Shaktimaan

90ஸ் கிட்ஸுக்கு `சக்திமான்’ ஏன் ஸ்பெஷல் தெரியுமா?

சக்திமான் டிவி தொடர் 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொடராக இந்தியா முழுவதும் அறியப்படும் தொடர். இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ சக்திமான் தொடரில் முகேஷ் கண்ணா, சக்திமான் மற்றும் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என இரண்டு கேரக்டர்களில் நடித்திருப்பார். உலக அளவில் எல்லா சூப்பர் ஹீரோக்களைப் போலவும் தீமையை அழித்து உலகத்தைக் காப்பவர்தான் சக்திமான் என்றாலும், அவர் குழந்தைகளின் செல்லமான சூப்பர் ஹீரோ. காரணம் தனது முக்கியமான ஆடியன்ஸ் குழந்தைகள்தான் என்பதை வரையறுத்துக் கொண்டு அந்த சீரியல் உருவாக்கப்பட்டதுதான்.

சக்திமான்

தனியார் சேனல்கள் ஆதிக்கம் இந்திய மார்க்கெட்டில் தலைதூக்குவதற்கு முன்பு எல்லாருக்கும் ஃபேவரைட்டான சேனல் டிடி தூர்தர்ஷன் தான். பிராந்திய மொழிகளில் வரும் செய்திகள் தொடங்கி வெள்ளிக்கிழமைதோறும் ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும், வயலும் வாழ்வும் என எல்லா ஏஜ் குரூப்புகளுக்குமான நிகழ்ச்சிகள் அதில் ஃபேமஸ். அந்த வகையில் குழந்தைகளை ரொம்பவே கவர்ந்தது சக்திமான் தொடர். 1997ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தொடங்கி 2005-ம் ஆண்டு மார்ச் 27 வரை கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கும் மேலாக சக்திமான் டாப் கியரில் இருந்தது.

Shaktimaan

சக்திமானின் பாப்புலாரிட்டி எந்த அளவுக்குக் குழந்தைகளிடம் பிரபலம் என்றால், அந்தத் தொடரில் வருவதுபோலவே வலது கையை மேலே தூக்கிக் கொண்டு சுற்றினால் தங்களைக் காப்பாற்ற சக்திமான் நேரில் வருவார் என நினைத்து உயரமான கட்டடங்களில் இருந்து குழந்தைகள் கீழே குதித்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இதனால், சீரியலில் வருவது உண்மையல்ல; வீட்டில் இதை யாரும் முயற்சி செய்யாதீர்கள் என ஹீரோ முகேஷ் கண்ணாவே தோன்றி டிஸ்கிளைமர் சொல்லும் அளவுக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பான தொடரின் எபிசோட்தான் அடுத்த நாள் பள்ளிகளில் குழந்தைகளின் முக்கியமான டிஸ்கஷன் டாபிக்காக இருக்கும். அதிலும், சக்திமானாக வரும் முகேஷ் கண்ணா, தனது ஒரிஜினல் முகத்தை மறைத்துக் கொண்டு தினசரி பத்திரிகை ஒன்றில் போட்டோகிராஃபராக வரும் கங்காதர் கேரக்டரின் முழு பெயரை சரியாகச் சொல்லுபவர்களை கெத்துதான் என சக நண்பர்கள் பாராட்டும் அளவுக்கு அந்தத் தொடரோடு ஒன்றியிருந்தார்கள் 90ஸ் கிட்ஸ். தொடரில் நடித்தது மட்டுமல்லாமல், அதைத் தயாரிக்கவும் செய்திருந்தார் முகேஷ் கண்ணா. பொங்கல், தீபாவளிக்கென புதுத் துணி பர்சேஸில் அப்போது அதிகம் விற்பனையாக டிரெஸ்களில் ஒன்று சக்திமானின் டிரெஸ். பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்களின் பீரோக்களில் நிச்சயம் ஒரு சக்திமானின் டிரெஸ்ஸாவது இருந்திருக்கும்.

Shaktimaan

90ஸ் கிட்ஸ் சக்திமான் தொடரை கொண்டாட பல காரணங்களைச் சொல்லலாம். சூப்பர்ஹீரோ டைப் ஃபேண்டஸியான கதை, சூப்பர் பவர் கொண்ட மெயின் கேரக்டர், அவர் அணிந்திருந்த பிரத்யேக டிரெஸ், முகேஷ் கண்ணாவின் காமெடியுடன் கூடிய நடிப்பு, கங்காதரின் வெகுளித்தனம் என்று பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதேபோல், தனியார் சேனல்கள் ஆதிக்கம் அப்போது இல்லாததும் மற்றொரு முக்கியமான காரணம். இப்போது இருப்பதைப் போல ஃபார்வார்டு பட்டனோ அல்லது ஒரு சீரியஸின் எபிசோடுகளை ஒரே நேரத்தில் ஓடிடியில் பார்க்க முடிவது போன்ற வசதிகளோ அப்போது இல்லை. ஒவ்வொரு எபிசோடையும் ஒரு வாரம் காத்திருந்து பார்க்க வேண்டும். அந்த ஒரு வாரத்துக்கான ஹைப்பையும் எதிர்பார்ப்பையும் ஒரு எபிசோட் தாங்க வேண்டும் என்ற நிலை.

Shaktimaan

இந்தத் தொடருக்கு முன்பாக பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் தொடரில் பீஷ்மராகவே வாழ்ந்திருப்பார் முகேஷ் கண்ணா. அதேபோல், சக்திமானைத் தொடர்ந்து அவர் நடித்த ஆர்யமான் கேரக்டரும் குழந்தைகளிடம் ரொம்பவே பாப்புலர். ஆனால், சக்திமான் அளவுக்கு இந்த கேரக்டர்கள் அவருக்கு ரீச்சைக் கொடுக்கவில்லை. சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், அயர்ன்மேன் என பல சூப்பர் ஹீரோக்களுக்கு முன்னோடி இந்த சக்திமான்தான்.

Also Read – இந்த டெஸ்ட்ல ஜெயிச்சா, நீங்க 90’ஸ் கிட்-தான்…! #Verified

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top