. இவ்வாறு “பிரசாந்த் என்று நானொரு ஹீரோ இருக்கிறேன்” என டோட்டல் தமிழ்நாட்டுக்கும் வெகு எளிதாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் பிரசாந்த். அதன் விளைவாக மறுவருடமே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘திருடா திருடா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் பிரசாந்த்.

இவ்வாறு போய்க்கொண்டிருந்த பிரசாந்தின் கரியரில், அடுத்த சில வருடங்கள் லேசாக டல்லடிக்கத் தொடங்கியது. இந்நிலையில்தான் ஷங்கர் இயக்கத்தில் 1998-இல் வெளியான ‘ஜீன்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இந்தப் படத்தின் வெற்றியும் ரீச்சையும் தொடர்ந்து, தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தல் நிலையை அடைந்தார் பிரசாந்த். தொடர்ந்து, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘ஜோடி’, ‘பார்த்தேன் ரசித்தேன்’ என வரிசையாக ரொமாண்டிக் ஹிட் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார் பிரசாந்த். இதனால் இளம் ரசிகைகளுக்கும் ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் பிரசாந்த்மீது மிகப்பெரிய கிரேஸ் ஏற்பட்டது. இதன்பிறகுதான் பிரசாந்துக்கு வினையே ஆரம்பித்தது. 

இந்த இடைபட்டகாலத்தில் விஜய்யும் அஜித்தும், பிரசாந்தைப்போலவே தொடர்ந்து ரொமாண்டிக் படங்கள் நடித்து இளைஞர்களையும் ஃபேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால், ஒரு பாயிண்டில் அவர்கள் எடுத்த ஒரு முடிவால்தான்  இன்று ‘தல’யாகவும் ‘தளபதி’யாகவும் அவர்களால் கோலோச்ச முடிகிறது. அந்த முடிவை பிரசாந்த் எடுக்கத் தவறியதுதான் அவரது தோல்வி முகத்துக்கு காரணமாக அமைந்தது.

Prashanth

தொடர்ந்து ரொமாண்டிக் படங்களில் நடித்து விஜய்யும் அஜித்தும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட பிறகு, ஒரு கட்டத்தில் ரொமான்ஸை ஓரங்கட்டிவிட்டு எமோஷனல் ஆக்சன் ஹீரோ இமேஜுக்கு தாவ முயற்சித்தார்கள். இதன் முயற்சியாக விஜய், ‘திருமலை’ படம் மூலமாகவும் அஜித் ‘தீனா’ படம் மூலமாகவும் முழு ஆக்சன் ஹீரோக்களாக உருமாறினார்கள்.  நீங்கள் நன்கு கவனித்தீர்களென்றால் விஜய், அஜித்தின் அதற்கடுத்தப் படங்களிலிருந்து, காதல் என்பது மூன்றாவது, நான்காவது லேயரில்தான் இருக்கும். இதன் விளைவு இளைஞர்களின் ஆதர்சமாக இருவரும் ஆனார்கள். 

ஆனால், பிரசாந்தோ, தன்னுடைய பலம் ரொமான்ஸ்தான் என நினைத்து ரொமாண்டிக்குக்கும் சம முக்கியத்துவம் இருக்கும் ஆக்சன் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நடித்த, ‘மஜ்னு’, ‘விரும்புகிறேன்’,’ஜெய்’, ‘ஆயுதம்’, ‘ஜாம்பவான்’, ‘தகப்பன்சாமி’, ‘அடைக்கலம்’ என வரிசையாக ஃப்ளாப் ஆகத் தொடங்கியது. 

பிரசாந்தின் முழு நீள ரொமாண்டிக் படங்களை ரசித்த பெண் ரசிகைகளுக்கும் அவரது இந்த ரொமாண்டிக் கலந்த ஆக்சன் படங்கள் மீது அலர்ஜி ஏற்பட்டது. போதாக்குறைக்கு அப்பாஸ், மாதவன் போன்ற லேட்டஸ்ட் சாக்லேட் பாய்களின் வரவும் அவர்களை மடைமாற்றியது. இதனால் பிரசாந்தின் பலம் குறையத் தொடங்கியது. விளைவு தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் அவரை வைத்து பிஸினெஸ் செய்யத் தயங்கினார்கள். பட வாய்ப்புகள் குறைந்தது. அதே காலகட்டத்தில் அவரது திருமண வாழ்க்கையும் சர்ச்சைக்குள்ளாக இதிலிருந்தெல்லாம் பிரசாந்த் மீண்டு வருவதற்குள் ஒரு புதுசெட் ரசிகர்கள் உருவாகி, அவர்களுக்கெல்லாம் பிரசாந்த் பழைய நடிகராகிப் போனார்.

ஆனால் இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. மீண்டும் அந்த மூன்று நிலைகள்தான். இப்போதைய தன்னுடைய வயதுக்கும் உருவத்துக்குமேற்ற படங்களை தேர்வு செய்து, இந்த கால ரசிகர்களுக்கு தன்னை யாரென்று அடையாளப்படுத்தி, தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தாரென்றால் பிரசாந்தும் நிச்சயம் ஸ்டார்தான். 

Also Read : ஒரிஜினல் சீவலப்பேரி பாண்டி யார்? #27YearsOfSeevalaperiPandi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top